Published:Updated:

அ.ம.மு.க-வின் `அடேங்கப்பா’ தேர்தல் வியூகம் குறித்து சி.ஆர்.சரஸ்வதி!

அ.ம.மு.க-வின் `அடேங்கப்பா’ தேர்தல் வியூகம் குறித்து சி.ஆர்.சரஸ்வதி!
அ.ம.மு.க-வின் `அடேங்கப்பா’ தேர்தல் வியூகம் குறித்து சி.ஆர்.சரஸ்வதி!

பணத்துக்காகக் கூட்டணி அமைத்து கொள்கையைக் காற்றில் பறக்கவிடுகிற கட்சி அ.ம.மு.க இல்லை. தேர்தலுக்குக் கூட்டணி முக்கியம்தான். ஆனால், அது வெற்றியைத் தீர்மானித்துவிடாது.

டைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக, அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணியை இறுதி செய்து, தேர்தல் பிரசாரத்துக்காக வண்டியைக் கிளப்பிவிட்டார்கள். ஆனால், ஒருசில கட்சிகளின் அடுத்தகட்ட நகர்வுகள் என்னவென்றே தெரியவில்லை. அப்படியான கட்சிகளில் டி.டி.வி.தினகரன் தலைமை வகிக்கும் அ.ம.மு.க-வும் ஒன்று. கட்சியின் துணைப் பொதுச் செயலாளராகவும் ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ-வுமான டி.டி.வி.தினகரன் இன்னமும் எந்தக் கட்சியுடனும் ஏன் கூட்டணி வைக்கவில்லை? அல்லது வேறு எந்தக் கட்சியும் தினகரன் கூட்டணியை விரும்பவில்லையா என்ற கேள்வி எழுகிறது. இந்தச் சூழலில் அ.ம.மு.க தேர்தல் வியூகம் பற்றி தெரிந்துகொள்ளும் பொருட்டு அந்தக் கட்சியின் செய்தித்தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதியிடம் பேசினோம். 

``தமிழகத்தைப் பொறுத்தவரை, கூட்டணி என்பதே செட்டில்மென்ட் என்றாகிவிட்டது. அதற்கு ஆகச்சிறந்த உதாரணம் அ.தி.மு.க உருவாக்கியுள்ள கூட்டணி. இந்த மாதிரி ஒரு கூட்டணியை என் வாழ்நாளில் நான் பார்த்ததே இல்லை. யாரை ஊழல் ராணி என சித்திரித்து, புத்தகம் போட்டார்களோ, யாருக்கு மணி மண்டபம் கட்டக்கூடாது என அறிக்கை விட்டார்களோ, அந்தக் கட்சியினரை அம்மா பாடுபட்டு வளர்த்த கட்சியின் கூட்டணியில் சேர்க்க எப்படி இவர்களால் முடிந்தது? அதுபோலவே, அம்மா எதிரில் இருக்கும்போதே சட்டசபையில் நாக்கைக் கடித்து, கையை நீட்டிப் பேசியவர் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த். ஒருமுறை அம்மா சொன்னார்கள். `என் வாழ்நாளில் நான் செய்த மிகப்பெரிய தவறு என்றால், அது தே.மு.தி.க-வுடன் கூட்டணி வைத்ததுதான்; இனி தே.மு.தி.க-வுக்கு அழிவு ஆரம்பம்’ என்றார். அவர் சொன்னது போலவே அவர்களின் வாக்குசதவிகிதம் ஒரு சதவிகிதத்தில் வந்து நிற்கிறது. அம்மா இருந்திருந்தால் இந்த இரு கட்சிகளையும் பக்கத்திலேயே சேர்த்திருக்க மாட்டார். அவர்களுடன் கூட்டணி வைத்து, எங்களை நாங்கள் கறைப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. உண்மையாகவே அம்மாவின் வழிநடப்பது நாங்கள்தான். அது நாட்டு மக்களுக்குத் தெரியும்’’ என்றவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.  

``தி.மு.க-வுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை?’’

``தி.மு.க-வுடன் காங்கிரஸ், வி.சி.க, கம்யூனிஸ்ட் கட்சிகள் நீண்டகாலமாகப் பயணித்துக் கொண்டிருக்கின்றன. அவர்களுடன் நாங்கள் சேர்வதற்கு வாய்ப்பே இல்லை. அதற்கான சூழலை நாங்கள் உருவாக்கிக்கொள்ளவும் இல்லை. சொல்லப்போனால் எந்தக் கட்சியுடனும் நாங்கள் கூட்டணி வைக்கத் தயராக இல்லை. டி.டி.வி.தினகரன் இதுகுறித்து இன்னும் விரிவாக ஊடகங்களின் முன் பேசுவார்.’’

``தேர்தலில் கூட்டணி என்பது முக்கிய அம்சம்தானே?’’

``பதவிக்காக, பணத்துக்காகக் கூட்டணி அமைத்துக் கொள்கையை காற்றில் பறக்கவிடுகிற கட்சி அ.ம.மு.க இல்லை. தேர்தலுக்குக் கூட்டணி முக்கியம்தான். ஆனால், அது மட்டுமே வெற்றியைத் தீர்மானித்துவிடாது. மக்களின் அபிமானமும் முக்கியம். அது டி.டி.வி. தினகரனுக்கு நிறையவே இருக்கிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் சகல பலத்துடன் இருந்தார்களே. ஆனால், மக்களின் பலத்தைப் பெற்று, தினகரன் வெற்றி பெறவில்லையா. அதேபோல் இந்தத் தேர்தலிலும் அது நடக்கப்போவதைப் பார்க்கத்தான் போகிறீர்கள். அ.ம.மு.க அமைதியாக இருக்கிறதென்று நினைக்க வேண்டாம். மக்கள் எங்கள் பக்கம் இருக்கும்போது, வெற்றுக் கூச்சல்கள் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை.’’

``உங்களுக்குத் தேர்தலில் போட்டியிட விருப்பமில்லையா?’’

``நானும் தேர்தலில் வேட்பாளராக நின்று, மக்களுக்குச் சேவை செய்ய வேண்டுமென்ற ஆர்வம் இருக்கிறது. ஆனால், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் நிற்க மாட்டேன். எங்கள் கட்சிக்காக, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரிப்பேன். அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் கட்சித் தலைமை கட்டளையிட்டால் போட்டியிடுவேன். அப்போது பார்க்கலாம்.’’

தற்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தனது முதற்கட்ட வேட்பாளர்களை அறிவித்துள்ளது. 

அடுத்த கட்டுரைக்கு