Published:Updated:

''அடுத்து நகராட்சிக்கு இடைத்தேர்தலா?''

ஜெ.அறிவிப்பை எதிரிக்கும் கருப்பசாமி ஆதரவாளர்கள்

''அடுத்து நகராட்சிக்கு இடைத்தேர்தலா?''

ஜெ.அறிவிப்பை எதிரிக்கும் கருப்பசாமி ஆதரவாளர்கள்

Published:Updated:
##~##

டைத்தேர்தலுக்கான முறையான அறிவிப்பு வருவதற்கு முன்பாகவே, சங்கரன்கோவில் தொகுதிக்கான வேட்பாளரை அறிவித்து ரேஸில் முதல் ஆளாக இறங்கி விட்டார் ஜெயலலிதா.

 கருப்பசாமியின் மறைவைத் தொடர்ந்து, பிப்ரவரி 15-ம் தேதிக்குள் சங்கரன்கோவில் தொகுதியில் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயத்தில் தேர்தல் ஆணையம் உள்ளது. தொகுதி யைத் தக்கவைக்கும் முயற்சியில் முன்கூட்டியே அ.தி.மு.க. சுறுசுறுப்பானதால், நான், நீ எனப் பலரும் போட்டியிட ஆர்வம் காட்டினார்கள். ஆனால், யாருமே எதிர்பார்க்காத வகையில், சங்கரன்கோவில் நகராட்சித் தலைவராக இருக்கும் முத்துச்செல்வியை கட்சியின் வேட்பாளராக ஜெயலலிதா திடீரென அறிவித்து விட்டார். இந்த அறிவிப்புக்கு, மறைந்த அமைச்சர் கருப்பசாமியின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தி. இதனால் அவரது சொந்த ஊரான புளியம்பட்டியில் கறுப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பைத் தெரிவித்ததுடன், கொடிக் கம்பத்தில் பறந்த கட்சிக்கொடியையும் அரைக் கம்பத்துக்கு இறக்கினார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''அடுத்து நகராட்சிக்கு இடைத்தேர்தலா?''

கொந்தளிப்பில் இருந்த கருப்பசாமியின் ஆதர வாளர்களிடம் பேசியபோது, ''கடைசி வரைக்கும் கட்சிக்கும் அம்மாவுக்கும் விசுவாசமாக இருந்தவர் கருப்பசாமி. சாதாரண எம்.எல்.ஏ-க்கள்கூட தங்களுடைய குழந்தைகளை வெளிநாட்டில் படிக்கவைக்கும் இந்தக் காலத்தில், நான்கு முறை எம்.எல்.ஏ-வாகவும் இரண்டு முறை அமைச்சராகவும் இருந்த அவர் தனது குடும்பத்துக்காக எதையுமே சேர்க்கவில்லை. கல்லூரிப் பக்கம்கூட போகாத மகளும் ஆசிரியர் பயிற்சி முடித்திருக்கும் மகனும்தான் அவரது சொத்துக்கள். இந்த அளவுக்கு நேர்மையாகவும் கட்சிக்கு விசுவாசியாகவும் இருந்த ஒருவரின் குடும்பத்துக்கு இடைத்தேர்தலில் வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டாமா? அவருடைய குடும்பத்தினருக்குத் தர விருப்பம் இல்லை என்றால்கூட, அவருக்கு வேண்டியவர்களுக்காவது கொடுத்திருக்கலாம். கருப்பசாமியின் மருமகன் நம்பிராஜன் ஸீட் கேட்டிருந்தார். மறைந்த கருப்பசாமிக்கு நெருக்கமானவரும் இதே ஊரைச் சேர்ந்தவருமான கே.கருப்பசாமி என்பவரும் வாய்ப்புக் காகக் காத்திருந்தார். அவர்களில் யாருக்காவது கொடுத்திருக்கலாம். ஆனால் சம்பந்தமே இல்லாமல் நகராட்சி சேர்மனாக இருக்கும் முத்துச்செல்விக்கு வாய்ப்பு தந்திருக்கிறார்கள். இதனால் இந்த இடைத்தேர்தலுக்குப் பிறகு, நகராட்சித் தலைவருக்கான இடைத்தேர்தலை நாங்கள் சந்திக்க வேண்டியிருக்கும். இது தேவைதானா?'' என்று ஆதங்கப்பட்டனர்.

''அடுத்து நகராட்சிக்கு இடைத்தேர்தலா?''

புளியம்பட்டியில் கட்சிக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டதையும் கறுப்புக்கொடி ஏற்றப் பட்டதையும் கேள்விப்பட்ட சங்கரன்கோவிலைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்திய பிறகே பதற்றம் கொஞ்சம் தணிந்திருக்கிறது. வேட்பாளர் அறிவிப்பு செய்யப்பட்ட தினம், சங்கரன்கோவில் முப்பிடாதி அம்மன் கோவில் திடலில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான செந்தூர்பாண்டியன் தலைமையில் நடந்த இந்த பொதுக்கூட்டத்தில் வேட்பாளர் முத்துச்செல்வி மேடையில் ஏற்றப்பட்டு, எம்.எல்.ஏ. வேட்பாளராக அறிமுகம் செய்யப்பட்டார்.

''அடுத்து நகராட்சிக்கு இடைத்தேர்தலா?''

அப்போது பேசிய செந்தூர்பாண்டியன், 'இந்தத் தொகுதி அ.தி.மு.க-வின் கோட்டை. அதை நிரூபிக்கும் வகையில் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறப் பாடுபட வேண்டும். நமக்குள் எந்த கருத்து வேறுபாடும் இருக்கக் கூடாது'' என்று வலியுறுத்தினார்.

வேட்பாளர் முத்துச்செல்வியிடம் பேசினோம். ''கட்சியின் அடிமட்டத் தொண்டராகப் பணியாற்றிய எனக்கு, நகராட்சித் தேர்தலில் போட்டியிட அம்மாதான் வாய்ப்பு கொடுத்தார். கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்களின் அயராத உழைப்பால் 42 வருடங்களுக்குப் பிறகு இந்த நகராட்சியைக் கைப்பற்றி வெற்றிக்கனியை அம்மாவின் காலடியில் சமர்ப்பித்தோம். கட்சியில் எனக்கு அம்மாவைத் தவிர யாரையும் தெரியாது. அதனால் யாருடைய சிபாரிசுக்கும் நான் போனது இல்லை. ஆனாலும் அம்மாவே எனக்கு இன்னொரு வாய்ப்பும் கொடுத்திருக்காங்க.

இதற்காக நான் வாழ்நாள் முழுவதும் அவருக்கு கடமைப்பட்டு இருக்கேன். இந்தத் தொகுதி மக்களிடம் சாதி, மத பேதங்கள் எதுவும் பார்க் காமல் அம்மாவின் கட்டளைக்கு ஏற்ற வகையில் செயல்பட்டு மறைந்த அமைச்சர் கருப்பசாமி விட்டுச் சென்றிருக்கும் பணிகளைத் தொடர்வேன்'' என்றார்.

அ.தி.மு.க. திடீரெனப் புலிப்பாய்ச்சல் பாய்ந்திருக்கும் நிலையில், ம.தி.மு.க-வினர் அசராமல் பிரசார வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கிராமங்கள் தோறும் செல்லும் ம.தி.மு.க-வினர், ''முல்லைப் பெரியாறு, இலங்கைத் தமிழர் விவகாரம், மூன்று தமிழர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்வது, ஸ்டெர்லைட் ஆலை, கூடங்குளம் அணுஉலை என எங்கெல்லாம் தமிழர்கள் பாதிக்கப்பட்டாலும் அதற்காகக் கொடுக்கப்படும் முதல்குரல் வைகோ வுடையது. இதை மனதில்வைத்து நல்ல முடிவை எடுங்கள்'' என ஒவ்வொரு வாக்காளருக்கும் பாடம் எடுக்கிறார்கள்.

இரண்டு கட்சிகள் வேகம் எடுத்துவிட்ட நிலை யிலும் தி.மு.க-வும் தே.மு.தி.க-வும் இன்னமும் களத்தில் இறங்கவில்லை. இந்த இரண்டு கட்சிகளும் எடுக்க இருக்கும் முடிவுகளைப் பொறுத்துத்தான், அ.தி.மு.க-வின் அடுத்த கட்ட செயல்பாடுகள் இருக்கும். கடுமையான போட்டி இருந்தால், 'திருமங்கலம் ஃபார்முலா’வை அ.தி.மு.க. கையில் எடுக்கும் என்று காத்துக்கிடக்கிறார்கள் தொகுதிவாசிகள்.

- ஆண்டனிராஜ்

படங்கள்: எல்.ராஜேந்திரன்