Published:Updated:

ஒரே நாடு... ஒரே தேர்தல்! - ஏன்? எதற்கு? எப்படி? - சுப.வீரபாண்டியன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஒரே நாடு... ஒரே தேர்தல்! - ஏன்? எதற்கு? எப்படி? - சுப.வீரபாண்டியன்
ஒரே நாடு... ஒரே தேர்தல்! - ஏன்? எதற்கு? எப்படி? - சுப.வீரபாண்டியன்

ஓவியம்: அரஸ்

பிரீமியம் ஸ்டோரி

ரே நாடு, ஒரே தேர்தல் என்னும் திட்டத்தைப் பிரதமர் மோடி, 2016-ம் ஆண்டே முன்மொழிந்தார். 2017-ல் நிதி ஆயோக் அதற்கான சில திட்ட வடிவங்களைத் தந்தது. 2018-ம் ஆண்டு, சட்ட ஆணையம், அதற்குரிய பல வழிமுறைகளைப் பரிந்துரைத்ததோடு, அரசமைப்புச் சட்டத்தில் சில மாற்றங்களையும் செய்ய வேண்டியிருக்கும் என்ற கருத்தை முன்வைத்தது.

‘மோடி சர்க்கார் 1’-ல் நடைபெற்ற முன்கதைச் சுருக்கம் இது! மாநிலங்களவையில் அப்போது ஆளும் கட்சிக்குப் பெரும்பான்மை இல்லாததால் அந்த வண்டி அதற்குமேல் நகரவில்லை.

இப்போது ‘மோடி சர்க்கார் 2’ தொடங்கிவிட்டது. மக்களவையில் மிகப் பெரிய பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள அவர்களுக்கு, மாநிலங்களவையிலும் பெரும் பான்மை நெருங்கிக்கொண்டுள்ளது. தெலுங்கு தேசக் கட்சியின் புது  வரவான நான்கு பேரையும் சேர்த்து 106 பேர் உள்ளனர். பெரும்பான்மைக்கு இன்னும் 17 உறுப்பினர்கள்தாம் வேண்டும் (வாங்கிவிடுவார்கள்!). எனவே மீண்டும் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ ஒலி கேட்கிறது.

ஒரே நாடு... ஒரே தேர்தல்! - ஏன்? எதற்கு? எப்படி? - சுப.வீரபாண்டியன்

இப்போது ஆட்சிக்கு வந்தவுடனேயே அந்தப் பணியைத் தொடங்கிவிட்டனர். அதற்காகவே, கடந்த 19-ம் தேதி, டெல்லியில் ஓர் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப் பெற்றது. அடுத்த நாள், இரண்டு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில், குடியரசுத் தலைவர் தன் உரையிலும் அதுகுறித்துக் குறிப்பிட்டார். எனினும் ஆளும் கட்சியின் கூட்டணியில் உள்ள சிவசேனா, 19-ம் தேதிக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பதோடு, அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராம், ஜூன் 25-ம் தேதி அதை எதிர்த்துத் தன் கருத்தையும் வெளியிட்டுள்ளார்.

இப்போது நம் முன் இரண்டு வினாக்கள் நிற்கின்றன.

1. ஒரே நேரத்தில் தேர்தல் என்பதன் நோக்கம்/உள்நோக்கம் என்ன?

2. அதை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் யாவை?

நோக்கம்

‘ஓரே நாடு... ஒரே தேர்தல்’ என்னும் திட்டத்துக்கு ஆதரவாக அரசுத் தரப்பிலிருந்து மூன்று காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று, செலவு குறையும் என்பது. இரண்டாவது, அடிக்கடி தேர்தல்கள் வருவதைத் தவிர்ப்பதன் மூலம் ஆளும் கட்சிகள், மக்கள் நலன், நிர்வாகம் போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்தலாம் என்பது. மூன்றாவது, ஐந்தாண்டுக்கு  ஒருமுறை தான் தேர்தல் வரும் என்பதால், மக்கள் கூடுதல் எண்ணிக்கையில் ஆர்வத்துடன் வந்து வாக்களிப்பார்கள் என்பது!

