சினிமா
தொடர்கள்
Published:Updated:

கதிகலங்கும் கழகங்கள்! - கூட்டணிக் குழப்ப தி.மு.க... கோஷ்டி அ.தி.மு.க... கரையும் அ.ம.மு.க...

கதிகலங்கும் கழகங்கள்! - கூட்டணிக் குழப்ப தி.மு.க... கோஷ்டி அ.தி.மு.க... கரையும் அ.ம.மு.க...
பிரீமியம் ஸ்டோரி
News
கதிகலங்கும் கழகங்கள்! - கூட்டணிக் குழப்ப தி.மு.க... கோஷ்டி அ.தி.மு.க... கரையும் அ.ம.மு.க...

கதிகலங்கும் கழகங்கள்! - கூட்டணிக் குழப்ப தி.மு.க... கோஷ்டி அ.தி.மு.க... கரையும் அ.ம.மு.க...

தேர்தல் முடிவுகள் ஆட்சிகளின் ஆயுளை மட்டுமல்ல, கட்சிகளின் தலையெழுத்தையும் தீர்மானிக்கின்றன. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு திராவிடக் கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க., அ.ம.மு.க கட்சிகளுக்குள் நடக்கும் காட்சிகள், அரசியல் அரங்கைச் சந்தி சிரிக்க வைத்திருக்கிறது. தேர்தலில் வெற்றியைக் குவித்த தி.மு.க கூட்டணிக்குள் குத்துவெட்டு, தோல்வி அடைந்த அ.தி.மு.க-வில் ‘ஒற்றைத் தலைமை’ கோஷம், அ.ம.மு.க-வில் தகராறு எனப் பரபரத்துக் கிடக்கிறது அரசியல்.

தி.மு.க.

நாடாளுமன்றத் தேர்தலில் ஒற்றை இலக்கில் காங்கிரஸுக்குத் தொகுதிகள் ஒதுக்க முடிவான நிலையில், டெல்லியில் சோனியா, ராகுலுடன் கனிமொழி நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு 10 தொகுதிகள் தர முடிவானது. காங்கிரஸ்மீது தி.மு.க காட்டிய கரிசனத்தை இப்போது கறாராக மாற்றிவிட்டார் கராத்தே தியாகராஜன். காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் பேசிய தென் சென்னை மாவட்டத் தலைவர் கராத்தே தியாகராஜன், “உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் போட்டியிடுவதை இப்போதே தி.மு.க-விடம் பேசி உறுதி செய்ய வேண்டும். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 14 இடங்களைத்தான் தி.மு.க ஒதுக்கியது. இப்போதும் அப்படி நடந்துவிடக் கூடாது. குறைவான இடங்கள் எனில் தனித்துப் போட்டியிடலாம்’’ என்றார். கராத்தே கொளுத்திய தீ, திருச்சியில் கொழுந்துவிட ஆரம்பித்தது.

கதிகலங்கும் கழகங்கள்! - கூட்டணிக் குழப்ப தி.மு.க... கோஷ்டி அ.தி.மு.க... கரையும் அ.ம.மு.க...

குடிநீர்ப் பிரச்னைக்காக திருச்சியில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் குடிநீரைவிட அரசியல்தான் அதிகம் பேசியது தி.மு.க. ‘`காங்கிரஸுக்கு அவ்வளவு இடங்களைக் கொடுத்துட்டு, நாங்கள் என்ன குச்சி மிட்டாய் சாப்பிடவா? மக்களுக்கு நல்லது செய்ய தி.மு.க தனித்துப் போட்டியிட வேண்டும். எத்தனை நாளைக்குக் காங்கிரஸுக்குப் பல்லக்கு தூக்குவது?’’ என்றார் கே.என்.நேரு. உதயநிதியும் தன் பங்குக்குப் பல்லவி பாடினார். ஓட்டு போட்ட அடையாள மை அழிவதற்கு முன்பே, தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் விழ ஆரம்பித்துவிட்டது. இதற்குக் கராத்தேதான் காரணம் எனச் சொல்லப்பட்டாலும்கூட வேறு சில அரசியல் காரணங்களும் உண்டு. இந்தியா முழுவதும் பி.ஜே.பி-க்கு ஆதரவு இருந்தும் தமிழகத்தில் அந்தக் கூட்டணி ஜெயிக்க முடியவில்லை. அதற்குக் காரணம் பி.ஜே.பி எதிர்ப்பு மட்டுமல்ல, தி.மு.க அமைத்த கூட்டணியும்தான். தி.மு.க மீது கோபத்தில் இருக்கிற பி.ஜே.பி எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கலாம். அதனைத் தவிர்ப்பதற்காக காங்கிரஸைத் தள்ளி நிறுத்த தி.மு.க முடிவு எடுத்திருப்பதையே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன. ‘உட்கட்சி ஜனநாயகம்’ என மார்தட்டிக்கொண்டாலும் தி.மு.க-வுக்குள் வெளிப்படையாக யாரும் கருத்தைச் சொல்லிவிட முடியாது. கே.என்.நேரு பேசியது அறிவாலயத்தின் குரல்தான். அது காங்கிரஸுக்குச் செய்யப்பட்ட எச்சரிக்கைதான். ‘ராகுலை பிரதமர் வேட்பாளராக யாரும் முன்னிறுத்தாத நிலையில், அவரை அறிவித்தது ஸ்டாலின்தான். அதற்குக் காட்டப்பட்ட நன்றியா இது?’ என ஸ்டாலின் கொதித்ததால்தான் இந்தப் புகைச்சல் வெடித்தது. காங்கிரஸைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப் போடப்பட்ட சாம்பிராணி கொஞ்ச காலம் காங்கிரஸைத் தலையாட்டி பொம்மையாக வைத்திருக்கலாம்.

