Published:Updated:

பினாமி... இடிஅமீன்... எடப்பாடி! ராமதாஸ் விட்ட ராக்கெட்டுகள்

ராமதாஸ் டைரி குறிப்புகளைப் புரட்டினால், அக்மார்க் காமெடி நிச்சயம். வாய் சவடால்தான் ராமதாஸின் அரசியல் மூலதனம்.

பினாமி... இடிஅமீன்... எடப்பாடி! ராமதாஸ் விட்ட ராக்கெட்டுகள்
பினாமி... இடிஅமீன்... எடப்பாடி! ராமதாஸ் விட்ட ராக்கெட்டுகள்

சீர்மிகு சரித்திரங்களைப் படைத்தது மெரினா சீரணி அரங்கம். அப்படி ஒரு வரலாறு 1989 ஜூலை 16-ம் தேதி அரங்கேறியது. கடற்பரப்பு முழுவதும் மஞ்சள் கொடிகள். வன்னியர் தலைகள். உரையாற்ற ராமதாஸ் வந்து நின்றபோது, திரண்டிருந்த கூட்டம் ஆர்ப்பரித்தது.

''1. எந்தக் காலத்திலும் கட்சியிலும் சங்கத்திலும் பதவி வகிக்க மாட்டேன்.

2. பொதுக் கூட்டங்களுக்குச் சொந்த செலவிலேயே வந்து போவேன்.

3. வாழ்நாளில் எந்தத் தேர்தலிலும் போட்டியிட மாட்டேன். என் கால் செருப்புகூட சட்டமன்றத்துக்குள்ளும் நாடாளுமன்றத்துக்குள்ளும் நுழையாது.

4. எனது வாரிசுகளோ, சந்ததியினரோ கட்சியிலோ, சங்கத்திலோ பொறுப்புக்கு வர மாட்டார்கள்.

5. பிரதமர் பதவி கொடுத்தாலும் சரி. ஸ்விஸ் பேங்கில் 1,000 கோடி ரூபாய் போடுவதாகச் சொன்னாலும் சரி. ராமதாஸ் விலை போகமாட்டான்’’ என்ற ஐந்து வாக்குறுதிகளை வரிசையாக அளித்த ராமதாஸ், ``இது என் தாய்மீது சத்தியம். இதை மீறினால் நடுரோட்டில் நிறுத்தி என்னை சவுக்கால் அடியுங்கள்’’ என்றார்.

``இதையெல்லாம் டைரியில் எழுதி வைத்துக்கொள்ளுங்கள்’’ என அன்றைக்கு முழங்கிய ராமதாஸின் டைரிக் குறிப்புகளைப் புரட்டினால், அக்மார்க் காமெடி நிச்சயம். இந்தச் சத்தியங்கள் செய்யப்பட்டு, 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. சவுக்கும் இல்லை. அடிக்க ஆளும் இல்லை. இந்த வாய்ச்சவடால்தான் ராமதாஸின் அரசியல் மூலதனம்.  

ராமதாஸ் படித்தது மெடிக்கல்... ஆனால், அவருக்குப் பிடித்ததோ பொலிடிக்கல். சாதாரணமாக இருந்த `வன்னியர் சங்க'த்தை கிடுகிடுக்க வைக்கும் போராட்டங்கள் மூலம் விஸ்வரூபம் எடுக்க வைத்தார் ராமதாஸ். ஏ.கே.நடராஜன் நடத்தி வந்த வன்னியர் சமூக நற்பணி மன்றத்தில் ஐக்கியமான ராமதாஸ் வன்னியர்களை ஒருங்கிணைத்தார். `வன்னியர் சங்க’த்துக்கு விதைபோட்டார். `வன்னியர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு’ கேட்டு, ஒரு வார காலம் சாலை மறியல் போராட்டத்துக்கு அறைகூவல் விடுத்தார். அந்தப் போராட்டம் தமிழக அரசியலின் கறுப்புப் பக்கங்கள். வன்முறை, துப்பாக்கிச்சூடு, 21 பேர் உயிரிழப்பு என வட மாவட்டங்களைக் கிடுகிடுக்க வைத்தன. தமிழக அரசியலில் வன்னியர் சங்கத்தை ஒரு பெரும் சக்தியாக அறிமுகப்படுத்தின. கோரிக்கையில் வெற்றிபெற்ற பிறகு, ராமதாஸுக்கு அரசியல் ஆசை துளிர்க்க ஆரம்பித்தது.