கேட்பதற்கு நன்றாகத்தான் உள்ளது  -  உள்நோக்கத்தைப் புரிந்துகொள்ளாத வரையில்!

ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே வரி, ஒரே தேர்வு என வரிசைகட்டி நிற்கும் எல்லா ‘ஒரே’க்கும் ஒரே பொருள்தான், ஒரே அடிப்படை தான் உண்டு.  ஒரே நாடு, ஒரே பண்பாடு என்னும் பா.ஜ.க-வின் மூல முழக்கம்தான், இவை அனைத்துக்குமான ‘ஒரே’ அடிப்படை.

இந்தியா என்னும் துணைக் கண்டம், பல்வேறு மொழிகள், பல்வேறு பழக்க வழக்கங்கள், பல்வேறு உணவு வகைகள், பல்வேறு மதங்கள் போன்ற பல்வேறு வேறுபாடுகளைக்கொண்ட ஒரு நிலம். இந்த அடிப்படை உண்மையை மறைக்க அல்லது மாற்ற பா.ஜ.க தொடர்ந்து முயல்கிறது. ஒற்றுமைக்கு மாறாக ஒருமையை, ஒரே மாதிரியானத் தன்மையை (uniformity in the place of unity) ஏற்படுத்த விரும்புகிறது. இயற்கைக்கு மாறான இந்தச் செயற்கைத் தன்மைகொண்ட ஒரு நாட்டைத் தன் ஆட்சிக் காலத்தில் உருவாக்கி விட வேண்டும் என்பதே அதன் உள்நோக்கம்.

‘ஒரே’ என்பதுகூட, பலவற்றின் கலவையான ‘ஒரே’ இல்லை. 19-ம் நூற்றாண்டின் இறுதியில், போலந்து நாட்டைச் சேர்ந்த ஜாமென்ஹாப் என்பவர், மேலை, கீழை நாட்டு மொழிகள் பலவற்றிலிருந்தும் வேர்ச் சொற்கள் பலவற்றை எடுத்து ஒன்றுகலந்து, ‘எஸ்பெரெண்டோ’ என்னும் மொழியை உருவாக்கினார். ஓர் உலக மொழியை உருவாக்கிவிட்டால், பல சிக்கல்கள் தீர்ந்து, அனைவரும் ஒற்றுமையாகி விடுவர் என்று அவர் கருதினார். பல நாடுகளில் அம்மொழி பரவவும் செய்தது. எனினும், காலப்போக்கில் அது காணாமல் போயிற்று. என்ன காரணம்? அதில் உயிரும், உணர்ச்சியும் இல்லை என்பது தான். எத்தனை அழகாய்ச் செய்தாலும் இயற்கையின் அழகு செயற்கைக்கு வராது.

ஆனால், இன்று பா.ஜ.க அரசு இப்படி ஒரு பொதுவான பண்பாட்டை ஏற்படுத்தவும் முயல வில்லை. பண்பாடுகள் பலவற்றிலிருந்தும் சில நல்ல கூறுகளை எடுத்து ஒரு புதுப் பண்பாட்டை உருவாக்குவது அதன் நோக்கமில்லை. அப்படிச் செய்தாலும்கூட அது நிலைக்காது. ஆனால், பா.ஜ.க-வின் ஒரே பண்பாடு என்பது வெறும்  இந்துத்துவப் பண்பாடு.  ஒரே மொழி என்றால், அது இந்தி வழியாக சமஸ்கிருதம் - இப்படிப் பிற எல்லாவற்றையும் அழித்துத் தங்களின் மொழியை, தங்களின் பண்பாட்டை நிலைநிறுத்துவதே அவர்களின் உண்மையான நோக்கம்  அதைத் தேர்தல் முறைகளிலும் திணிப்பதற் காகவே இந்த ஒரே நாடு, ஒரே தேர்தல் முழக்கம்! மக்களவை, சட்டமன்றம், உள்ளாட்சி என மூன்றுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் வருமானால், எதற்கு முதன்மை இருக்கும்? எந்தச் சிக்கல் பெரிதாகப் பேசப்படும்? மத்திய ஆட்சிக்கு உட்பட்டவையே மற்றவையெல்லாம் என்பதால், அதற்கான தேர்தலே முதன்மை பெறும். மாநிலச் சிக்கல்களுக்குப் பெரிய இடம் இருக்காது.

கொஞ்சம் கொஞ்சமாக, இந்தத் தேர்தல் முறை யிலிருந்து, அதிபர் தேர்தல் முறைக்குச் சென்று விடலாம். ஒரே தேசிய இனமாக உள்ள, ஒரே மொழி பேசுகின்ற அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அத்தேர்தல் முறை பொருந்தலாம். ஆனால், இந்தியா போன்ற பல்வேறு தேசிய இனங்களைக்கொண்ட நாடுகளுக்கு அதிபர் தேர்தல் முறை ஒரு நாளும் பொருந்தாது.

ஒரு குறிப்பிட்ட மொழி, ஒரு குறிப்பிட்ட இனம், ஒரு குறிப்பிட்ட பண்பாடு ஆகியவை, பிற இன, மொழியினரின்மீது மேலாதிக்கம் செய்வதற்கு  மட்டுமே அது உதவும்.

நடைமுறை

‘ஒரே நாடு... ஒரே தேர்தல்’ என்னும் திட்டத் துக்குப் பின்னால் உள்ள நோக்கத்தை விட்டு விட்டுப் பார்த்தாலும், இதனை நடைமுறைப் படுத்துவதில் ஏராளமான சிக்கல்கள் உள்ளன. 1967-ம் ஆண்டுக்குப் பிறகு, இங்கு தேர்தல்கள் பிரிந்து பிரிந்தே நடந்து வருகின்றன.  இனி அவை அனைத்தையும் ஒன்றாக்க வேண்டுமானால், பல மாநிலங்களில் பல ஆண்டுகள் குடியரசுத் தலைவரின் ஆட்சி நடைபெற வேண்டியிருக்கும். அல்லது, ஐந்து ஆண்டுகளுக்கு மக்களிடம் ஆளும் உரிமை பெற்று ஆட்சிக்கு வந்த கட்சிகள், மேலும் சில ஆண்டுகளுக்கு சட்டத்துக்குப் புறம்பாக, ஆட்சியிலிருக்கும் நிலை ஏற்படும்.

இவை இரண்டுமே, கூட்டாட்சித் தத்துவத் துக்கும், ஜனநாயகத்துக்கும் நேர் எதிரானவை. எடுத்துக்காட்டாக, ராஜஸ்தானில், சென்ற ஆண்டு இறுதியில்தான், சட்டமன்றத் தேர்தல்கள் நிறைவடைந்தன. அங்கே மறுபடியும் இப்போது நடைபெற்ற மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலையும் ஆறே மாதங்களில்  நடத்த வேண்டி வந்திருக்கும். அவ்வாறு இல்லாமல் இனிமேல்தான் அத்தேர்தல் முறை  நடைமுறைக்கு வருகின்றதெனில், 2021-ல் நிறைவடையும் தமிழக அரசின் ஆட்சி 2024 வரையில், அதாவது, அடுத்த மக்களவைத் தேர்தல்வரும் வரையில் தொடரலாம் (நினைத்தாலே கசக்கிறது).

இவையெல்லாவற்றையும் தாண்டி, தேர்தல் களைத் தள்ளிப்போட்டுக்கொண்டே போவது, தேர்தலே இல்லாத சர்வாதிகார அரசை நோக்கியதாகவும் இருக்கலாம். இட்லரின் வாரிசுகள் அப்படியும் சிந்திப்பார்கள்தானே?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு