Published:Updated:

`இவ்வளவு புகார் உள்ளவரை வேட்பாளராக அறிவித்துவிட்டாரே ஸ்டாலின்!' - குமுறும் தஞ்சை தி.மு.க-வினர்

`இவ்வளவு புகார் உள்ளவரை வேட்பாளராக அறிவித்துவிட்டாரே ஸ்டாலின்!' - குமுறும் தஞ்சை தி.மு.க-வினர்
`இவ்வளவு புகார் உள்ளவரை வேட்பாளராக அறிவித்துவிட்டாரே ஸ்டாலின்!' - குமுறும் தஞ்சை தி.மு.க-வினர்

தஞ்சாவூர் சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவர் டி.கே.ஜி நீலமேகம். இவர் மீது பல குற்றச்சாட்டுகளை வாசிக்கிறார்கள் லோக்கல் தி.மு.க-வினர். மேலும், இவரைப் பற்றி தலைமைக்கு நூற்றுக்கும் மேற்பட்ட புகார்களை அனுப்பியுள்ளனர். டி.கே.ஜிக்கு வேண்டாதவர்கள்தான் இதுபோன்று கிளப்பி விடுகிறார்கள் என வேட்பாளர் தரப்பினர் புலம்பி வருகின்றனர். இதுபோன்ற செயல்களால் தஞ்சையின் வெற்றியும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

தி.மு.க தலைவர் ஸ்டாலின் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 20 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தல்களில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டார். அதோடு, `18 தொகுதிகளுக்கும் நடக்கும் தேர்தல் மினி சட்டமன்ற தேர்தல். இதில் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம்' என்றும் கூறினார். இந்த நிலையில், வேட்பாளர்களை ஆதரித்து வாக்குகள் கேட்டு நாளை திருவாரூரில் இருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். மாலை தஞ்சாவூர் திலகர் திடலிலும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு வேட்பாளர்களை ஆதரித்துப் பேச உள்ளார். 

இந்த நிலையில், தஞ்சாவூரில் தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவர் டி.கே.ஜி நீலமேகம். இவர் மறைந்த டி.கே கோவிந்தன் என்பவரின் மகன். டி.கே.கோவிந்தன் கருணாநிதிக்கு நெருக்கமாக இருந்ததோடு மிசாவிலும் கைது செய்யப்பட்டவர். டி.கே.ஜி.நீலமேகமும் ஆரம்ப காலம் முதலே தி.மு.க-வில் இருந்து வருவதோடு இளைஞரணியில் பல பொறுப்புகளை வகித்தவர். தற்போது தஞ்சை மாநகரத்தின் செயலாளராகவும் உள்ளார். இவரை தஞ்சாவூர் தொகுதி வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்ததை தி.மு.க-வில் உள்ளவர்களே விரும்பவில்லை. மேலும், இவர் மீது பல குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள். இவருக்கு வேலை செய்யாமல் அமைதியாக இருப்பதற்கும் தி.மு.க-வினர் முடிவு செய்துவிட்டனர். இதைப் பற்றிய பேச்சுதான் தஞ்சை தி.மு.க-வினர் ஹாட் நியூஸாக பேசி கொண்டிருக்கின்றனர்.

இதுகுறித்து தி.மு.க வட்டாரத்தில் பேசினோம். ``டி.கே.ஜி நீலமேகம் விருப்ப மனு அளித்தும் சீட்டு யாருக்கு கொடுப்பது என தெற்கு மாவட்டச் செயலாளரான துரை.சந்திரசேகரிடம் ஆலோசனை நடத்தினார். சந்திரசேகர் டி.கே.ஜிக்கு கொடுங்க எனக் கூற ஸ்டாலின் அவர் மீது நம் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கே நல்ல அபிப்பிராயம் கிடையாதே அவருக்கு சீட் கொடுத்தால் என்னவாகும் என கேட்டிருக்கிறார். இல்ல தலைவரே நீங்க சீட்டு கொடுங்க நான் ஜெயிக்க வச்சு கொண்டு வந்து நிறுத்துகிறேன் என கட்சியைப் பற்றி நினைக்காமல் குரூப் பாலிடிக்ஸ் செய்வதற்காக இப்படி கூறியிருக்கிறார். ஸ்டாலினும் டி.கே.ஜியை வேட்பாளராக அறிவித்துவிட்டார். இதனால் லோக்கல் தி.மு.க-வினர் பலர் வெளியே சொல்ல முடியாமல் புழுங்கிக் கொண்டிருக்கின்றனர்.

மேலும், இவர் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களை தனக்கு அருகில் வைத்திருக்கிறார். கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுவதுதான் இவரின் முக்கிய வேலையே. இவர் வார்டைச் சேர்ந்த செந்தில் என்பவர் எங்க பகுதியில் கஞ்சா விற்பதாக போலீஸுக்குத் தகவல் கொடுத்தார். அவரை லியோ என்ற கும்பல் வெட்டியது. இதில் தப்பித்த செந்தில் தற்போதும் மெடிக்கல் காலேஜில் சிகிச்சையில் இருக்கிறார். ஆனால் டி.கே.ஜி., லியோவுக்கு மறைமுகமாக சப்போர்ட் செய்தார். கட்சிக்காரனை விட்டுவிட்டு சமூக விரோதிக்கு உதவ என்ன காரணம். இதேபோல் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் பஞ்சாயத்து செய்யச் சென்றவர் கடையின் உரிமையாளரை ஓங்கி அடித்து விடுகிறார். இது தொடர்பாக  நகைக்கடை உரிமையாளர் இவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், ரியல் எஸ்டேட் செய்ததில் முறைகேடு செய்துள்ளார். 

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் இவரின் ஆட்கள் தேர்தல் நிதி என்கிற பெயரில் அட்ராசிட்டியில் ஈடுபட்டுவருகிறார்கள். பிரபலமான துணிக்கடை ஒன்றில் அண்ணன்தான் இனி எம்.எல்.ஏ எனக் கூறி 300 வேட்டி  நன்கொடையாக கேட்டுள்ளனர், இவரின் ஆட்கள். உடனே கடையின் உரிமையாளர் இதை எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்துக்கு தகவல் தெரிவித்து, `என்ன இப்படியெல்லாம் நடந்துகொள்கிறார்கள்' என வேதனைப்பட்டுள்ளார். இவ்வளவு புகார்கள் உள்ள ஒருவரை தலைவர் வேட்பாளராக அறிவித்துவிட்டார். அறிவிக்கப்பட்ட அடுத்தநாளே இவர் மீது நூற்றுக்கும் மேற்பட்ட புகார்கள் தலைமை அலுவலகத்துக்குச் சென்றுள்ளது. இந்தத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி என்பது அவசியமானது என தலைவர் ஸ்டாலினுக்கும் தெரியும்.

தலைவர் ஸ்டாலின் முதல்வராக அமர வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் பலர் டி.கே.ஜியை பற்றி தலைவரிடம் பேசியிருக்கிறார்கள். அவரும் ஏதோ ஒரு முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது'' என ஆதங்கத்தோடு தெரிவித்தனர். டி.கே.ஜி தரப்பினரோ, `கட்சிக்காக நீண்ட காலம் உழைத்ததன் அடிப்படையில் தலைவர் ஸ்டாலின் சீட்டு கொடுத்திருக்கிறார். சீட் கிடைக்கும் என நினைத்து ஏமாந்து போனவர்கள் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கிளப்பி வருகின்றனர். எல்லாவற்றையும் முறியடித்து தஞ்சாவூரில் வெற்றி பெற்று அதை தலைவருக்கு சமர்ப்பிப்போம்'' என்றனர்.