Published:Updated:

மாடர்ன் உடையில் அசத்தும் பிரியங்கா காந்தி!- விமர்சனத்துக்கு `குட்டு' வைத்தார்

மாடர்ன் உடையில் அசத்தும் பிரியங்கா காந்தி!- விமர்சனத்துக்கு `குட்டு' வைத்தார்
மாடர்ன் உடையில் அசத்தும் பிரியங்கா காந்தி!- விமர்சனத்துக்கு `குட்டு' வைத்தார்

பிரியங்கா காந்தி நேரடி அரசியலில் கால் பதித்ததைத் தொடர்ந்து காங்கிரஸ் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் அவருக்கு ஆதரவளித்து வருகின்றனர். அவரின் மேடைப் பேச்சுகளில் முதிர்ச்சியும் பக்குவமும் தெரிவதாகத் தொண்டர்கள் மெச்சுகின்றனர். நேரடி அரசியலுக்கு வந்த கையோடு சமூக வலைதளங்களிலும் செயல்படத் தொடங்கிவிட்டார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி.

ஆம், கடந்த  பிப்ரவரி 11-ம் தேதி பிரியங்கா தனது ட்விட்டர் கணக்கைத் தொடங்கினார். ஒரு மாதத்துக்கு மேல் அவர் எதுவுமே பதிவிடவில்லை. ஆனாலும் ஆயிரக்கணக்கானோர் அவரைப் பின்தொடர்ந்தார்கள். பின்னர் ஒருநாள் சபர்மதி குறித்துப் பதிவிட்டிருந்தார். வன்முறைக்கு எதிரான மகாத்மா காந்தியின் கருத்து ஒன்றையும் பதிவிட்டிருந்தார்.

புத்த மதத்தில் ஆர்வம் கொண்ட பிரியங்கா காந்தி தியானம், யோகா உள்ளிட்டவற்றில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். விபாசனா என்னும் தலைசிறந்த தியான முறையைக் கையாண்டு வருகிறார். இதனால்தான் அவர் எடுக்கும் முடிவுகளும், அவரின் பேச்சுகளும் முதிர்ச்சியுடன் இருப்பதாக அவரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், பல நாள்கள் கழித்து தனது ட்விட்டர் பக்கத்தின் ப்ரொஃபைல் படத்தை மாற்றியிருக்கிறார் பிரியங்கா. பெரும்பாலும் பாரம்பர்ய ஆடைகளுடன் பொது நிகழ்ச்சிகளில் பங்குபெறும் பிரியங்கா முதன்முறையாக கம்பீரமாக ஜீன்ஸ் அணிந்த புகைப்படத்தை ட்விட்டரில் பதிவேற்றியிருக்கிறார். கறுப்பு நிற மேல்சட்டை, நீல நிற ஜீன்ஸ், ஷூ என கண்ணியமானத் தோற்றத்தில் காட்சியளிக்கிறார் பிரியங்கா. பலர் இதைப் பாராட்டி பதிவிட்டு வந்தாலும் வழக்கம்போல் சிலர் `ஜீன்ஸ் ஆடைக்குப் பதில் சேலை அணியுங்கள். ஆங்கிலத்தை விட்டுவிட்டு இந்தி பேசுங்கள்’’ என கடுமையான விமர்சனங்களை வீசி வருகின்றனர். ஆனால், இந்த விமர்சனங்கள் எதுவுமே உறுதியான எண்ணங்களை உடைய பிரியங்காவை சிறிதும் பாதிக்காது என்பது நிதர்சனம்.

இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் முன்பெல்லாம் தேர்தல் சமயங்களில் பிரசாரத்தின்போது சேலை அணிந்துதான் செல்வார். இதைப் பா.ஜ.க-வினர் பலர் தேர்தல் சமயத்தில் மட்டும் பாரம்பர்ய ஆடைக்குப் பிரியங்கா மாறிவிடுகிறார் என்று சொல்லி விமர்சித்தனர். ஆனால், இம்முறை தேர்தல் சமயத்தில் பொதுத் தளத்தில் இதுபோன்று மாடர்ன் ஆடையில் டிபி மாற்றி விமர்சகர்களுக்கு அறை விட்டிருக்கிறார் பிரியங்கா!