Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

@மருதுபாண்டியன்.
விஜய் மல்லையா, நீரவ் மோடி, ஜாகிர் நாயக் இந்தியச் சிறைக்கு வருவார்களா?


விஜய் மல்லையா, நீரவ் மோடி ஆகியோருக்காக ‘ஐ.டி.சி கிராண்ட் சோழா, தாஜ், அசோகா என ஸ்டார் ஓட்டல்களில் ஏதாவது ஒன்றைச் சிறையாக மாற்றித்தர முடியுமா?’ என்கிற ரேஞ்சுக்கு இங்கிலாந்து நீதிமன்றம் இந்தியாவைக் கேட்டுக்கொண்டே இருக்கிறது. ஒருவேளை அதைச் செய்துகொடுத்தால், அவர்களிருவரும் இந்தியா வருவார்களாக இருக்கும். ஜாகிர் நாயக், இவர்களோடு ஒட்டமாட்டார். அவரின் கதை வேறுவிதமானது. தீவிரவாத குற்றச்சாட்டுகள் காரணமாக இந்தியாவுக்குள் நுழையாமல் பதுங்கிக்கிடக்கிறார்.

கழுகார் பதில்கள்!

@கே.எஸ்.குமார், விழுப்புரம்.
தங்க தமிழ்ச்செல்வன், டி.டி.வி.தினகரன் இடையே என்ன வேறுபாடு?


கரன்ஸி!

@சுந்தர்ராஜன். எல்.ஆர், மடிப்பாக்கம்.
போகிற போக்கைப் பார்த்தால், தி.மு.க என்பது அ.ம.மு.க ஆகிவிடும் போலிருக்கிறதே?


எல்லா ‘க’ வும் ஒரே ‘க’ தான். மொத்தத்தில் காகா!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கழுகார் பதில்கள்!

@இந்து குமரப்பன், விழுப்புரம்.
இன்றைக்கு நேர்மையான அரசியல்வாதிகள் யார் யார் என்று ஒரு லிஸ்ட் போட்டுத் தரவும்?


லிஸ்ட்டா... துண்டுச் சீட்டில் எழுதும் அளவில் ஒன்றிரண்டு பேர்தான் தேறுவார்கள்.  அவர்களையும்கூடத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். ப்ளீஸ், வெயிட்!

@எம்.செல்வம்.
தமிழகத்தின் எதிர்காலம், ‘நாம் தமிழர்’ மட்டுமே என்கிறேன் நான்...?


நம் தமிழர் மட்டுமே!

@கு.ப.இரகுநாதன், பூவிருந்தவல்லி.
‘கங்கை நதிநீர் குளிக்க, குடிக்க ஏதுவாக இல்லை’ என மத்திய மாசு கட்டுப்பாடு வாரியமே அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனாலும், ‘நான் நேரடியாக அங்கு சென்று வந்தேன். கங்கை நீர் நன்றாக இருக்கிறது’ என்று தமிழக பி.ஜே.பி-யின் கே.டி.ராகவன் சொல்கிறாரே... இவருக்கு என்ன அப்படியோர் அக்கறை?


கங்கை, ‘புனித நதி’ என்று இந்துக்களால் போற்றப் படுகிறது. ஐந்தாண்டுகளுக்கு முன் ஆட்சியில் நரேந்திர மோடி அமர்ந்தபோது, கங்கையைச் சீரமைக்கும் துறை என்று உருவாக்கப்பட்டு, உமாபாரதி அதற்கு அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஆனாலும் அந்தப் புனித நதி தற்போதும் நாறிக்கிடக்கிறது. இதை மத்திய அரசுத்துறையே ஒப்புக்கொண்டுவிட்டது என்கிற செய்தி பரவினால், கட்சிக்கும் ஆட்சிக்கும்தானே அவமானம்?

இராசேந்திரன், பீளமேடு, கோயம்புத்தூர்-4.
‘மதச்சார்பற்ற’ என்பதைச் சற்று விளக்குங்களேன்?


‘மதச்சார்பற்றக் கூட்டணி’ என்று சொல்லிக்கொண்டு, முஸ்லிம் லீக், அகில இந்திய கிறிஸ்தவ முன்னணி எனப் பெயரிலேயே மதத்தைச் சுமந்துகொண்டிருக்கும் கட்சிகளோடு கூட்டணிவைத்து ஆட்சியைப் பிடிப்பார் கள். அடுத்த நிமிடமே, சாய் பாபா, பங்காரு அடிகளார், காஞ்சி சங்கராச்சாரியார், ஜக்கி வாசுதேவ், வேலூர் நாராயணீ பீடம் என்று அனைவரோடும் கொஞ்சிக் குலாவுவார்கள்.

‘மதத்தின் பெயரால் வாக்குகள் சேகரிக்கக்கூடாது’ என்கிற சட்டத்தை மதித்துத் தேர்தலில் போட்டியிடுவதாகச் சொல்லிக்கொண்டு, இந்து முன்னணி, சிவசேனா உள்ளிட்ட மத அமைப்புகளோடு கைகோத்து வெற்றி பெறுவார்கள். ‘மதச்சார்பற்ற இந்தியாவின் அமைச்சர்’ என்று பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட பிறகு, ‘மாட்டுக்கறி தின்கிறாயா?’, ‘காதல் செய்கிறாயா?’ என்றெல்லாம் ஆளையே காலிசெய்வார்கள்.

இந்த விளக்கம் போதுமா... இன்னும் கொஞ்சம் வேணுமா?

கழுகார் பதில்கள்!

@சு. சேகர், ஆலப்பாக்கம், சென்னை-116.
அரசு அதிகாரிகள், தாங்கள் பெரும் கையூட்டு பொருள்களைக் கொண்டு குடும்பத்துக்கும் குழந்தைகளின் கல்விக்கும் செலவு செய்கிறார்கள். இதைப் பார்த்து வளரும் அவர்களின் குழந்தைகள் நேர்மையான முறையில் எப்படித் தங்களின் வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ள முடியும், பிற்காலத்தில்?


அரசு அதிகாரிகளிடம் மட்டும் நேர்மையை எதிர்பார்க்கிறோம். நியாயம்தான். நம்மை வழிநடத்தக் கூடியவர்கள் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதற்காக, அவர்களிடம் மட்டுமே அதை எதிர்பார்ப்பது நியாயமா என்கிற கேள்வியும் எழத்தானே செய்கிறது? கலப்படப் பொருளை விற்கும் மளிகைக்கடைக்காரர், ஒன்றுமில்லாததற்கெல்லாம் ஸ்கேன், ஆஞ்சியோ என்று பயமுறுத்திப் பணம் பார்க்கும் டாக்டர், 25 ரூபாய் மதிப்புள்ள பாப்கார்னை 250 ரூபாய்க்கு விற்கும் தியேட்டர்காரர், மீட்டருக்கு மேல் பணம் கேட்டுச் சண்டை கட்டும் ஆட்டோக்காரர், ஒன்றுக்கு நான்காக மணலைக் கலந்து கட்டடம் கட்டும் கான்ட்ராக்ட்காரர், தன்வீட்டு நாயை அழைத்துச் சென்று பக்கத்துவீட்டு காம்பவுண்டில் அசிங்கம் செய்ய வைக்கும் தனவந்தர் என்று எல்லோருமே கையூட்டுக்கு இணையான தவற்றைத்தான் செய்துகொண்டுள்ளோம். அனைத்து வீட்டுப் பிள்ளைகளின் வாழ்க்கை முறையும் முறையானதாக இருக்கவேண்டும் என்பதுதானே முக்கியம்.

@ஜெகதீஷ் தங்கவேல்.
காவிரி நீர் விஷயத்தில் எந்த உத்தரவையும் மதிக்காமல் கர்நாடகம் பிடிவாதமாக இருக்கிறது. இத்தகையச் சூழலில், காவிரி மேலாண்மை ஆணையத்தால் தமிழகத்துக்கு என்ன பயன்?


ஒருவேளை, ‘ஒரே நாடு’ என்று வந்துவிட்டால் தீர்வு வந்துவிடுமோ!

‘காட்டாவூர்’ இலக்கியன், செங்குன்றம், சென்னை-52.
‘பொதுமக்களே நீர்நிலைகளைத் தூர்வாருவதற்கு அனுமதி தரப்படும்’ என்கிறது அரசு. அப்படி மக்கள் தூர்வாரிய ஏரிகளை, அரசே தூர்வாரியது போல பொய்க் கணக்குக் காட்டி ஊழல் செய்ய வாய்ப்பு இருக்கிறதுதானே?


ம்க்கும்... புதிதாகக் கற்றுக்கொடுக்க வந்துவிட்டீராக்கும். ஏற்கெனவே இதுதான் நடந்துகொண்டிருக்கிறது. தனியார் நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் தூர்வாரியதையெல்லாம் தங்கள் கணக்கில் சேர்த்துப் பணம் பார்க்கும் அதிகாரிகள், அரசியல்வாதிகள் பங்களாக்களாகக் கட்டி வைத்துள்ளனர். நீர்நிலைகள்தான் என்றில்லை. ஆலயப் புனரமைப்பு, கல்விக்கூட புனரமைப்பு என்று அனைத்திலும் இப்படித்தான்.

கழுகார் பதில்கள்!

@ராம் பெரியசாமி.
ஓர் அரசியல் கட்சித் தலைவர், நீதிமன்றத்தால் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்படுகிறார். மேல்முறையீடு மூலம் தண்டனையைத் தவிர்க்கும் அவர், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு மாநில முதல்வராகவும் ஆகிறார். அதன் பிறகு, ‘குற்றவாளி’ எனத் தண்டனை அளிக்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு அந்த மாநிலம் ஒரு குற்றவாளியால் ஆளப்பட்டதுதானே... அவர் எடுத்த முடிவுகளும் ஆட்சியும் சந்தேகத்துக்கு உட்பட்டதுதானே... இதற்கெல்லாம் என்ன தீர்வு?


தண்டனை நிறுத்தி வைக்கப்படுகிறது என்றால், அவரால் முதல்வராக ஆகவே முடியாது. முழுமையாக விடுவிக்கப்பட்டால் மட்டுமே அவர் முதல்வர் ஆக முடியும். இது சட்ட நடைமுறை. ஆனால், இதையெல்லாம் யாரும் மதிப்பதில்லை என்பதுதான் நிதர்சனம். 2001-ம் ஆண்டில் டான்ஸி ஊழல் வழக்கில் தண்டனைப் பெற்ற ஜெயலலிதா, நான்கு மாதங்களுக்கு முதல்வராக இருந்தார். கடும் எதிர்ப்புகள் கிளம்பியபோதும் கவர்னர் ஃபாத்திமா பீவி முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இத்தனைக்கும் ஃபாத்திமா பீவி உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர். முதல்வராக இருந்த அந்த நான்கு மாத காலங்களில் ஜெயலலிதா ஏகப்பட்ட முடிவுகளை எடுத்தார். அவையெல்லாம் கேள்விகளுக்கு உட்படுத்தப்படவே இல்லை.

படம்: ச.வெங்கடேசன்

கேள்விகள் அனுப்ப  வேண்டிய முகவரி:
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 600002
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!