அ.தி.மு.க.

நாடாளுமன்றத் தேர்தலிலும் இடைத்தேர்தலில்களிலும் அ.தி.மு.க படுதோல்வி அடைந்தபோதும் ஆட்சிக்கு ஏற்பட்ட ஆபத்திலிருந்து தப்பித்துவிட்டது. ஆனால், தலைமைக்கு வந்தது சோதனை. ‘ஒற்றைத் தலைமை’ கோஷத்தை ராஜன் செல்லப்பா எழுப்ப... எடப்பாடியா, பன்னீரா எனக் கட்சிக்குள் குஸ்தி. ஜெயலலிதா மறைவுக்குப்பின் நாடாளுமன்றத் தேர்தலில் கட்சியின் பலத்தைக் காட்டுவதற்குப் பதிலாக, தங்கள் செல்வாக்கைக் காட்ட கோதாவில் இறங்கினார்கள் எடப்பாடியும் பன்னீரும். இதில் பன்னீர் மட்டுமே வென்றார். தேனித் தொகுதியை ஜெயிக்க வைத்தார் பன்னீர். சேலம் தொகுதியைப் பறிகொடுத்தார் எடப்பாடி. தேனி எம்.பி தொகுதிக்குள் இருக்கிற ஆண்டிபட்டி, பெரியகுளம் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இடைத்தேர்தலில் ஜெயித்தால்தான் ஆட்சி நீடிக்கும் என்ற நிலையில், அந்தத் தொகுதிகளில் ஜெயிக்க முயற்சி எடுக்காத பன்னீர்செல்வம், தன் மகன் போட்டியிட்ட தேனித் தொகுதியில் மட்டும் ஜெயிப்பதற்குக் காட்டிய அக்கறைக்குப் பெயர்தான் அரசியல்.

கதிகலங்கும் கழகங்கள்! - கூட்டணிக் குழப்ப தி.மு.க... கோஷ்டி அ.தி.மு.க... கரையும் அ.ம.மு.க...

தமிழகத்தின் 38 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில், தி.மு.க கூட்டணி 37 இடங்களிலும், அ.தி.மு.க கூட்டணி ஒரு இடத்திலும் வென்றது ஊரறிந்த செய்தி. இந்தத் தேர்தல் முடிவுகளுக்கு உள்ளே சில உண்மைகளும் புதைந்து கிடக்கின்றன. தமிழகத்தின் ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்குள் ஆறு சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியிருக்கின்றன. வாக்கு எண்ணிக்கையும் சட்டசபைத் தொகுதி வாரியாக எண்ணப்பட்டு, பிறகு ஆறு தொகுதிகளின் வாக்குகளையும் கூட்டி, முடிவுகள் வெளியிடப்படும். அ.தி.மு.க அமைச்சர்களின் சட்டசபைத் தொகுதிகளில் கிடைத்த வாக்குகளில் பன்னீர்செல்வம் மட்டுமே அவருடைய சட்டசபைத் தொகுதியில் கூடுதல் ஓட்டுகள் வாங்கியிருக்கிறார். எடப்பாடி உட்பட மற்ற அமைச்சர்கள் அனைவரும் வாஷ் அவுட் ஆகியிருக்கிறார்கள்.

சேலம் எம்.பி தொகுதிக்குள்தான் எடப்பாடி பழனிசாமியின் சட்டசபைத் தொகுதியான எடப்பாடித் தொகுதி வருகிறது. இதில், அ.தி.மு.க கூட்டணி வாங்கிய வாக்குகள் 96,485. தி.மு.க கூட்டணி பெற்ற ஓட்டுகள் 1,04,573.

