Published:Updated:

` அரசியலுக்காக புதுப்புது டிரெண்ட் எடுக்கிறார்கள்!'  - தினகரனை ஏன் சந்தித்தார் வீரலட்சுமி? 

` அரசியலுக்காக புதுப்புது டிரெண்ட் எடுக்கிறார்கள்!'  - தினகரனை ஏன் சந்தித்தார் வீரலட்சுமி? 
` அரசியலுக்காக புதுப்புது டிரெண்ட் எடுக்கிறார்கள்!'  - தினகரனை ஏன் சந்தித்தார் வீரலட்சுமி? 

அரசியலுக்காக அவர்கள் என்னவெல்லாம் டிரெண்ட் எடுக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டோம். கடந்த ஓராண்டாகத்தான் தினகரன் அண்ணாவைப் பற்றி எங்களுக்குத் தெரிகிறது. அதனால்தான் அவருக்கு நாங்கள் ஆதரவு கொடுக்கிறோம்.  

அ.ம.மு.க துணைப் பொதுச் செயலாளர் தினகரனைச் சந்தித்து ஆதரவு கொடுத்திருக்கிறார் தமிழர் முன்னேற்றப்படையின் வீரலட்சுமி. கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி சார்பாக, பல்லாவரம் தொகுதியில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டவர், இன்று அ.ம.மு.க-வை ஆதரிக்கத் தொடங்கியிருக்கிறார். 

வீரலட்சுமியிடம் பேசினோம். 

அ.ம.மு.க-வுக்கு ஏன் திடீர் ஆதரவு? 

`` தமிழர் நலனை முன்னிறுத்தி, 15 கோரிக்கைகளை அவரிடம் (தினகரன்) வலியுறுத்திக் கூறினோம். அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக அண்ணனும் உறுதியளித்திருக்கிறார். அதனால் அவருக்கு ஆதரவு தருகிறோம்." 

அதென்ன 15 கோரிக்கைகள்? 

`` நாங்கள் ஏற்கெனவே வலியுறுத்தி வரும் கோரிக்கைகள்தான். ஆந்திர சிறையில் வாடும் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை மீட்க வேண்டும், தமிழர்களின் வேலைவாய்ப்பை வடமாநிலத்தவர்கள் தட்டிப் பறிக்கக் கூடாது. அதைத் தடுத்து நிறுத்த வேண்டும். தமிழர்களுக்கு 95 சதவிகித வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும். 7 தமிழர்கள் விடுதலை, கெயில், நியூட்ரினோ எனத் தமிழ் மண்ணை அழிக்கக் கூடிய திட்டங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு வலியுறுத்திக் கூறியிருக்கிறோம்." 

அ.ம.மு.க-வுக்கு என ஒரே எம்.எல்.ஏ-வாக தினகரன் இருக்கிறார். அவரால் இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும் என எந்த நம்பிக்கையில் சொல்கிறீர்கள்? 

`` தமிழ் மக்களின் நலன்களை முன்னிறுத்தி கடந்த 8 ஆண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறேன். மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கூடிய எண்ணம், இப்போது இருக்கும் எடப்பாடி அரசுக்குக் கிடையாது. ஆட்சியைத் தக்கவைப்பது மட்டும்தான் அவர்களுடைய நோக்கமாக இருக்கிறது. அவர்களுக்குப் பதவி மட்டும்தான் தேவை. மக்களுக்காக போராடுகிறவர்கள் மீது பொய் வழக்குகளைப் போட்டுத் தண்டிக்கிறார்கள். இந்தக் காரணத்துக்காக நாங்கள் எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வத்தையும் கடுமையாக எதிர்க்கிறோம். தி.மு.க, காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடியதால் சிறைக்குச் சென்றேன். அந்த வழக்கை இன்றளவும் சந்தித்துக் கொண்டிருக்கிறேன். காங்கிரஸ் தலைமையிலான அணிக்கும் எங்களால் ஆதரவு தர முடியாது." 

தினகரனின் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?

`` அவர் சொல்வதில் உண்மை இருக்கிறது, நேர்மை இருக்கிறது. தமிழ்நாட்டில் ஆளுமைப்பண்பு உள்ளவராக இருக்கிறார். அவர் முதலமைச்சராக வந்தால், மக்களுக்கு நல்லது செய்வார். 40 மக்களவைத் தொகுதிகள், 18 தொகுதிகளின் இடைத்தேர்தல்களிலும் அ.ம.மு.க-வுக்காக நாங்கள் தேர்தல் வேலைகளைத் தொடங்க இருக்கிறோம்."

` டி.டி.வி-யோடு கூட்டு வைப்பதைவிட, நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகலாம்' என முன்பொரு முறை கூறியிருந்தீர்களே? 

`` இதற்குத் தெளிவாக பதில் சொல்ல வேண்டும் என நினைக்கிறேன். அந்தக் காலகட்டத்தில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, வாழ்வுரிமைக் கட்சி ஆகியவற்றில் இருந்தவர்கள், டி.டி.வி அண்ணனைப் பற்றித் தவறான கருத்துகளை கூறியிருந்தனர். அதை நம்பித்தான் அரசியல் விமர்சனங்களை முன்வைத்தேன். எனக்குத் தவறான தகவலைக் கூறிவிட்டு, இவர்கள் எல்லாம் வேறு கட்சிகளுக்கு ஆதரவு கொடுக்கச் சென்றுவிட்டார்கள். அந்தநேரத்தில் தினகரன் அண்ணாவைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. அவரை நேரில் சந்தித்ததும் கிடையாது. வாழ்வுரிமைக் கூட்டமைப்பில் இருந்து நாங்கள் தனியாக வந்துவிட்டதால், அரசியலுக்காக என்னவெல்லாம் அவர்கள் டிரெண்ட் எடுக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டோம். இப்போதுதான் கடந்த ஓராண்டாக தினகரன் அண்ணாவைப் பற்றி எங்களுக்குத் தெரிகிறது. அதனால்தான் அவருக்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம்.''  

சில மாதங்களுக்கு முன்பு, ` ஒரு தமிழராக எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கிறேன்' எனக் கூறியிருந்தீர்களே? 

`` இப்போதும் ஒரு தமிழராக அவர் செய்யக் கூடிய நல்ல விஷயங்களை ஆதரிக்கிறோம். கஜா புயல் பாதிப்பின்போது ஹெலிகாப்டரில் அவர் சென்றபோது விமர்சனம் செய்தேன். ஒரு பெண்ணாக நான் களத்தில் நின்று போராடும்போது, அதைக் காது கொடுத்துக் கேட்க வேண்டும். அப்படிச் செய்யாமல் எங்கள் மீது தேவையற்ற பொய் வழக்குகளைப் போடுகிறார். எங்கள் கட்சி நிர்வாகிகளைத் தீவிரவாதி போலவும் ரௌடிகள் போலவும் சித்திரிப்பதால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறோம்." 

பின் செல்ல