Published:Updated:

விஜயகாந்தை ஏன் சந்தித்தார் ராமதாஸ்? - தொகுதி இழுபறியால் கொந்தளித்த ஓ.பி.எஸ். 

கடந்த தேர்தலில் கூட்டணிக்குத் தலைமை வகித்த தே.மு.தி.க, தொகுதிப் பங்கீடு அடிப்படையில் இன்று 4-வது இடத்துக்குச் சென்றுவிட்டது. குறைந்தபட்சம், பா.ம.க-வுக்கு இணையான இடங்களையாவது எங்களுக்கு ஒதுக்கியிருக்க வேண்டும்.

விஜயகாந்தை ஏன் சந்தித்தார் ராமதாஸ்? - தொகுதி இழுபறியால் கொந்தளித்த ஓ.பி.எஸ். 
விஜயகாந்தை ஏன் சந்தித்தார் ராமதாஸ்? - தொகுதி இழுபறியால் கொந்தளித்த ஓ.பி.எஸ். 

தொகுதிப் பங்கீடு, தேர்தல் அறிக்கை, பிரசாரக் குழு ஆகியவற்றுக்குத் தனித்தனியாக அணிகளை அமைத்திருந்தாலும், அ.தி.மு.க-வில் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ` ஒரே தொகுதிகளை இரண்டு கட்சிகள் கேட்பதால் ஏற்படும் குழப்பம் இது. சனிக்கிழமைக்குள் தொகுதி விவரங்களை அறிவித்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் ஓ.பி.எஸ்' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 

சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டுக்கு நேற்று சென்றிருந்தார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ். சந்திப்புக்குப் பிறகு பேட்டி அளித்த ராமதாஸ், ` விஜயகாந்த் உடல்நிலை குறித்து விசாரிக்க வந்தோம். சந்திப்பு நல்லபடியாக முடிந்தது, நல்லபடியாகப் பேசினோம்' என்றார். `தொகுதி ஒதுக்கீடு குறித்துப் பேசவில்லை' என்றும் பதில் அளித்தார் மருத்துவர். அதேநேரத்தில், ` தே.மு.தி.க போட்டியிடும் தொகுதிகளில் பா.ம.க பிரசாரம் மேற்கொள்ளுமா?' என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘நிச்சயமாக’ என ஒற்றை வரியில் பதிலளித்தார் அன்புமணி. இந்த சந்திப்பின் மூலம், ` தே.மு.தி.க - பா.ம.க இடையே நிலவி வந்த கடந்தகால கசப்புகள் முடிவுக்கு வந்துவிட்டன' என பா.ம.க தரப்பில் பேசி வருகின்றனர். 

ராமதாஸ் - விஜயகாந்த் சந்திப்பு பலன் கொடுக்குமா? 

`` அரசியல்ரீதியாக இந்த சந்திப்பைப் பார்க்காமல், விஜயகாந்த் உடல்நலனை விசாரிப்பதற்காக வந்ததாகக் கூறுகிறார் ராமதாஸ். உண்மையில், அ.தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடங்களை உறுதி செய்துவிட்டாலும், எந்தெந்த தொகுதிகள் என்பதை இறுதி வரையறை செய்ய முடியவில்லை. ஒரே தொகுதியை 2 கட்சிகளும் கேட்பதால் வரக்கூடிய பிரச்னைகள் அவை. இவற்றைக் களைவதற்குக் கடுமையாக முயற்சி செய்து வருகின்றனர் கொங்கு மண்டல அமைச்சர்கள். அதன் ஒருகட்டமாகத்தான் விஜயகாந்தை சந்திக்கச் சென்றார் ராமதாஸ்" என விவரித்த அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர்,

`` சேலம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி ஆகிய 3 தொகுதிகளில்தான் அதிகப்படியான பிரச்னைகள் ஏற்பட்டிருக்கின்றன. இந்தத் தொகுதிகளில் உடன்பாடு எட்டப்படாமல் இருக்கிறது. அதேசமயம், மத்திய சென்னை, வடசென்னை, நீலகிரி உள்ளிட்ட தொகுதிகளுக்கு பெரிதாக எந்தப் போட்டியும் இல்லை. இந்தத் தொகுதிகளை வலிந்து கொடுத்தாலும் எடுத்துக் கொள்வதற்கு பா.ம.க-வும் தே.மு.தி.க-வும் தயாராக இல்லை. ` 4 சீட்டுகளில் வென்றால், மத்தியில் கேபினட் கிடைக்கும்' என்பதால், ` தே.மு.தி.க வாக்குகளையும் விட்டுவிடக் கூடாது' என்பதால்தான் விஜயகாந்தை சந்தித்தார் ராமதாஸ். 

பா.ஜ.க-வைப் பொறுத்தவரையில் கோவை, திருப்பூர், ஈரோடு என கொங்கு மண்டல தொகுதிகளைப் பெறுவதில் ஆர்வம் காட்டி வருகிறது. இப்போது ராமநாதபுரம் தொகுதியையும் அவர்கள் கேட்கிறார்கள். `அந்தத் தொகுதியை சிட்டிங் எம்.பி-யான அன்வர் ராஜாவுக்குக் கொடுக்க விரும்புகிறோம்' என பன்னீர்செல்வம் கூறியும், பா.ஜ.க பிடிவாதமாக இருக்கிறது. ` கூட்டணிக்குள் முஸ்லிம் வேட்பாளர் என்ற அடிப்படையில் அவருக்கு ஒதுக்க வேண்டும்' என அ.தி.மு.க தரப்பிலும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. சீட்டுகளை ஒதுக்கியதைவிடவும் தொகுதிகளை வரையறை செய்வதில்தான் பெரும் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. தற்போது தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளுக்கான தொகுதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டதால், சனிக்கிழமை மாலைக்குள் தொகுதிப் பட்டியலை வெளியிட்டுவிட வேண்டும் எனத் தீவிரம் காட்டி வருகிறார் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம். தொகுதிப் பங்கீடுகளில் இழுபறி நீடிப்பதால் கடும் கொந்தளிப்பில் அவர் இருக்கிறார்" என்கின்றனர் விரிவாக. 

தொகுதிப் பங்கீடு சிக்கல் குறித்து தே.மு.தி.க வட்டாரத்தில் விசாரித்தோம். `` கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்வதில் தே.மு.தி.க உறுதியாக உள்ளது. 2014 மக்களவைத் தேர்தலில் கூட்டணிக்குத் தலைமை வகித்தார் விஜயகாந்த். அப்போது, தே.மு.தி.க போட்டியிட்ட தொகுதிகளில் பிரசாரம் செய்யவே ராமதாஸ் வரவில்லை. ஆனாலும், அன்புமணிக்காக தர்மபுரியில் பிரசாரம் செய்தார் விஜயகாந்த். தே.மு.தி.க வாக்குகளும் பா.ம.க-வுக்குச் சென்றன. இப்போது நடந்த இந்தச் சந்திப்பின் மூலம் தே.மு.தி.க வாக்குகள் அனைத்தும் பா.ம.க-வுக்குச் செல்லுமா என்பதைத் தொண்டர்கள்தான் தீர்மானிப்பார்கள். கடந்த தேர்தலில் கூட்டணிக்குத் தலைமை வகித்த தே.மு.தி.க, தொகுதிப் பங்கீடு அடிப்படையில் இன்று 4-வது இடத்துக்குச் சென்றுவிட்டது. குறைந்தபட்சம், பா.ம.க-வுக்கு இணையான இடங்களையாவது எங்களுக்கு ஒதுக்கியிருக்க வேண்டும். அப்படிச் செய்வதற்கு அ.தி.மு.க தவறிவிட்டது. 

தொடக்கத்தில், ` நாங்கள் பா.ஜ.கவுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு வருகிறோம்' என சுதீஷ் கூறியதை அ.தி.மு.கவில் உள்ள சிலர் விரும்பவில்லை. அதனால்தான் இடங்களை உறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டது. அப்போதுகூட, தே.மு.தி.க-வுக்கு ஆதரவாக பா.ம.க நடந்து கொள்ளவில்லை. தங்களுக்குத் தேவையான இடங்களைப் பெற்றுக்கொள்வதில்தான் அவர்கள் முனைப்பு காட்டினார்கள். 2011 தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் வி.சி.க-வுக்கு வாய்ப்பு இருந்தபோதும்கூட, தி.மு.க அணிக்குள் வந்தது. பா.ம.க, வி.சி.க ஆகியவை ஓரணியில் இருந்தன. `நீர் அடித்து நீர் விலகுவதில்லை' எனக் கூறி, மேடையிலேயே திருமாவளவனுக்கு வைத்தியம் பார்த்தார் ராமதாஸ். இந்தக் காட்சிகளால் களத்தில் எந்தவிதமான லாபத்தையும் எடுக்க முடியவில்லை. இதேபோல்தான், இப்போதைய சந்திப்பையும் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. பா.ம.க-வுக்கு தே.மு.தி.க வாக்குகள் பரிமாறப்படுமா என்பதற்கு வாக்கு எண்ணிக்கை நாளில்தான் விடை தெரியும்" என்கின்றனர் தே.மு.தி.க நிர்வாகிகள்.