Published:Updated:

``என் கணவர் மறைவிலிருந்து இன்னும் நான் மீளவில்லை!" - நடிகை ஜெயசுதா

``என் கணவரின் இழப்பிலிருந்து இன்னும் முழுமையா என்னால் மீள முடியலை. அதனாலதான் நடிப்பில் கவனம் செலுத்திட்டிருக்கேன். மத்தபடி அரசியலில் அதிக கவனம் செலுத்த முடிவெடுத்திருக்கேன்.

``என் கணவர் மறைவிலிருந்து இன்னும் நான் மீளவில்லை!" - நடிகை ஜெயசுதா
``என் கணவர் மறைவிலிருந்து இன்னும் நான் மீளவில்லை!" - நடிகை ஜெயசுதா

டிகை ஜெயசுதா, சமீபத்தில் தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து விலகி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். இனி, அரசியலில் அதிக கவனம் செலுத்த முடிவெடுத்திருக்கிறார். இதுகுறித்து அவரிடம் பேசினோம்.

``தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து விலக என்ன காரணம்?"

``ஆந்திராவில் செகந்திராபாத் முக்கியமான தொகுதி. அதில் எதிர்க்கட்சியினரே தொடர்ந்து வெற்றி பெற்றுவந்தாங்க. அந்நிலை மாறி, காங்கிரஸ் கட்சி வெற்றி பெறணும். அதற்குப் பிரபலமான ஒருவரை வேட்பாளரா நிறுத்தணும்னு முடிவெடுத்தார், அப்போதைய முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி. அதன்படி என்னை வலியுறுத்தி, வேட்பாளராக்கினார். நானும் 2009-ம் ஆண்டு நடந்த ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனேன். அந்தச் சூழலில், ஆந்திரா, தெலங்கானா பிரிவினையால் கட்சியில் பிளவு ஏற்பட்டுச்சு. நான் காங்கிரஸ் கட்சியினால்தான் வெற்றி பெற்றேன். எனவே, ராஜசேகர ரெட்டி மறைந்த பிறகு, காங்கிரஸ் கட்சியிலதான் தொடர்ந்து இருந்தேன். சிலரின் தவறான வழிகாட்டுதலால், 2016-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தேன். அதுதான் அரசியல் பயணத்தில் நான் செய்த தவறு. அக்கட்சியில் எனக்கு உரிய பொறுப்பும் அங்கீகாரமும் கிடைக்கலை. அரசியல் ரீதியா அக்கட்சியிலிருந்து என்னால் திருப்திகரமாச் செயல்பட முடியலை. இனியும் அங்க இருப்பது சரிவராதுனு முடிவெடுத்துத்தான், ராஜசேகர ரெட்டியின் வழியில் நடக்கும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தேன். இப்போ என் தாய் கழகத்துல மீண்டும் இணைந்தது போல இருக்கு."

``நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் எண்ணம் இருக்கிறதா?" 

``இங்க தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம்கூட இல்லை. அதனால இப்போ நான் தேர்தலில் நிற்பது சரிவராது. எனவே, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்குப் பிரசாரம் செய்யப்போறேன். `கட்சியில் உங்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படும்'னு எங்க கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி சொல்லியிருக்கார். அடுத்த தேர்தலில் நான் வேட்பாளராக நிற்க வாய்ப்பிருக்கிறது." 

``சினிமாவில் தொடர்ந்து நடிப்பீங்களா?"

``என் கணவரின் இழப்பிலிருந்து இன்னும் முழுமையா என்னால் மீள முடியலை. அதனாலதான் நடிப்பில் கவனம் செலுத்திட்டிருக்கேன். தவிர்க்க முடியாதபடி, நல்ல வாய்ப்புகள் வந்தால் நடிப்பேன். மத்தபடி அரசியலில் அதிக கவனம் செலுத்த முடிவெடுத்திருக்கேன். அதுக்கு என்னைத் தயார்படுத்திக்கிறேன்.இனி சினிமா எனக்கு இரண்டாம் பட்சம்தான். " 

``ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடுவின் செயல்பாடுகள் பற்றி உங்க கருத்து?"

``சில நல்ல விஷயங்களைச் செய்ய அவர் முயற்சி செய்திருக்கிறார். ஆனால், அவை உரிய முறையில் செயல்படுத்தப்படலை. மக்களுக்கும் பலன் கிடைக்கலை. ஆனால், அவர் கட்சியினர் மற்றும் தொழிலதிபர்களுக்குத்தான் பலன் கிடைச்சிருக்கு. இதனால் சந்திரபாபு நாயுடுவின் ஆட்சி மீது மக்கள் அதிருப்தியில் இருக்கிறாங்க." 

``பிரதமர் மோடியின் ஆட்சியைப் பற்றி உங்க கருத்து?"

``அவர் மக்கள் பிரச்னைக்காகப் பேச வேண்டிய நேரத்தில் சரியாப் பேசலை. மக்களின் பிரச்னைகளை அவர் சரியாக உணரலை. அதேசமயம் அவர் பா.ஜ.க-வில் பலமான தலைவராக உருவாகியிருக்கிறார். அதில்தான் அவர் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார்."

``ஆந்திர மாநில தேர்தல் முடிவு எப்படி இருக்கும்னு நினைக்கிறீங்க?"

``எதிர்க்கட்சித் தலைவரா, ஜெகன் மோகன் ரெட்டி சிறப்பாச் செயல்பட்டிருக்கிறார். நடக்க இருக்கும் தேர்தலில், ஜெகன்மோகன் ரெட்டி வெற்றி பெறுவார்னு மக்கள் நம்புறாங்க. நானும் நம்புறேன். அப்படி நடந்தால், அவர் தந்தை வழியில் முதல்வராகச் செயல்படுவார்னு நினைக்கிறேன்."