Published:Updated:

முதல்வரோடு முட்டிக்கொண்ட ரோகிணி! - மாற்றப்பட்ட மர்மம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
முதல்வரோடு முட்டிக்கொண்ட ரோகிணி! - மாற்றப்பட்ட மர்மம்
முதல்வரோடு முட்டிக்கொண்ட ரோகிணி! - மாற்றப்பட்ட மர்மம்

முதல்வரோடு முட்டிக்கொண்ட ரோகிணி! - மாற்றப்பட்ட மர்மம்

பிரீமியம் ஸ்டோரி

சேலத்தின் இளம் பெண் கலெக்டர் ரோகிணி ஆர்.பாஜிபாகரே, பணியிலிருந்து மாற்றப்பட்டு தமிழ்நாடு இசைக் கல்லூரியின் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இது சேலம் மக்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரோகிணி, சேலம் கலெக்டராகப் பொறுப்பேற்றதிலிருந்து அவரை மக்கள் எளிமையாகச் சந்திக்க முடிந்தது. மாற்றுத் திறனாளிகள் மீது தனி கவனம் செலுத்தியதோடு உடனுக்குடன் அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்து கொடுத்தார். சேலத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமாகப் பரவியபோது வீடு வீடாகச் சென்று விழிப்பு உணர்வு ஊட்டியதோடு, தேங்கிக் கிடந்த சாக்கடையைத் தூர்வாரச் செய்து வெகுஜன மக்களிடம் நற்பெயர் வாங்கினார். இப்படிப்பட்டவர்தான் தற்போது பணிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

இதுபற்றி அரசு அதிகாரிகளிடம் விசாரித்த போது, ‘‘அரசு ஊழியர்களுக்கு மாறுதல் என்பது தவிர்க்க முடியாது. ஆனால், முதல்வரின் சொந்த மாவட்டத்தில் சுறுசுறுப்பான இளம் கலெக்டராக இருந்தவரை டம்மியான பதவிக்குப் பணி மாற்றியிருக்கிறார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது கலெக்டர் ரோகிணிக்கும் ஆளுங்கட்சித் தரப்புக்கும் இடையே ஏற்பட்ட சில கசப்பான சம்பவங் களால்தான் மாற்றப்பட்டுள்ளார்.

முதல்வரோடு முட்டிக்கொண்ட ரோகிணி! - மாற்றப்பட்ட மர்மம்

நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத் துக்காக மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி சேலம் கோட்டை மைதானத்துக்கு வந்தார். அப்போது கோட்டை மைதானத் திலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடு உள்ள திருவா கவுண்டனூர் வரை அ.தி.மு.க கொடிக் கம்பங்கள் நடப்பட்டிருந்தன. இதுகுறித்து தி.மு.க-வினர் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் ரோகிணியிடம் புகார் தெரிவித்தார்கள். உடனே,  கலெக்டர் அந்தக் கொடிக் கம்பங்களை அகற்றச்சொல்லி உத்தரவிட்டார். இது முதல்வர் தரப்பைக் கோபப்படுத்தியது.

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து வாக்கு இயந்திரங்கள் கருப்பூர் பொறியியல் கல்லூரியில் வைத்துப் பூட்டி சீல் வைக்கப்பட்டது. அந்த அறைக்குள் ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் சென்று வர பல முயற்சிகளை மேற்கொண்டார்கள். அதற்கு கலெக்டர் ரோகிணி அனுமதிக்கவில்லை. இது ஆளுங்கட்சித் தரப்பை ஆத்திரம் அடையச் செய்தது.

சமீபத்தில் சேலம் ஐந்து ரோடு பகுதியில் பறக்கும் மேம்பாலம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பாலத்தைத் திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் யாரும் எதிர்பார்க்காத வகையில், புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க-வைச் சேர்ந்த எம்.பி பார்த்திபனும், அவருடைய ஆதரவாளர்களும் கலந்துகொண்டார்கள். முதல்வர் மேடையில் இருக்கும்போதே அ.தி.மு.க-வினருக்கும் தி.மு.க-வினருக்கும் ரகளை ஏற்பட்டுக் கைகலப்பு வரை சென்றது. இதனால் முதல்வர் ரொம்ப அப்செட் ஆகி கலெக்டர் ரோகிணியைக் கூப்பிட்டு, ‘மக்களவை உறுப்பினராகப் பதவி பிரமாணமே எடுக்காதபோது, யாரைக் கேட்டு பார்த்திபனுக்கு அழைப்பு கொடுத்தீர்கள்?’ என்று கடுப்பானார்.

சேலம் மக்களவை உறுப்பினராகப் பார்த்திபன் வெற்றிபெற்ற பிறகு பலமுறை கலெக்டரை நேரில் சந்தித்து மக்கள் பிரச்னைக்காக மனு கொடுத்தார். எதிர்க் கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினரை கலெக்டர் உடனே நேரில் சந்திப்பதை அ.தி.மு.க-வினர் விரும்பவில்லை. அதை முதல்வர் காதுக்கும் கொண்டு சென்றிருக்கிறார்கள். இதனாலும் கலெக்டர் ரோகிணிமீது அதிருப்தி அடைந்துள்ளார் முதல்வர். இதுபோன்ற காரணங் களால் தற்போது சேலம் கலெக்டர் ரோகிணி மாற்றப்பட்டுள்ளார்’’ என்கிறார்கள்.

இதுபற்றி முதல்வர் தரப்பிடம் விசாரித்தபோது, ‘‘ரோகிணி, சேலத்தில் கலெக்டராகப் பதவியேற்றதிலிருந்து மக்கள் நலத் திட்டங்களை முன்னிறுத்துவதை விடத் தன்னையே முன்னிலைப் படுத்திக்கொண்டார். முதல்வர் தொகுதியில் உள்ள மாவட்ட கலெக்டர்கள் பலதுறைகளில் பல கோடி சிறப்பு நிதி பெறுவார்கள். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஸ்ரீரங்கம் தொகுதி உள்ள திருச்சி மாவட்ட கலெக்டர் பல துறைகளில் பல சிறப்பு நிதிகள் பெற்றிருக்கிறார்.

ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டத்தில் கலெக்டராக இருந்தும் இவர் எந்தத் துறையிலிருந்தும் சிறப்பு நிதிகள் பெறவில்லை. சொல்லிக்கொள்ளும் வகையில் எந்த ஒரு பெரிய திட்டத்தையும் சேலத்துக்குக் கொண்டு வரவும் இல்லை. இவர் விவசாயி மகள் என்கிறார். ஆனால், எட்டுவழிச் சாலை திட்டத்துக்கு விவசாயிகளிடம் கலந்து ஆலோசித்துப் பிரச்னைகளை முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லாமல் காவல்துறையை ஏவி நிலங்களைக் கையகப்படுத்தினார். இதனால், விவசாயிகள் மத்தியில் முதல்வருக்குக் கெட்ட பெயர் நேர்ந்தது’’ எனப் பல காரணங்களை அடுக்குகிறார்கள்.

-வீ.கே.ரமேஷ்,
படம்: எம்.விஜயகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு