Published:Updated:

பா.ஜ.க-வுக்கு செக்... சந்திரபாபு நாயுடுவுக்கு ஷாக்... - ஆந்திராவில் பவன் கல்யாணின் திடீர் டுவிஸ்ட்

பா.ஜ.க-வுக்கு செக்... சந்திரபாபு நாயுடுவுக்கு ஷாக்... - ஆந்திராவில் பவன் கல்யாணின் திடீர் டுவிஸ்ட்
பா.ஜ.க-வுக்கு செக்... சந்திரபாபு நாயுடுவுக்கு ஷாக்... - ஆந்திராவில் பவன் கல்யாணின் திடீர் டுவிஸ்ட்

பவன் கல்யாண் ஆந்திர மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி. இவரும் ஆந்திர மாநிலத்தின் முன்னணி நடிகர். ஜனசேனா கட்சியை ஆரம்பித்து இந்த முறை தேர்தலில் போட்டியிடவுள்ளார். ஆளும் ஆந்திர அரசுக்கு எதிராகத் தொடர்ந்து கருத்துகள் தெரிவித்து வந்தார். ஆளும் கட்சியை மட்டுமில்லாமல் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியையும் விமர்சிக்கத் தவறவில்லை. அரசியலில் மாற்றம் வேண்டும் என்பதை வலியுறுத்தி பவன் கல்யாண் தனது ஜனசேனா கட்சியின் மூலம் சமீபத்தில் ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அமைந்துள்ள சரித்திரப் புகழ் பெற்ற காட்டன் பரேஜ் பாலத்தின் வழியே பெரும் நடைப்பயணம் ஒன்றை நடத்தினார். இது பரபரப்பாக பேசப்பட்டது.

தற்போது ஆந்திராவில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் நடைபெறவுள்ளது. இதில் பங்குபெறுவதற்காக பவன் கல்யாண் தனது கட்சியைத் தயார்படுத்தி வருகிறார். தெலுங்கு தேசம் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகு ஆந்திராவில் பவன் கல்யாணின் ஜனசேனாவுடன் பா.ஜ.க கூட்டணி அமைக்கவுள்ளது எனப் பேசப்பட்டது. ஆந்திர முதல்வர் வேட்பாளராகப் பவன் கல்யாணை முன்னிறுத்தவும் பா.ஜ.க தயாராக இருந்ததாகக் கூறப்பட்டு வந்தது. இதே கருத்தை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் தெரிவித்து வந்தார். பா.ஜ.க-வின் பி டீம் தான் பவன் என்று வெளிப்படையாகவே விமர்சித்துவந்தார் சந்திரபாபு நாயுடு. இந்த நிலையில், யாரும் எதிர்பாராத திருப்பமாக, மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளார் பவன் கல்யாண்.

பவனும், மாயாவதியும் இன்று லக்னோவில் ஒன்றாக செய்தியாளர்களைச் சந்தித்து கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட்டனர். சட்டசபை மற்றும் மக்களவை என இரு தேர்தல்களிலும் கூட்டணி தொடரும் என இருவரும் அறிவித்தனர். இதன்பின் பேசிய பவன், ``அம்பேத்கரின் கனவுகளை நிறைவேற்ற நாங்கள் ஒன்றுகூடியுள்ளோம். மாயாவதி ஜி பிரதமராக வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்.  நாங்கள் உறுதியாகச் சொல்கிறோம் எங்கள் விருப்பம் வருகின்ற நாள்களில் நிறைவேறும்" என்றார். இதன்பின் பேசிய மாயாவதி, ``மத்தியில் யார் ஆட்சிக்கு வர வேண்டும், யார் பிரதமராக வர வேண்டும் எனத் தீர்மானிக்க உள்ளது உத்தரப் பிரதேசம் மாநிலம். எங்கள் இரண்டு கட்சியும் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கூட்டணி அமைத்துப் போட்டியிடவுள்ளது. பவன் கல்யாண் முதல்வராக வேண்டும். அதுவே எனது ஆசை. ஆந்திராவில் அரசியல் மாற்றம் வேண்டும். புதிய இளம் ரத்தங்கள் அரசியல் களத்துக்கு வர வேண்டும்" என்றார்.

ஆந்திராவைப் பொறுத்தவரை சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி காங்கிரஸின் மெகா கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்கவுள்ளது. இதேபோல் ஜெகன் மோகன் ரெட்டி தனித்து களம் காண்கிறார். இந்த நிலையில்தான் பவன் கல்யாணுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கலாம் என பா.ஜ.க எண்ணியிருந்தது. ஆனால், அதற்கு செக் வைக்கும் விதமாக மாயாவதியுடன் கூட்டணி அறிவித்துவிட்டார் பவன். இந்தக் கூட்டணியில் கம்யூனிஸ்ட் மற்றும் சில உதிரிக் கட்சிகள் சேரவுள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் ஆந்திராவில் தனித்துக் களம் காண வேண்டிய சூழலில் பா.ஜ.க உள்ளது.