Published:Updated:

`வாங்க சின்னய்யா’ என்றார் விஜயகாந்த்! - பழைய நினைவுகளை மீட்டிய ஜி.கே.வாசன்

`நீங்கள் செய்த தர்மமும் மக்கள் பிரார்த்தனையும்தான் உங்களைக் காப்பாற்றியது’ என்றார் ஜி.கே.வாசன்.

`வாங்க சின்னய்யா’ என்றார் விஜயகாந்த்! - பழைய நினைவுகளை மீட்டிய ஜி.கே.வாசன்
`வாங்க சின்னய்யா’ என்றார் விஜயகாந்த்! - பழைய நினைவுகளை மீட்டிய ஜி.கே.வாசன்

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்தை நேற்று சந்தித்துப் பேசினார் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன். `விஜயகாந்த்துடனான பழைய நினைவுகளை மீட்டும் வகையில் இந்தச் சந்திப்பு நடந்தது. மற்றவர்களிடம் பேசுவதற்கு மட்டுமே அவர் சிரமப்படுகிறார். நல்லபடியாக குணமடைந்து வருகிறார்’ என்கின்றனர் சந்திப்பின்போது உடன் இருந்தவர்கள். 

அ.தி.மு.க தலைமையிலான அணியில் பா.ம.க, பா.ஜ.க, தே.மு.தி.க, த.மா.கா, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. இந்தக் கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடுகள் முடிவுக்கு வந்தாலும், எந்தெந்த தொகுதிகள் என்பதில் இன்னும் இறுதி வரையறை செய்யப்படவில்லை. `விரைவில் தொகுதிப் பட்டியலை வெளியிட வேண்டும்’ என்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம். இந்நிலையில், கூட்டணிக் கட்சியின் தலைவர் என்ற முறையில் நேற்று சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டுக்குச் சென்றார் தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன். நேற்று மாலை 5.30 மணிக்கு நடந்த இந்த சந்திப்பில், விஜயகாந்த்துடனான பழைய சம்பவங்களை நினைவுபடுத்தியுள்ளனர் த.மா.கா நிர்வாகிகள். ஒவ்வொரு சம்பவங்களையும் உள்வாங்கிக்கொண்டு, தலையை அசைத்துப் பேசியிருக்கிறார் விஜயகாந்த். 

த.மா.கா நிர்வாகிகளிடம் பேசினோம்.

``மூப்பனார் குடும்பத்துக்கு மிகவும் நெருங்கிய நண்பராக இருந்தார் விஜயகாந்த். அவரை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ஸ்டாலின், ரஜினி, திருநாவுக்கரசர் ஆகியோர் சந்தித்தபோது, `நாமும் சென்று சந்திக்கலாம்’ என்ற மனநிலையில் இருந்தார் ஜி.கே.வாசன். இதைப் பற்றி எங்களிடம் பேசும்போது, `இப்போது சென்று சந்தித்தால், அது தேவையற்ற விமர்சனங்களை ஏற்படுத்திவிடும்’ எனக் கூறிவிட்டு அமைதியாக இருந்துவிட்டார். இப்போது கூட்டணி உறுதியாகிவிட்டதால், மரியாதை நிமித்தமாக சந்திக்கச் சென்றோம். த.மா.கா பொதுச் செயலாளர்கள் முனவர் பாட்ஷா, விடியல் சேகர், முன்னாள் எம்.பி வேலு முதலியார், முன்னாள் கவுன்சிலர் ரவிபாரதி உட்பட முக்கிய நிர்வாகிகளும் உடன் வந்தனர்.

வீட்டுக்குள் நுழைந்ததும், `வாங்க சின்னய்யா... நல்லா இருக்கீங்களா?’ எனக் கேட்டார் விஜயகாந்த். இந்த வார்த்தையால் நெகிழ்ந்த ஜி.கே.வாசன், ``தமிழக மக்கள் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் உள்ள மக்கள் நீங்கள் உடல்நலம் பெற வேண்டும் என விரும்புகிறார்கள். எங்கள் அப்பாவுக்கு நீங்கள் நெருக்கமான நண்பராக இருந்தீர்கள். நீங்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் உங்கள் தலைமையில் செயல்பட்டோம். இப்போதும் நாம் ஓரணியில் இருக்கிறோம். இந்த அணியின் வெற்றிக்கு முழுமையான ஒத்துழைப்பைக் கொடுப்போம்’’ என்றார். 

இதன் பிறகு பேசிய முனவர் பாட்ஷா, ``உங்களுக்கு ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். அய்யா மூப்பனார் குறித்து நான் கேசட் ஒன்றை வெளியிட்டேன். அந்தக் கேசட்டை நீங்கள் வெளியிட்டீர்கள். பாண்டிச்சேரி சபாநாயகராக இருந்த கண்ணன், அந்தக் கேசட்டைப் பெற்றுக்கொண்டார். `இந்த நிகழ்ச்சிக்கு நீங்கள் போகக் கூடாது’ என சிலர் உங்களைத் தடுத்தார்கள். அதைப் பற்றி மேடையில் பேசிய நீங்கள், `நான் 3 தலைவர்களைத்தான் பெரிதும் மதிக்கிறேன். ஒன்று கலைஞர், இரண்டாவது மூப்பனார், மூன்றாவது வி.என்.ஜானகி. இந்த 3 பேர் விஷயத்தில் யாரும் என்னைத் தடுக்க முடியாது. முனவருக்குச் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றவே வந்தேன்' எனக் கூறினீர்கள்' என நினைவுபடுத்த, `ஆமாம்... ஆமாம்’ எனத் தலையாட்டினார் விஜயகாந்த். 

அடுத்ததாக, சாலிகிராமம் பகுதியின் முன்னாள் கவுன்சிலர் ரவிபாரதி பேசும்போது, ``நான் இந்த வட்டத்துக்குக் கவுன்சிலராக இருந்தேன். உங்களை வந்து அடிக்கடி பார்ப்பேன்’’ எனக் கூறினார். இதற்குப் பதில் அளித்த சுதீஷ், ``96-ம் ஆண்டு த.மா.கா கவுன்சிலராக இவர் இருந்தார். அப்போது எந்தப் பிரச்னையாக இருந்தாலும் எங்கள் வீட்டுக்கு வந்து போவார்’’ என்றார். தொடர்ந்து பேசிய ஜி.கே.வாசன், ``இவர்கள் உங்களுடனான பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொள்ள வந்திருக்கிறார்கள்’’ எனக் கூற, ``உங்களைப் பார்த்து ரொம்ப நாள் ஆகிறது’’ என்றார் விஜயகாந்த்.

``ஆமாம். கடைசியாக திருச்சி மீட்டிங்கில் உங்களைப் பார்த்தேன். அதன்பிறகு பார்க்க முடியவில்லை. நீங்கள் சிகிச்சைக்காகச் சென்றபோது, நல்லபடியாக திரும்பி வர வேண்டும் எனப் பிரார்த்தனை செய்தோம். நீங்கள் செய்த தர்மமும் மக்கள் பிரார்த்தனையும்தான் உங்களைக் காப்பாற்றியது’’ என்றார் உருக்கமாக. இதையடுத்துப் பேசிய பிரேமலதா, ``நல்லபடியாகக் குணமாகிவிட்டார். மீண்டும் பழையபடி வருவார்’’ என்றார் அமைதியாக. மொத்தத்தில் விஜயகாந்த்தை நெகிழ வைக்கும்விதமாக இந்தச் சந்திப்பு நடந்தது’’ என்கின்றனர் உற்சாகத்துடன்.