வன்னியர் சங்கத்தை `பாட்டாளி மக்கள் கட்சி’யாக ராமதாஸ் மடைமாற்ற முயன்றார். இப்படித்தான் வன்னியர்களைத் திரட்டி, `உழவர் உழைப்பாளர் கட்சி’யை ஆரம்பித்து, 1952 சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 17 இடங்களில் வென்றார் ராமசாமி படையாட்சி. வன்னியர் வாக்கு வங்கியைப் பார்த்து அசந்துபோனது அன்றைக்கு ஆட்சியில் இருந்த காங்கிரஸ். காமராஜர் அழைக்க, உழவர் உழைப்பாளர் கட்சி காங்கிரஸில் கரைந்தது. ராமசாமி படையாட்சி அமைச்சர் ஆனார். இந்த வரலாறு தெரிந்த வன்னியர்கள், அரசியல் பாதைக்கு ரூட் போட்ட ராமதாஸை சந்தேகத்தோடு பார்த்தார்கள். பாட்டாளி மக்கள் கட்சி அவதாரத்துக்கு வன்னியர்களிடையே புகைச்சல் கிளம்பியது. அதை அணைக்கத்தான் ஐந்து சத்தியங்கள் என்கிற தண்ணீரை ஊற்றினார் ராமதாஸ். தாய்மீது செய்யப்பட்ட அந்த சத்தியங்கள் சமாதிக்குப் போயின. அந்தத் தாயின் பேரன் அன்புமணி நாடாளுமன்றத்துக்குப் போனார்.

சமூக நீதி, இட ஒதுக்கீடு, மது, போதைக்கு எதிரான போர் எனப் பா.ம.க-வின் பயணம் கொஞ்சம் கரடு முரடானதுதான். 1989 சட்டசபைத் தேர்தலைப் புறக்கணித்து ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டபோது, ``எல்லா கட்சியுமே சனியன்தான். இன்றைக்கு உள்ள அரசியல் சூழலில் புத்தியுள்ள மக்கள் வாக்குச் சாவடிக்குச் செல்ல மாட்டார்கள்’’ என்றார். அவர்தான் எடப்பாடியைத் தேடிப்போய் கூட்டணி போட்டிருக்கிறார்.

வெட்டிப் பேச்சுகளும் அறிக்கைகளும் விடும் சராசரி அரசியல் கட்சி அல்ல பா.ம.க. பசுமைத் தாயகம், பொங்குதமிழ் அறக்கட்டளை, மது, புகையிலைக்கு எதிராக இயக்கம், சுற்றுச்சூழல் மேம்பாடு எனப் பா.ம.க-வின் பாதை வித்தியாசமானது. சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் எப்படி நடந்துகொள்ள வேண்டும்... பேசுவதற்கு எப்படித் தயாராக வேண்டும்... சட்டமன்ற நடைமுறை என்ன என்பதையெல்லாம் தைலாபுர `பா.ம.க அரசியல் பயிலரங்க’த்தில் (Political Training Centre) பயிற்சி அளிக்கிறார்கள். இப்படியான பயிற்சியை தமிழகத்தில் எந்தக் கட்சியும் கொடுத்ததில்லை. இந்தியாவிலேயே அதிகமுறை பல்டி அடித்த கட்சி என்கிற அவப்பெயரைத் தாங்கி நிற்கும் பா.ம.க பல்டி அரசியலுக்கான பயிலரங்கம் நடத்தாமலேயே பாடம் நடத்திக்கொண்டிருக்கிறது.  

தமிழக அரசியல் தலைவர்களில் ராமதாஸின் அறிக்கைகள் வீரியமானவை. புள்ளிவிவரம், ஆழமாக அலசல், அர்த்தமான வார்த்தைகள் கொண்டவை. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அவர் வெளியிட்ட அறிக்கைகளில் பெரும்பாலும் மத்திய அரசும் மாநில அரசும் ஏகத்துக்கும் வறுபட்டன. ``பெரும்பான்மையை நிரூபிக்காமல் எடப்பாடி அரசு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யக் கூடாது’’ என முன்பு சொன்ன ராமதாஸ்தான், அந்த நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட 2,000 ரூபாய் நிதியுதவியை இப்போது கூட்டணி சேர்ந்த புண்ணியத்துக்காக ஆதரிக்கிறார். ``அரசின் 2,000 ரூபாய் நிதியுதவி அனைவருக்கும் கிடைக்க பா.ம.க-வினர் உதவ வேண்டும்’’ என்கிறார். எதிர்முகாமில் இருந்திருந்தால், ``தேர்தலுக்காக 2,000 ரூபாய் நிதியை அ.தி.மு.க அரசு வழங்குகிறது’’ என வாள் சுழற்றியிருப்பார். ``எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு வாகனங்களை அனுப்பும்படி கல்லூரிகளை மிரட்டுவதா?’’ என அறிக்கைவிட்ட ராமதாஸ்தான், வாகனங்கள் கட்டாயப்படுத்தி அழைத்துவந்து நடத்தப்பட்ட மோடி கூட்டத்தின் மேடையில் அமர்ந்திருந்தார்.

பினாமி... இடிஅமீன்... எடப்பாடி! ராமதாஸ் விட்ட ராக்கெட்டுகள்

ராமதாஸ் அறிக்கைகளில் அதிகம் வறுபட்டது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்தான். ``தடை செய்யப்பட்ட குட்காவை 40 கோடி ரூபாய் கையூட்டு வாங்கிக்கொண்டு விற்பனை செய்ய அனுமதித்த ஊழல் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. விஜயபாஸ்கர் வாங்கிய பணம் அதிகாரப் படிக்கட்டுகளின் உச்சத்தில் இருப்போர்வரை பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது. காமராஜரும் கக்கனும் வீற்றிருந்த அமைச்சர் நாற்காலியில் சி.பி.ஐ விசாரணை வளையத்தில் சிக்கியுள்ள விஜயபாஸ்கர் நீடிப்பது தமிழகத்துக்கே பெரும் அவமானம்’’ என்றார் ராமதாஸ். பிறகு தன்மானத்தை இழந்துவிட்டு, எப்படி விஜயபாஸ்கருடன் பிரசார மேடையில் ராமதாஸ் ஏறி நிற்பார்? குட்கா, பான்பராக், புகையிலை போன்ற போதைப் பொருளுக்கு எதிராக பெரும் போர் நடத்திவிட்டு, போதைக்குத் துணை போகிறவர்களிடமே கூட்டுசேர்ந்தால், அதற்குப் பெயர் என்ன? பா.ம.க-வுக்கு `அரசியல் போதை’ ஏறிவிட்டதா?

இளைய சமுதாயத்தைக் கெடுக்கும் எனச் சொல்லி புகை பிடிக்கும் திரைப்பட சீன்களுக்கு எதிராகப் போராடுகிற ராமதாஸ், ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கும் அ.தி.மு.க-வோடு கூட்டணி சேர்ந்திருக்கிறார். `புகை உடல்நலத்துக்குக் கேடு’ என்று தெரிந்த ராமதாஸுக்கு, `ஊழல் உலகுக்குக் கெடு’ எனக் கண்டறியத் தெரியாதா? 'சர்கார்' படத்தில் விஜய் புகைபிடிக்கும் காட்சிக்கு எதிராக ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், ``ஒருவரின் வாக்கை இன்னொருவர் பதிவு செய்ததை எதிர்த்துப் போராடும் அளவுக்கு அரசியல் பொறுப்புள்ள சர்கார் நாயகனுக்கு, புகை பிடிக்கும் காட்சிகளை வைக்கக் கூடாது என்ற சமூகப் பொறுப்பு இருக்க வேண்டாமா?’’ எனக் கேள்வி எழுப்பினார். ஊழல் குற்றம் சுமத்தப்பட்டவர்களோடு கூட்டணி அமைக்கும் ராமதாஸுக்கு ஏன் சமூக பொறுப்பு இல்லாமல் போனது?

``முருகதாஸும் விஜய்யும் செய்திருப்பது ஒரு விரல் புரட்சி அல்ல... இரு விரல் மோசடித்தனம்’’ என்றால், ராமதாஸ் செய்திருப்பது அதுவரை அவர் செய்த அரசியலுக்கே அயோக்கியத்தனம் அல்லவா? ``அரசியல் பொறுப்பு பேசும் சர்கார் இயக்குநருக்கும் நடிகருக்கும் சமூகப் பொறுப்பு வேண்டாமா?’’ எனக் கேட்கிறார். அது அரசியல்வாதிகளுக்குப் பொருந்தாதா டாக்டர். நிழலுக்குக் கவலைப்பட்ட நீங்கள், நிஜத்துக்கு ஏன் கவலைப்படவில்லை?   

சொத்துவரி உயர்த்தப்பட்டபோது, ``மக்களைச் சுரண்டுவதற்கும் எல்லை இல்லையா?’’ என்று கேட்டு அறிக்கை வாள் சுழற்றிய ராமதாஸ், சுரண்டியவர்களிடமே சரண்டர் ஆகிவிட்டார். சென்னை சிட்லப்பாக்கம் பேரூராட்சியில் மழைநீர் வடிகால் அமைப்பதற்கான ஒப்பந்தம் வழங்கியதில் நடந்த முறைகேடு குறித்து கேள்வி எழுப்பிய குமார், பாலச்சந்திரன் கைது செய்யப்பட்டபோது, ``ஊழலைத் தட்டிக் கேட்டவர்களுக்கு சிறை. தமிழகத்தில் நடப்பது இடி அமீன் ஆட்சியா?’’ என்று கேள்வி எழுப்பினார் ராமதாஸ். உகாண்டா அரசியல்வாதிகள்தான், இடி அமீனை ஒரு சர்வாதிகாரியாக உருமாற்றியவர்கள் என்கிற வரலாறு ராமதாஸுக்குத் தெரியாமல் போனது ஏன்? ``இடி அமீனுக்கு ஏற்பட்ட நிலையை உலகம் அறியும். தமிழகத்து ஊழல்வாதிகளுக்கும் அதே நிலை ஏற்படப்போவது உறுதி’’ என்றவர், இப்போது இடி அமீன்களோடு கைகோத்துக்கொண்டிருக்கிறார்.

இன்னொரு கட்சியின் வரலாற்றை எந்த அரசியல் தலைவரும் எழுதியதில்லை. ராமதாஸ் அ.தி.மு.க-வின் வரலாற்றை `கழகத்தின் கதை’ எனப் புத்தகமாக எழுதினார். ``ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் தொடங்கப்பட்ட அ.தி.மு.க, இன்று ஊழல் சுனாமியாக மாறியிருக்கிறது’’ எனப் புத்தகத்தில் முன்னோட்டம் கொடுத்தார். அந்த சுனாமியில்தான் பா.ம.க கூட்டணிப் படகை இப்போது ஓட்டிக்கொண்டிருக்கிறது. ``ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க இரண்டாக உடைந்ததற்குக் கொள்கை மாறுபாடுகள் அல்ல. பதவிகளைப் பயன்படுத்தி கொள்ளையடிப்பதில் ஏற்பட்ட போட்டிதான் காரணம்’’ எனக் `கழகத்தின் கதை’யில் சொல்லியிருக்கிறார். பதவிகளைப் பிடிப்பதற்காக, ராமதாஸ் இப்போது தடம் மாறியிருப்பதற்கு கூட்டணிக் கொள்கை மாறுபாடுகள்தானே காரணம். ``கொள்கைகளில் தேக்கு மரமாக இருந்தாலும், கூட்டணி நிலைப்பாட்டில் தமிழக நலன் கருதி நாணலாக இருப்பதில் தவறில்லை’’ என்கிறார். ஊழலோடு, குட்காவோடு கூட்டணி போடுவதா தமிழர் நலன்?

முந்தைய ஜெயலலிதா ஆட்சியிலும் எடப்பாடி ஆட்சியிலும் நடந்த ஊழல்களைப் பட்டியல் போட்டு 2015 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் கவர்னரிடம் பா.ம.க புகார் அளித்தது. அந்தப் பட்டியலில் எடப்பாடி பழனிசாமியின் பெயரும் உண்டு. எடப்பாடியை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும். அவர் பதவி விலக வேண்டும் எனச் சொல்லிவிட்டு, அவரிடமே தொகுதி பங்கீட்டைப் பேசி முடித்துவிட்டது பா.ம.க. ``ஓ.பி.எஸ் சொத்துக்குவிப்பு வழக்கைத் தமிழக காவல்துறை விசாரித்தால் நீதி கிடைக்காது’’ என வீராப்பு பேசிவிட்டு அவரிடமே கூட்டணி ஒப்பந்தம் போடுவது எந்த மாதிரியான அரசியல்.

இடஒதுக்கீட்டுக்கான போராட்டத்தில் உயிர்நீத்த பார்ப்பனப்பட்டு ரங்கநாதக் கவுண்டர், சித்தணி ஏழுமலை, முண்டியம்பாக்கம் சிங்காரவேலு, கயத்தூர் முனியன், ஒரத்தூர் ஜெகநாதன் உள்ளிட்டோர் ஆன்மா என்ன சொல்லும்? ``மாற்றம், முன்னேற்றம் அன்புமணி அல்ல; மாற்றம், ஏமாற்றம், சூட்கேஸ் மணி’’ என அ.தி.மு.க - பா.ம.க கூட்டணி குறித்து ஸ்டாலின் கடும் விமர்சனம் வைத்தார். அதற்குப் பதில் அளித்த அன்புமணி, ``தோல்வி பயத்தால் ஸ்டாலின் எங்கள் மீது அவதூறுகளை வீசுகிறார். ஆனால், நாங்கள் அவரை மறுவிமர்சனம் செய்ய மாட்டோம்’’ என்றார். கடுமையான விமர்சனத்துக்கு உடனடியாகக் கடுமையான பதிலடி கொடுக்கும் பா.ம.க, பம்முவது எதற்காக? ஒருவேளை காங்கிரஸ் ஆட்சி மத்தியில் அமைந்தால் அதில் சேர தி.மு.க-வின் தயவு தேவை என்கிற முன்னெச்சரிக்கையா?  

எடப்பாடி ஆட்சி அமைக்கப்பட்ட பிறகு, அவரது ஆட்சியின் அவலங்களைக் கண்டித்து ராமதாஸ் வெளியிட்ட அறிக்கைகளில் சில:

* கருவுற்ற பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தம்: சுகாதார அமைச்சர் விலக வேண்டும்!
* ஓட்டுக்கு ரூ.89 கோடி லஞ்சம்: வழக்கு ரத்து செய்யப்பட்டது நீதிப் படுகொலை!
* உயர் நீதிமன்ற ஆணையை மீறி எட்டு வழிச் சாலைக்கு நிலம் பறிக்கத் துடிப்பதா?
* கஜா புயலால் உறவு, உடைமைகளை இழந்த மக்களுக்கு உணவுகூட வழங்காதது வெட்கக்கேடு!
* தமிழில் தேர்வு நடத்த முடியாவிட்டால் டி.என்.பி.எஸ்.சி-யை இழுத்து மூடுங்கள்!
* சர்க்கரை ஆலைகளைக் கட்டுப்படுத்த பினாமி எடப்பாடி அரசால் முடியாதா?
* ஊழலே உன் பெயர்தான் உயர்கல்வித்துறையா?
* தினமும் ஒரு கோடி இழப்பு: முதல்வருக்காக 450 புதிய பேருந்துகளை முடக்கி வைப்பதா?
* மின்வெட்டைச் சமாளிக்கத் தனியார் மின்சாரம்: பல் இளிக்கும் பினாமி அரசின் பொய்கள்!
* தொழில் அனுமதி வழங்குவதில் தமிழகம் கடைசி இடம்: முதலீட்டாளர் மாநாடு வீண்!

இதற்கெல்லாம் தமிழக மக்கள்தான் பதில் அளிக்க வேண்டும்...