Published:Updated:

குஜராத்தில் ஜிக்னேஷ் மேவானி; உத்தரப்பிரதேசத்தில் சந்திரசேகர் ஆசாத்... பிரியங்கா பிளான்!

குஜராத்தில் ஜிக்னேஷ் மேவானி; உத்தரப்பிரதேசத்தில் சந்திரசேகர் ஆசாத்... பிரியங்கா பிளான்!
குஜராத்தில் ஜிக்னேஷ் மேவானி; உத்தரப்பிரதேசத்தில் சந்திரசேகர் ஆசாத்... பிரியங்கா பிளான்!

ரசியல் கட்சிகளின் அடுத்தடுத்த நகர்வுகள், தேர்தல் களத்தில் விறுவிறுப்பைக் கூட்ட ஆரம்பித்துள்ளன. தேர்தல் அறிவிப்புக்கு முன்னால் பல விமர்சனங்களை முன்வைத்து வந்த கட்சிகள், அவற்றை எல்லாம் மறந்து, கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கத் தயாராகி உள்ளன. மோடியை எதிர்த்துப் போட்டியிட உள்ளதாக ‘பீம் ஆர்மியின்’ தலைவர் சந்திரசேகர் ஆசாத் அறிவித்துள்ள நிலையில் `காங்கிரஸ் கட்சியினர் சந்திரசேகர் ஆசாத்துக்கு ஆதரவு தெரிவிப்பார்கள்’ என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சம்பவங்கள் இந்தியாவின் பிரதமர்களைத் தீர்மானிக்கும் மாநிலமாக உள்ள உத்தரப்பிரதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி அவருடைய சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள வதோரா தொகுதியிலும், உத்தரப்பிரதேசத்தில் உள்ள வாரணாசி தொகுதியிலும் போட்டியிட்டு இரண்டு தொகுதியிலும் வெற்றி பெற்றார். அதன் பின் வதோரா தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இந்தநிலையில் இன்னும் சில வாரங்களில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் மோடி மீண்டும் வாரணாசியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. உத்தரப்பிரதேசத்தில் பட்டியலின மக்களின் பிரச்னைகளுக்கான போராட்டங்களை முன்னெடுத்து வரும் ‘பீம் ஆர்மி’ அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மோடியை இந்தத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் வெற்றிபெற விடமாட்டேன். மோடியை எதிர்த்துப் போட்டியிட உள்ளேன். எனக்குப் பதவி மீது ஆசையில்லை. அப்படி இருந்திருந்தால் தனித் தொகுதியில் போட்டியிட்டிருப்பேன்” என்று கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் பட்டியலின மக்கள் அதிகம் வசித்துவரும் மேற்குப் பகுதியில் அம்மக்களின் தலைவராக உருவெடுத்து வருபவர் சந்திரசேகர் ஆசாத். சஹாரான்பூர் பகுதியில் பட்டியலினத்தவர்களுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும்  இடையே நடந்த பிரச்னையின்போது பட்டியலினத்தவர்கள் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்துக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுத்ததன் மூலம் பெருவாரியான தலித் இளைஞர்களின் ஆதரவைப் பெற்றார். தற்போது லட்சக்கணக்கான இளைஞர்கள், பீம் ஆர்மி அமைப்பில் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் பீம் ஆர்மி அமைப்பின் சார்பில் சஹாரான்பூர் நகரிலிருந்து டெல்லி வரையிலான மோட்டார் சைக்கிள் பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தப் பேரணியானது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானதாக உள்ளது என்று கூறி,  அதற்குத் தடைவிதிக்கப்பட்டது. சந்திரசேகர் ஆசாத் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கடந்த புதன்கிழமை சந்திரசேகர் ஆசாத்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், மீரட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தின் கிழக்குப் பகுதிப் பொறுப்பாளராக காங்கிரஸ் சார்பில் நியமிக்கப்பட்ட சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி, மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சைப் பெற்றுவரும் சந்திரசேகர் ஆசாத்தைச் சந்தித்து நலம் விசாரித்தது அரசியல் வட்டாரங்களில் மேலும் பரபரப்பைக் கூட்டியது. உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற்று, பெரும்பான்மையான பலத்துடன் ஆட்சியில் உள்ளது. இந்நிலையில் பி.ஜே.பி-க்கு எதிராக வலுவான கூட்டணியை கட்டமைக்கக் காங்கிரஸ் கட்சி முயன்றது. மாயவதி - அகிலேஷ் யாதவ் இருவரும் காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்துத் தேர்தலைச் சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காங்கிரஸை தவிர்த்து சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் கூட்டணி அமைந்தது. ராகுல் காந்தி, சோனியா காந்தி போட்டியிடும் அமேதி, ரேபரேலி தொகுதிகளைத் தவிர்த்து மற்ற 78 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தனர்.. உத்தரப்பிரதேசத்தில் முக்கிய தலித் தலைவராக உள்ள மாயாவதிக்கு சந்திரசேகர் ஆசாத்தை பிரியங்கா சந்தித்தது அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் கருத்துகள் வெளியாகியுள்ளன. 

மற்றொரு புறம், 2017-ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி-க்கு எதிராக, உன்னா போராட்டத்தின் மூலம் தலித் தலைவராகக் கவனம் பெற்ற ஜிக்னேஷ் மேவானி மற்றும் படேல் சமூகத்தைச் சேர்ந்தவர்களின்  இடஒதுக்கீட்டிற்காக போராட்டங்களை முன்னெடுத்த ஹர்திக் படேல் ஆகியோரைக் காங்கிரஸ் தங்களின் ஆயுதங்களாகப் பயன்படுத்தியது. வதேகம் தொகுதியில் ஜிக்னேஸ் மேவானி போட்டியிட்ட போது,  காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்தாமல் ஜிக்னேஷ் மேவானிக்கு ஆதரவு அளித்து அவரை வெற்றி பெறச் செய்தது. காங்கிரஸ் கட்சியின் இந்தப் புதிய அணுகுமுறை கடந்த காலத்தில் பி.ஜே.பியின் கோட்டை எனக் கருதப்படும் குஜராத்தில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. அதேபோல் கடந்த மார்ச் 12-ம் தேதி ஹர்திக் படேல் ராகுலின் முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார்.

இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தைப் பொறுத்தவரை தலித் மக்களின் ஓட்டுகள் வெற்றியைத் தீர்மானிப்பவையாக உள்ளன. மாயாவதியுடனான கூட்டணிக்கு வாய்ப்பில்லாமல் போனதால். பி.ஜே.பி-க்கு எதிராகக் காங்கிரஸை வலுப்பெறச் செய்ய, குஜராத்தில் ஜிக்னேஷ் மேவானியை பயன்படுத்தியதைப்போல உத்தரப்பிரதேசத்தில் சந்திரசேகர் ஆசாத்தைப் பயன்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் இறங்கியுள்ளது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

கூட்டணிகளும் ஆதரவுகளும் கொள்கைரீதியாக அமைதல் ஜனநாயகத்துக்கு நல்லது!