Published:Updated:

ஸ்டாலினை ஓ.எம்.ஜி குரூப் இயக்குகிறதா? - சர்ச்சையைக் கிளப்பிய மாஃபா பாண்டியராஜன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஸ்டாலினை ஓ.எம்.ஜி குரூப் இயக்குகிறதா? - சர்ச்சையைக் கிளப்பிய மாஃபா பாண்டியராஜன்
ஸ்டாலினை ஓ.எம்.ஜி குரூப் இயக்குகிறதா? - சர்ச்சையைக் கிளப்பிய மாஃபா பாண்டியராஜன்

ஸ்டாலினை ஓ.எம்.ஜி குரூப் இயக்குகிறதா? - சர்ச்சையைக் கிளப்பிய மாஃபா பாண்டியராஜன்

பிரீமியம் ஸ்டோரி

நாடாளுமன்றத் தேர்தலிலும் சட்டமன்ற இடைத் தேர்தல்களிலும் மிகப்பெரிய வெற்றியை தி.மு.க பெற்ற நிலையில், ‘இது தி.மு.க-வுக்கோ, அதன் தலைவர் ஸ்டாலினுக்கோ கிடைத்த வெற்றி அல்ல... இது ஓ.எம்.ஜி குரூப்புக்குக் கிடைத்த வெற்றி’ என்று சர்ச்சைக்குரிய கருத்தைக் கொளுத்திப்போட்டிருக்கிறார், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.

தி.மு.க தலைவர் கருணாநிதியின் மகன் என்பதைத் தாண்டி, ஓர் அடிமட்டத் தொண்டராக அரசியலில் அடியெடுத்துவைத்தவர், மு.க.ஸ்டாலின். இளைஞர் அணித் தலைவர், சட்டமன்ற உறுப்பினர், சென்னை மாநகராட்சி மேயர், அமைச்சர், துணை முதல்வர் என்று படிப்படியாக உயர்ந்து, இன்றைக்குத் தி.மு.க-வின் தலைவர் என்கிற உச்சத்தைத் தொட்டிருப்பவர். மாற்றுக்கட்சியினரும்கூட இதை மறுப்பதில்லை.

ஸ்டாலினை ஓ.எம்.ஜி குரூப் இயக்குகிறதா? - சர்ச்சையைக் கிளப்பிய மாஃபா பாண்டியராஜன்

அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் முழுவதும் மேற்கொண்ட ‘நமக்கு நாமே’ பயணம், ஒட்டுமொத்த தமிழக மக்களின் கவனத்தையும் பெற்றது. அதே நேரத்தில், அவருடைய நடை, உடை, பாவனைகள் சர்ச்சைக்கு உள்ளாகின. ஓ.எம்.ஜி என்கிற ஒரு நிறுவனத்தின் ஆலோசனைப்படியே அந்தப் பயணமும் ஸ்டாலினின் செயல்பாடுகளும் திட்டமிடப்பட்டதாகச் செய்திகள் வந்தன. தற்போது, நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைத் தி.மு.க பெற்றுள்ள நிலையில், ஓ.எம்.ஜி நிறுவனத்தைச் சுற்றி சர்ச்சைகள் வட்டமிடுகின்றன.

‘தி.மு.க-வின் முக்கிய முடிவுகளில் ஓ.எம்.ஜி நிறுவனம் ஆதிக்கம் செலுத்துகிறது. அதனால், ஓ.எம்.ஜி-யுடன் தொடர்புடைய பிரமுகர்கள்மீது தி.மு.க-வின் சீனியர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலின்போது முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஓ.எம்.ஜி ஊழியர்கள் சிலர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்’ என்றெல்லாம் ஓ.எம்.ஜி-யைச் சுற்றி சர்ச்சைக்குரிய செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், இரு வாரங்களுக்கு முன் ஒரு தனியார் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், “நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றி தி.மு.க-வின் வெற்றியோ, ஸ்டாலினின் வெற்றியோ அல்ல… அது ஓ.எம்.ஜி நிறுவனத்துக்குக் கிடைத்த வெற்றி. ஓ.எம்.ஜி நிறுவனத்தில் 250 பேர் பணியாற்றுகிறார்கள்” என ஓ.எம்.ஜி-யையும் தி.மு.க-வையும் இணைத்துப் பல செய்திகளைக் கூறியிருந்தார்.

மாஃபா பாண்டியராஜனின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து காட்டமாக அறிக்கை வெளியிட்டார், தி.மு.க-வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாநிலச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். அதில் அவர், ‘அ.தி.மு.க-வின் தோல்வியை மறைப்பதற்கு மாஃபா பாண்டியராஜன் பொய்களை அள்ளி வீசுகிறார். தி.மு.க தலைவர் ஸ்டாலினின் தொலைநோக்குத் திட்டங்கள், கூட்டணி வியூகம் ஆகியவற்றின் காரணமாகவே நாங்கள் வெற்றிபெற்றோம். அவர் சொல்வதுபோல, எந்த நிறுவனமும் தி.மு.க-வின் வெற்றிக்குக் காரணம் அல்ல’ என்று கூறியிருந்தார்.

ஸ்டாலினை ஓ.எம்.ஜி குரூப் இயக்குகிறதா? - சர்ச்சையைக் கிளப்பிய மாஃபா பாண்டியராஜன்

இதுகுறித்து பி.டி.ஆர்.பழனிவேல் தியாக ராஜனிடம் பேசியபோது, “ஓ.எம்.ஜி என்கிற ஒரு நிறுவனம் இப்போது செயல்படவே இல்லை. 250 ஊழியர்கள் வேலை செய்கிறார் கள் என்றால், அவர்களுக்கு இ.பி.எஃப் கட்ட வேண்டாமா? அதைப் பார்த்தாலே அப்படி யொரு நிறுவனம் இருக்கிறதா, இல்லையா என்பது தெரிந்து விடும். அதை பாண்டியராஜனால் நிரூபிக்க முடியுமா? சில ஊழியர் களையும் கணினிகளையும் வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த மக்களையும் ஏமாற்ற முடியும் என்று அவர் சொல்வது, தமிழக வாக்காளர்களை அவமதிக்கும் செயல். சுயம்புவாகச் செயல்படாமல் யாரோ சொல்வதை வைத்துச் செயல்படுகிறார் என்று எங்கள் தலைவரைக் களங்கப்படுத்தும் வகையில் அமைச்சர் பாண்டியராஜன் பேசியிருப்பது கடும் கண்டனத் துக்குரியது. இது அபத்தமான, நேர்மையற்ற, உள் நோக்கத்துடன்கூடிய பேச்சு. அப்படியென்றால் நீங்கள் என்ன சுயம்புவா? உங்களுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்று மாஃபா பாண்டியராஜ னிடம் நான் கேட்கிறேன். அதற்கு அவர் பதில் சொல்லட்டும்” என்றார் ஆவேசத்துடன்.

இதுகுறித்து அமைச்சர் மாஃபா பாண்டிய ராஜனிடம் கேட்டபோது, “தி.மு.க தலைவர் ஸ்டாலினின் முக்கிய செயல்பாடுகளை ஓ.எம்.ஜி நிறுவனமே தீர்மானிக்கிறது. அவர்கள் நிற்கச் சொன்னால் நிற்க வேண்டும், ஓடச் சொன்னால் ஓட வேண்டும். அவர்கள் சொல்கிற நிறத்தில் உடைகள் அணிய வேண்டும். இப்படியாக ஸ்டாலினின் ஒவ்வோர் அசைவையும் அந்த ஒரு நிறுவனம்தான் வடிவமைக்கிறது. இது, தி.மு.க-வுக்கு உள்ளேயே பேசப்படுகிற விஷயம்தான். அதைத்தான் நானும் சொன்னேன்.

ஸ்டாலினை ஓ.எம்.ஜி குரூப் இயக்குகிறதா? - சர்ச்சையைக் கிளப்பிய மாஃபா பாண்டியராஜன்

நாடாளுமன்றத் தேர்தலில், எல்லாத் தலைவர் களும் பிரசார வேனில் நின்று பிரசாரம் செய்தனர். இவரோ, பொதுக்கூட்ட மாடலில் பிரசாரம் செய் தார். இப்படிச் செய்தால் நல்ல தாக்கம் இருக்கும் என்று அவருக்கு யோசனை சொன்னது யார்? எந்த இடத்தில், எந்த நேரத்தில், எந்தக் கருத்தைப் பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும், எந்த வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும், என்ன மாதிரி சிகை அலங்காரம் செய்துகொள்ள வேண்டும் என்பதையெல்லாம் அவர்கள்தான் திட்டமிடுகிறார்கள்.

இந்த விஷயத்தைக்கூட நான் நெகட்டிவாகச் சொல்லவில்லை. வெற்றி தோல்விக்கான காரணங் களைச் சொன்னபோது, அதில் இந்த மாதிரியான ஒரு கோணமும் இருக்கிறது என்பதைத்தான் சொன்னேன். ஓ.எம்.ஜி என்கிற ஒரு நிறுவனமே இல்லையென்றால், அந்த மாதிரி ஒரு நிறுவனம் ஸ்டாலினை இயக்கவில்லையென்றால், அதைச் சொல்லிவிட்டுப்போங்கள்” என்றார்.

‘ஓ மை காட்’ என்பதை, நெட்டிசன்கள் ‘ஓ.எம்.ஜி’ எனச் சுருக்கமாகச் சொல்வார்கள். இருவர் தரப்புக்கும் நாம் சொல்வதும் ‘ஓ.எம்.ஜி’-தான்!

- ஆ.பழனியப்பன்
படங்கள்: சு.குமரேசன், கா.முரளி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு