பிரீமியம் ஸ்டோரி

தூரத்தில் மணிச் சத்தம் கேட்டதும் ‘இப்பப் பாரு, சரியா ஒரு நிமிஷத்துல நம்ம வீட்டுக்கு ஐஸ் வண்டி வரும்’ என வீட்டு வாண்டுகளை ஏமாற்றுவோமே, அதைப்போல அ.தி.மு.க யாகம் செய்தபின் யதேச்சையாக மழைவர, அதைவைத்தே மைலேஜ் தேற்றுகிறார்கள் ர.ர-க்கள். ‘இது நல்ல ஐடியாவா இருக்கே! அப்போ தமிழ்நாட்டின் முக்கிய பிரச்னைகளை இதே மாதிரி டீல் பண்ணலாமே’ எனத் தோன்றவே... இந்த லிஸ்ட்!

ஐடியா அய்யனாரு!

• வேலையில்லாத் திண்டாட்டம் தமிழகத்தை மட்டுமல்ல, மொத்த இந்தியாவையும் பிடித்தாட்டுகிறது. இதிலிருந்து தமிழகம் மீள ஜெ. பாணியில் எடப்பாடியாரின் குரலில், ‘உங்களால் முடியும், உங்களால் மட்டுமே முடியும்’ என மோட்டிவேஷன் கருத்தை வாய்ஸ் மெசேஜாக தினமும் இளைஞர்களுக்கு அனுப்பினால், ஸ்மார்ட்போனைத் தூக்கிக் கடாசிவிட்டு சொந்தமாகவே வேலைசெய்யக் களமிறங்கிவிடுவார்கள்.

• உள்ளாட்சித் தேர்தலை நடத்திவிட மற்றக் கட்சிகள் துடியாய்த் துடிக்கின்றன. ஆனால், அ.தி.மு.க-வுக்கோ அதில் விருப்பமே இல்லை. எனவே, ‘நாங்கள் இடைத்தேர்தலை எதிர்கொண்ட விதம்’ எனச் சூதுவாதுகளை நோட்டீஸ் அடித்து வீடுவீடாகக் கொடுத்தால், அதைப் படித்துவிட்டு தேர்தல் கமிஷனே பதறிப்போய் உள்ளாட்சித்தேர்தல் நடத்தும் ஐடியாவைக் கைவிட்டுவிடும்.

• தமிழகப் பிரச்னையில் தலையாயது அ.தி.மு.க-வின் உட்கட்சிப் பூசல். இதனாலேயே மற்றப் பிரச்னைகளில் கவனம் செலுத்துவதில்லை அதன் நிர்வாகிகள். எனவே இதிலிருந்து மீள, அதிருப்தி ர.ர-க்கள் அனைவரும் எடப்பாடி படத்தை நடுநாயகமாக வீட்டில் வைத்து அதன்முன் தங்கள் சொத்துப் பத்திரங்களை எல்லாம் வைத்து ஒரு மண்டலம் வழிபட்டால் உண்மை புலப்படும். மனதும் மாறிவிடும்.

• யானை - மனிதன் மோதல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதன் வழித்தடங்களை நாம் ஆக்கிரமிப்பதுதான் பிரச்னை. ஆனால், இதை ஒப்புக்கொண்டால்தான் நாடு முன்னேறிவிடுமே. எனவே, வேறு வழிதான்! யானை யார்? பிள்ளையார்தானே? எனவே, காட்டோர கிராமங்களில் குழாய் ஸ்பீக்கர் வைத்து ‘பிள்ளையார்பட்டி ஹீரோ நீதாம்ப்பா, கணேசா’ பாடலை லூப்பில் ஓடவிட்டால் கண்கலங்கி டிஸ்டர்ப் செய்யாமல் யானை திரும்பிவிடும்.

• இந்த மழையெல்லாம் போதாது... தண்ணீர்ப் பற்றாக்குறையைப் போக்க கைவசமிருந்த யாகம் ஆப்ஷனையும் பயன்படுத்தியாயிற்று. எனவே, மீண்டும் மழைபெய்ய வைக்க, மழை தேவையான மாவட்டங்களில் ‘எடப்பாடி ஐயாவின் வாழ்க்கை வரலாற்றை’ ஒலிக்குறிப்பாக்கி சத்தமாக ஒலிபரப்பலாம். ‘என்னே ஒரு தியாகவுள்ளம்’ என அதைக் கேட்டு மேகங்கள் கண்ணீர் வடித்தால் மழை கியாரன்டி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு