Published:Updated:

பா.ம.க-வோடு மோதும் 6 தொகுதிகள்! - ஸ்டாலின் களமிறக்கப் போகும் 2 பேர்

பா.ம.க-வோடு மோதும் 6 தொகுதிகள்! - ஸ்டாலின் களமிறக்கப் போகும் 2 பேர்
பா.ம.க-வோடு மோதும் 6 தொகுதிகள்! - ஸ்டாலின் களமிறக்கப் போகும் 2 பேர்

இடஒதுக்கீட்டைப் பெரிதாக நினைக்கக்கூடிய கட்சியாக பா.ம.க இருக்கிறது. ஆனால், முற்பட்ட பிரிவினருக்காக பா.ஜ.க கொண்டுவந்த 10 சதவிகித இடஒதுக்கீட்டை பா.ம.க எதிர்க்கவில்லை என்பதைத் தேர்தல் களத்தில் பிரதானமாகக்கொண்டு செல்ல உள்ளனர்.

பா.ம.க-வை 6 தொகுதிகளில் நேரடியாக எதிர்கொள்கிறது தி.மு.க. இந்தத் தொகுதிகளில், வன்னியர் வாக்குகளைக் கொண்டுவருவதற்கான வியூகத்தை வகுத்திருக்கிறார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். ` சமூகரீதியான வாக்குகளைக் கொண்டுவரும் வேலையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்' என தி.மு.க தலைமையிடம் கூறியுள்ளனர் ஆதரவு கட்சித் தலைவர்கள். 

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறார், தி.மு.க தலைவர் ஸ்டாலின். இந்தப் பட்டியலில் உள்ள பெரும்பாலான வேட்பாளர்களுக்கு எதிராக, எந்த அதிருப்தி குரல்களும் எழவில்லை. `` 40 மக்களவைத் தொகுதிகளோடு 18 சட்டமன்றத் தொகுதிகளிலும் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியிருப்பதால், வேட்பாளர் தேர்வில் மிகுந்த எச்சரிக்கையோடு இருந்தார் ஸ்டாலின். அப்படியும், ` பரமக்குடி வேட்பாளர் சம்பத் குமார், கட்சிக்கு வந்தே 5 ஆண்டுகள்தான் ஆகின்றன. அவரைத் தேர்வுசெய்தது சரியானதுதானா?' என்ற கேள்விகளும் எழுகின்றன" என விவரித்த தி.மு.க நிர்வாகிகள் சிலர்,

`` பல தொகுதிகளுக்கு நல்ல வேட்பாளர்களைத் தேர்வுசெய்திருக்கிறார் ஸ்டாலின். கட்சி, மூத்தவர்கள்... இளையவர்கள்... உழைத்த குடும்பத்தினர் ஆகியோருக்கு வாய்ப்பு தர வேண்டும் என்பதை சீனியர்கள் சிலர் வலியுறுத்திக் கூறினர். அதன்படி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, ஜெகத்ரட்சகன் ஆகியோருக்கும், இளையவர்களில் பொள்ளாச்சி சண்முகசுந்தரம், திருவண்ணாமலை அண்ணாதுரை போன்றவர்களுக்கும், கட்சிக்காக உழைத்த குடும்பம் என்ற வகையில் ஆற்காடு வீராசாமி மகன் கலாநிதி, துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த், பொன்முடி மகன் கவுதம சிகாமணி ஆகியோருக்கும் சீட் கொடுக்கப்பட்டுள்ளது. தென்சென்னை தொகுதியின் வேட்பாளரான தமிழச்சி, ஆங்கிலப் பேராசிரியராகவும் சமூக செயற்பாட்டாளராகவும் இருக்கிறார். எந்தவித அதிருப்திக்கும் இடம் கொடுக்காமல் வேட்பாளர்களைத் தேர்வுசெய்திருக்கிறார் ஸ்டாலின்" என்கின்றனர். 

அதேநேரம், பா.ம.க போட்டியிடக்கூடிய 7 தொகுதிகளுக்கும் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார் ஸ்டாலின். இதுதொடர்பாக நம்மிடம் பேசிய வடக்கு மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் சிலர், `` மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், தருமபுரி, திண்டுக்கல், கடலூர் ஆகிய 6 தொகுதிகளில் பா.ம.க-வை நேரடியாக எதிர்கொள்ள இருக்கிறோம். விழுப்புரத்தில் உதயசூரியன் சின்னத்தில் நிற்கிறார் வி.சி.க பொதுச்செயலாளர் ரவிக்குமார். ` சாதியரீதியாக எந்தவித பிரச்னையும் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். வன்னிய வாக்குகளை உதயசூரியனுக்குக் கொண்டுவரவேண்டியது எங்கள் பொறுப்பு' என தி.மு.க நிர்வாகிகள் சிலர், வி.சி.க பிரமுகர்களிடம் உறுதியாகக் கூறிவிட்டனர். பா.ம.க போட்டியிடும் தொகுதிகளில் வேல்முருகன் கட்சியை முழுதாகப் பயன்படுத்திக்கொள்ள இருக்கிறார் ஸ்டாலின். 

குறிப்பாக, இடஒதுக்கீட்டை பெரிதாக நினைக்கக்கூடிய கட்சியாக பா.ம.க இருக்கிறது. ஆனால், முற்பட்ட பிரிவினருக்காக பா.ஜ.க கொண்டுவந்த 10 சதவிகித இடஒதுக்கீட்டை பா.ம.க எதிர்க்கவில்லை என்பதைத் தேர்தல் களத்தில் பிரதானமாகக் கொண்டுசெல்ல உள்ளனர். அதேபோல, தேர்தல் அறிக்கையிலும் வன்னியர்களுக்காக பா.ம.க எந்தவித கருத்தையும் சொல்லவில்லை. இதையெல்லாம் மனதில்வைத்து, இடஒதுக்கீட்டுக்காகப் போராடிய தியாகிகளுக்கான பென்ஷனை அதிகரிப்பது உட்பட, சில முக்கிய விஷயங்களை மையப்படுத்த இருக்கிறார் ஸ்டாலின். ஆரணி தொகுதியில் விஷ்ணுபிரசாத்தை முன்னிறுத்த ஸ்டாலின் விரும்புவதும் இதன் ஓர் அங்கம்தான். மயிலாடுதுறையில் வன்னியர் பிரச்னை வரும் என்பதால்தான், திருவிடைமருதூர் ராமலிங்கத்துக்கு சீட் கொடுத்தார் ஸ்டாலின். பாரிவேந்தருக்கும் ராமதாஸுக்கும் உள்ள பகையைப் பயன்படுத்தி, இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் வாக்குகளையும் பெறத் திட்டமிட்டிருக்கிறார். தேர்தல் பிரசாரத்தில் பா.ம.க எதிர்ப்பு அரசியலைக் கூர்மைப்படுத்த இருக்கிறது தி.மு.க" என்கின்றனர். 

அடுத்த கட்டுரைக்கு