அ.தி.மு.க கூட்டணியைவிட தி.மு.க கூட்டணி 8,088 வாக்குகள் அதிகம் வாங்கியிருக்கிறது. அதாவது, இப்போது நடந்த தேர்தலில் எடப்பாடி சட்டசபைத் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி தோற்றிருக்கிறார். 2016 சட்டசபைத் தேர்தலில் 42,022 ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயித்த எடப்பாடி பழனிசாமி இப்போது 8,088 ஓட்டுகள் பெற்று, பின்தங்கியிருக்கிறார். தேனி எம்.பி தொகுதிக்குள்தான் ஓ.பன்னீர்செல்வத்தின் போடிநாயக்கனூர் சட்டசபைத் தொகுதி வருகிறது.

கதிகலங்கும் கழகங்கள்! - கூட்டணிக் குழப்ப தி.மு.க... கோஷ்டி அ.தி.மு.க... கரையும் அ.ம.மு.க...

ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்தான் தேனி எம்.பி தொகுதியில் வென்றார். போடிநாயக்கனூர் தொகுதியில் அ.தி.மு.க கூட்டணிக்கு 94,279 வாக்குகளும் தி.மு.க கூட்டணிக்கு 67,791 வாக்குகளும் கிடைத்திருக்கின்றன. கடந்த 2016 சட்டசபைத் தேர்தலில் 15,608 ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயித்த பன்னீர்செல்வம், இப்போது முன்னேறி 26,488 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்திருக்கிறார்.

தமிழக அமைச்சர்களில் பன்னீர்செல்வம் மட்டுமே தனது தொகுதியில் செல்வாக்கை நிலைநிறுத்தியிருக்கிறார். முதல்வர் எடப்பாடி தோற்றபோதும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மட்டும் வென்றிருப்பதற்குப் பின்னால் இருப்பது ‘பக்கா’ அரசியல். இந்தக் கணக்கை வைத்துதான் பன்னீரைக் கட்சிக்கும் ஆட்சிக்கும் கொண்டு வர சிலர் ஆசைப்படுகிறார்கள். அதில் ஒற்றைத்தலைமை கோஷம் ஓங்கி ஒலிக்கிறது.

கதிகலங்கும் கழகங்கள்! - கூட்டணிக் குழப்ப தி.மு.க... கோஷ்டி அ.தி.மு.க... கரையும் அ.ம.மு.க...

அ.ம.மு.க.

சசிகலா சிறைக்குப் போனதும் ஆர்.கே.நகரில் நின்று, முதல்வர் பதவியில் அமர முற்பட்ட தினகரனுக்கு அங்கேதான் சரிவும் தொடங்கியது. முதல்வர் நாற்காலி காலியாவதை விரும்பாத எடப்பாடிக்கு பி.ஜே.பி-யின் ஆசி கிடைத்தது அவரே எதிர்பார்க்காத ஜாக்பாட். இந்தப் புதுக்கூட்டணியில் தினகரன் துரத்தப்பட்டார். இரட்டை இலைச் சின்னத்துக்குப் பேரம் பேசியதில் சிறைக்குப் போய்... பழைய வழக்குகள் தூசு தட்டப்பட்டு... மன்னார்குடிக் குடும்பத்தினர் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டு... 18 எம்.எல்.ஏ-கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு... தேர்தலில் தோல்வி அடைந்து... பெரும் போராட்டங்களையும் இழப்புகளையும் எதிர்கொண்டது அ.ம.மு.க. இந்தத் தொடர் தோல்வியின் தொடர்ச்சியாக, கட்சியின் முக்கியத் தூண்கள் ஆட்டம் காண ஆரம்பித்தன. தாய்க்கழகத்தின் கதவைத் தங்க தமிழ்ச்செல்வன் தட்ட...பன்னீர்செல்வம் ‘நோ’ சொல்ல... பங்காளியைவிடப் பகையாளியே பெஸ்ட் என அறிவாலயத்தில் ஐக்கியமாகிவிட்டார் தங்க தமிழ்ச்செல்வன். அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்வதற்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றன. கரைய ஆரம்பித்திருக்கிறது அ.ம.மு.க. துரோகம் இழைத்த எடப்பாடியையும் பன்னீரையும் பழிவாங்க நினைத்து, எடுக்கப்பட்ட முயற்சிகளில் தினகரனுக்குப் பெரிய முன்னேற்றம் ஏதுமில்லை. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வென்று, எம்.எல்.ஏ ஆனதுமே தனக்குப் பெரிய செல்வாக்கு இருக்கிறது, அ.தி.மு.க தொண்டர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என நம்பினார். தேர்தலில் அது பொய்த்துவிட்டது. தேர்தல் தோல்விக்குப் பிறகும் முக்கிய நிர்வாகிகள் வெளியேற ஆரம்பித்திருக்கும் சூழலில் தினகரன் கொஞ்சமும் அசராமல் அடியெடுத்து வைக்கிறார்.

ஆனாலும் ‘மிஸ்டர் கூல்’ தினகரன் இப்படியே நீண்ட நாள்களுக்குச் சிரித்து சமாளிக்க முடியாது என்றே தோன்றுகிறது.

- எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி