Published:Updated:

`ராகுல்காந்திக்கு எப்படி அனுமதி கொடுத்தீர்கள்?'- விளக்கம் கேட்கும் கல்வித்துறை

கலிலுல்லா.ச
`ராகுல்காந்திக்கு எப்படி அனுமதி கொடுத்தீர்கள்?'- விளக்கம் கேட்கும் கல்வித்துறை
`ராகுல்காந்திக்கு எப்படி அனுமதி கொடுத்தீர்கள்?'- விளக்கம் கேட்கும் கல்வித்துறை

ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் ராகுல் காந்தி பங்கேற்ற நிகழ்ச்சிக்கு எப்படி அனுமதி கொடுத்தீர்கள் என்று விளக்கம் கேட்டு கல்லூரி கல்வி இணை இயக்குநர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.


அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராகுல் காந்தி, நேற்று முன்தினம் தமிழகம் வந்தார். அப்போது, நாகர்கோவிலில் நடைபெற்ற கூட்டணி கட்சிகளுடனான பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டார். முன்னதாக அவர், சென்னை ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் மாணவிகளுடன் கலந்துரையாடினார். ஏறக்குறைய 3,000 மாணவிகளுடான இந்த உரையாடலில் பல்வேறு கேள்விகள் ராகுலிடம் கேட்கப்பட்டது. `கடினமான கேள்வியைக் கேளுங்கள்' என்று நிபந்தனை விதித்த ராகுல், மாணவிகளின் கேள்விகளுக்கு சளிக்காமல் பதிலளித்தார்.

இந்த நிகழ்ச்சியின்போது, மாணவி ஒருவரிடம், `என்னை ராகுல் சார்!; என்று கூப்பிடாதீர்கள். மாறாக ராகுல் என்று அழையுங்கள்' என்றார். தொடர்ந்து அந்த மாணவியும், ராகுல் என்று பெயர் சொல்லி அழைத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. ராகுலின் இந்த நிகழ்ச்சி குறித்து தேர்தல் விதிமுறை எதுவும் மீறப்படவில்லை என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்திருந்தார். இந்த நிலையில், கல்லூரிக் கல்வித்துறை சார்பில் நோட்டீஸ் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு எப்படி அனுமதி அளிக்கப்பட்டது என்று கூறி, மண்டல இணை இயக்குநருக்கு, கல்லூரிக் கல்வி இயக்குநர் சாருமதி நோட்டீஸ் அனுப்பி விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.