Published:Updated:

`தாமரைக் கட்சி; கத்தோலிக்க பாசம்’ - கோவாவில் மனோகர் பாரிக்கர் செய்த மேஜிக் என்ன?

`தாமரைக் கட்சி; கத்தோலிக்க பாசம்’ - கோவாவில் மனோகர் பாரிக்கர் செய்த மேஜிக் என்ன?
`தாமரைக் கட்சி; கத்தோலிக்க பாசம்’ - கோவாவில் மனோகர் பாரிக்கர் செய்த மேஜிக் என்ன?

`தாமரைக் கட்சி; கத்தோலிக்க பாசம்’ - கோவாவில் மனோகர் பாரிக்கர் செய்த மேஜிக் என்ன?

கோவா மாநிலம் கண்ணீரில் நனைந்து கிடக்கிறது. இந்த மாநில மக்கள் மிகவும் நேசித்த தலைவர் மனோகர் பாரிக்கர் மறைந்து விட்டார். உடல் குன்றிய நிலையிலும் மூக்கில் குழாயுடன் அவர் ஆற்றிய பணிகள் மறக்க முடியாதவை. ஊழலிலும் ஆடம்பரத்திலும் திளைக்கும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் காலில் சாதாரண கோலாப்பூர் செருப்பு  அணிந்துகொண்டு பாதுகாப்புத்துறை அமைச்சராக பணியாற்றியவர். அரை கை சட்டைதான் பாரிக்கருக்கு மிகவும் பிடித்தமானது. `எனக்கு எது வசதியாகப் படுகிறதோ அந்த உடையை அணிகிறேன்' என்று தன் டிரெஸ்சிங் சென்ஸ் பற்றி மனோகர் பாரிக்கர் சொல்லிக் கொள்வார். 1955-ம் ஆண்டு சாதாரண பாரா என்ற கிராமத்தில் மிடில்கிளாஸ் குடும்பத்தில் பிறந்த மனோகர் பாரிக்கர் மெத்தப் படித்தவர். மும்பை ஐ.ஐ.டி-யில் உலோகவியல் துறையில் இன்ஜினீயரிங் பட்டம் பெற்றவர். 

`தாமரைக் கட்சி; கத்தோலிக்க பாசம்’ - கோவாவில் மனோகர் பாரிக்கர் செய்த மேஜிக் என்ன?

ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் ஈடுபாடு கொண்டு பின்னர் அரசியலுக்குள் நுழைந்த மனோகர் பாரிக்கர் 2000-ம் ஆண்டு முதல் 4 முறை கோவா மாநில முதல்வராக இருந்துள்ளார். பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற பிறகு 3 ஆண்டுகள் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் இருந்தார். உரி தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் மனோகர் பாரிக்கர் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தபோதுதான் நடத்தப்பட்டது தேசத்தின் மீது அலாதி பற்று கொண்ட பாரிக்கர். உரி தாக்குதலை இந்தியாவுக்கும் ராணுவத்துக்கும் ஏற்பட்ட அவமானமாகவே கருதினார். அதனால், 'எந்தளவுக்கு இறங்கி அடிக்க முடியுமோ அடியுங்கள் ' என்று ராணுவத்துக்கு அனுமதி அளித்தார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 38 தீவிரவாதிகள் 2 பாகிஸ்தான் ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர். பாதுகாப்புத்துறை அமைச்சராக மனோகர் பாரிக்கர் இருந்தபோதுதான்,  ஒரு பதவி ஒரு பென்சன் திட்டத்தை இந்திய ராணுவத்தில் அமல்படுத்தினார். 

தொடர்ந்து, 2017- ம் ஆண்டு கோவா மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டதால் மீண்டும் மாநில அரசியலுக்குத் திரும்பி கோவா முதல்வர் ஆனார். முதல்வராகவே உயிரையும் துறந்தார். 2018- ம் ஆண்டு மும்பை லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கணைய புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்கா மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றார். எனினும், காலன் அறிவார்ந்த ஒரு தலைவரை பறித்துவிட்டான். உலக புற்றுநோய் தினத்தன்று 'எத்தகைய நோயையும் எதிர்கொள்ளும் திறன் மனிதனுக்கு உண்டு'  என்று மனோகர் பாரிக்கர் ட்விட் செய்திருந்தார். சொன்னது போலவே புற்றுநோய் தீவிரமானபோது, கூட மனோகர் பாரிக்கர் கடமையாற்றத் தவறியதில்லை. 

`தாமரைக் கட்சி; கத்தோலிக்க பாசம்’ - கோவாவில் மனோகர் பாரிக்கர் செய்த மேஜிக் என்ன?

1984-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிடப் போவதாக மனோகர் பாரிக்கர் அறிவித்ததும், முதலில் அவரின் மனைவிதான் எதிர்ப்பு தெரிவித்தார்.  மனோகர் பாரிக்கரின் பெற்றோரும் மகன் அரசியலில் ஈடுபடுவதை  விரும்பவில்லை. பெற்றோர், மனைவியை சரிக்கட்டி  1991-ம் ஆண்டு வட கோவா நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஹாரீஸ் சான்யே வெற்றி பெற்றார். எனினும், மனோகர் பாரிக்கருக்கு 26,000 ஓட்டுகள் கிடைத்தது. இத்தனைக்கும் கோவா மாநிலம் காங்கிரஸின் கோட்டையாக இருந்தது. இதுதான் மனோகர் பாரிக்கர் சந்தித்த முதல் தேர்தல்.

1994-ம் ஆண்டு பானாஜி தொகுதியில் இருந்துமுதன்முறையாக எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசியலில் இவர்கண்ட முதல் வெற்றி இது. பாரதிய ஜனதா கட்சியில் கத்தோலிக்க மக்கள் இணைந்து பணியாற்ற விரும்புவார்களா? மனோகர் பாரிக்கர் தலைமையில் அதுவும் நடந்தது. 2012-ம் ஆண்டு கோவா மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி அபார வெற்றி பெற்றது. இந்தத் தேர்தலில் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த 7 பேருக்கு சீட் வழங்கினார் பாரிக்கர். இவர்கள் 7 பேருமே வெற்றி பெற்றனர். கோவா துணை முதல்வர் பிரான்ஸிஸ்கோ டி சூசா கூட கத்தோலிக்க மத்தைச் சேர்ந்தவர்தான். பொதுவாக பாரதிய ஜனதா கட்சிக்கு கிறிஸ்தவ மக்களின் ஆதரவு கிடைக்காது. ஆனால், மனோகர் பாரிக்கர் காலத்தில் பாரதிய ஜனதா கட்சியில் கத்தோலிக்க மக்களும் தங்களை இணைத்துக்கொண்டு பணியாற்றினர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கோவா மாநில பாரதிய ஜனதா கட்சியில் கத்தோலிக்கர்களும் அதிகம். 

பிரதமர் நரேந்திர மோடிக்கும் பாரிக்கருக்கும் நெருக்கம் அதிகம். குஜராத் முதல்வராக இருந்த மோடியை 2013-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தது. கட்சிக்குள் தன் எதிர்ப்பாளர்களைச் சரி கட்ட மனோகர் பாரிக்கரைத்தான் மோடி பயன்படுத்தினார். கோவாவில் நடந்த பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டத்தில்தான் பிரதம வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  மனோகர் பாரிக்கருக்கு ஸ்கூட்டர் ஓட்டுவது பிடித்தமான விஷயம். பனாஜியில் ஸ்கூட்டரில் சந்தைக்குச் சென்று பொருள்களை வாங்குவதும் உண்டு. மிகவும் எளிமையான மனிதரான மனோகர் பாரிக்கரின் மறைவு கோவாவுக்கு மட்டுமல்ல நாட்டுக்கே பெரும் இழப்பு. 

அடுத்த கட்டுரைக்கு