Published:Updated:

நாடாளுமன்றத் தேர்தல்: தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் வெற்றிவாய்ப்பு என்ன? #VikatanInfographics

வருண்.நா

``தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையும், மக்கள் மத்தியில் அ.தி.மு.க. அரசை எதிர்த்து ஸ்டாலின் முன்னெடுக்கும் பிரசார உரைகளும் வலுவாக இருக்கும் பட்சத்தில், தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் வாக்கு சதவிகிதம் கணிசமாக உயரும்"

நாடாளுமன்றத் தேர்தல்: தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் வெற்றிவாய்ப்பு என்ன? #VikatanInfographics
நாடாளுமன்றத் தேர்தல்: தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் வெற்றிவாய்ப்பு என்ன? #VikatanInfographics

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான நாள்களே உள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் கூட்டணியை முடிவு செய்து, தொகுதிப் பங்கீட்டை நிறைவுசெய்து விட்டன. ஒவ்வொரு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களையும் தேர்வு செய்து வருகின்றன., சில கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்தும் வருகின்றன. தேர்தல் பிரசாரக் கூட்டங்களும் நடைபெறும் நேரத்தில் தமிழக அரசியல் களம் பரபரப்பாகி உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால், சென்னையில் உள்ள அனைத்துக் கட்சிகளின் தலைமை அலுவலகங்களும் திருவிழாக் கோலம் பூண்டுள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை, நாடாளுமன்றத் தேர்தலுடன் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்துக் கட்சித் தொண்டர்களும் தேர்தல் வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

பத்திரிகையாளர்கள், கட்சித் தொண்டர்கள், தொலைக்காட்சி சேனல்களின் வாகனங்கள் என அனைத்துக் கட்சி அலுவலகங்களும் களைக்கட்டியுள்ளன. ஜெயலலிதா மறைவுக்குப் பின் களையிழந்து காணப்பட்ட அ.தி.மு.க. தலைமை அலுவலகம், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், அன்றாடம் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் வந்து செல்வதால், பரபரப்பு நிறைந்து கோலாகலமாகக் காட்சியளிக்கிறது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திலும் கரைவேட்டிகளுடன் தொண்டர்கள் நூற்றுக்கணக்கில் வந்து செல்வதால், எப்போதும் பரபரப்பு நிறைந்தே காணப்படுகிறது. அண்ணா அறிவாலயத்தில் மார்ச் 11-ம் தேதி, தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் முன்னிலையில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நேர்காணலை நடத்தினார். 

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட ஒன்பது கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தி.மு.க. 20 தொகுதிகளிலும், காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தலா இரண்டு தொகுதிகளிலும், ம.தி.மு.க., கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியன தலா ஒன்றிலும் போட்டியிடுகின்றன. தி.மு.க. கூட்டணி தொகுதிப் பங்கீடு முடிவடைந்துள்ள நிலையில்,  வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிகிறது. 

கடந்த 2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில்,  காங்கிரஸ் கட்சி தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அந்தத் தேர்தலில் அனைத்து இடங்களிலும் அமோக வெற்றிபெற்றது. அந்தத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி தமிழகத்தில், 14.4% வாக்குகளைப் பெற்றிருந்தது. 2009-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்த காங்கிரஸ் கட்சி, தமிழகத்தில் 15.3% வாக்குகளைப் பெற்றிருந்தது. 2014-ல் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, தமிழகத்தில், பி.ஜே.பி-யைவிட குறைவான வாக்கு சதவிகிதத்தையே பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்தத் தேர்தலில் தமிழகத்தில் பி.ஜே.பி. 5.56% வாக்குகளைப் பெற்றிருந்தது. ஆனால், காங்கிரஸ் கட்சி வெறும் 4.37% வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது. தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் மற்ற முக்கியக் கட்சிகளான ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், வி.சி.க. ஆகிய கட்சிகளும் 2009-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் பெற்றிருந்த வாக்கு சதவிகிதத்தைவிட  2014-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் பெற்ற வாக்கு சதவிகிதம் குறைந்தே இருந்தது.

கடந்த மூன்று நாடாளுமன்றத் தேர்தல்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் கட்சிகளின் வாக்கு வங்கி குறைந்து கொண்டே வந்திருந்தாலும், இந்தத் தேர்தலில் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவே கூறப்படுகிறது. காரணம். ``ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், தமிழகத்தில் ஆட்சியில் உள்ள அ.தி.மு.க. அரசின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். மேலும், பி.ஜே.பி-க்கும் தமிழக மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு இருப்பதாகத் தெரியவில்லை. பா.ம.க-வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்தது, அவ்விரு கட்சித் தொண்டர்களிடமே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையும், மக்கள் மத்தியில் அ.தி.மு.க. அரசை எதிர்த்து ஸ்டாலின் முன்னெடுக்கும் பிரசாரமும் வலுவாக இருக்கும் பட்சத்தில், தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் வாக்கு சதவிகிதம் இந்தத் தேர்தலில் கணிசமாக உயரும்" என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். 

தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் முக்கியக் கட்சிகள், கடந்த மூன்று நாடாளுமன்றத் தேர்தல்களில், தமிழகத்தில் சாதித்தவற்றை கீழுள்ள இன்ஃபோகிராபிக்ஸில் காணலாம்...