Published:Updated:

``திராவிடக் கட்சிகள் பலவீனமடைந்துள்ளன!" - மக்கள் நீதி மய்யம்

எங்களுடைய  தலைவர் நேர்மையானர். தமிழகத்தை வழி நடத்தக்கூடிய பொறுப்பை உணர்ந்தவர் என்பதால், மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

``திராவிடக் கட்சிகள் பலவீனமடைந்துள்ளன!" - மக்கள் நீதி மய்யம்
``திராவிடக் கட்சிகள் பலவீனமடைந்துள்ளன!" - மக்கள் நீதி மய்யம்

அ.தி.மு.க -  தி.மு.க இரண்டு கட்சிகளும் தனித்தனியாகக் கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளது. நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மற்றும் டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், இயக்குநர் சீமானின் நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவை தனித்துத் தேர்தலில் போட்டியிட உள்ளன. அ.தி.மு.க மற்றும் தி.மு.க-வும் அரசியல் களத்துக்கு வந்து பல ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், மக்கள் நீதி மய்யம் எதைக் கருவியாகக் கொண்டு களம் இறங்குகிறது என அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அப்பாஸிடம் பேசினோம்.  

``மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடப் போவதாக ஏற்கெனவே அறிவித்துள்ளது. தேர்தல் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 20 -ம் தேதி (நாளை ) நாடாளுமன்ற 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் அறிவித்தவுடன் அப்படியே சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான 18 தொகுதிகளின் வேட்பாளர்களும் அறிவிக்கப்படும். எங்களுடைய கட்சி தனித் திறமையோடு போட்டியிடுகிறது. `பல ஆண்டுகள் அரசியலில் இருந்த அ.தி.மு.க., தி.மு.க-வை உங்களால் வீழ்த்த முடியுமா?' என்று கேள்வி எழுப்புவர்களுக்கு ஒரே பதில், முன்னால் வந்த வாலைவிட அதன்பிறகு வந்த கொம்பு மதிப்புப் பெறுவதில்லையா என்பதுதான். 1949 -ல் தி.மு.க-வும்1975-ல்  அ.தி.மு.க-வும் தொடங்கப்பட்டன. 

இத்தனை ஆண்டுகள் ஆன பின்பும் 20 தொகுதிகளில்தான் போட்டியிடக்கூடிய அளவுக்குத்தான் அந்தக் கட்சிகளுக்குத் தைரியம் இருக்கிறது என்றால், எந்த மாதிரியான ஆட்சியை நடத்துவார்கள் என்று பாருங்கள். சேரக்கூடாத கட்சிகளோடு இரண்டு கட்சிகளுமே கூட்டணியை அமைத்துள்ளனர். குறிப்பாக, அ.தி.மு.க-வைக் கடுமையாக விமர்சனம் செய்தது பா.ம.க. ஆனால் இன்று அந்தக் கட்சியைத்தான் தேடிப்போய் கூட்டணி பேசுகிறது, அ.தி.மு.க தலைமை. அதேபோன்று, கடந்த  காலங்களில் 'வரும் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு உங்களுடைய கட்சிகளை ஒன்றும் இல்லாமல் செய்கிறேன்' எனத் தே.மு.தி.க-வை அ.தி.மு.க  விமர்சனம் செய்தது. ஆனால், அந்தக் கட்சியோடு கூட்டணி வைக்க முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் வீடு தேடிபோய்ச் சிரித்துக்கொண்டே கூட்டணி பேசிவிட்டு வருகிறார்கள். அ.தி.மு.க-தான் இப்படி என்றால்,  தி.மு.க-வில் அதைவிட வேடிக்கையான சம்பவங்கள் நடக்கின்றன.

தி.மு.க-வோடு கூட்டணி வைக்கக் கூடாது. அந்தக் கட்சி வெற்றி பெறக் கூடாது என ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், சி.பி.ஐ., சி.பி.எம் உள்ளிட்ட கட்சிகள் மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கினார்கள். அந்தக் கூட்டணி தோல்வியடைந்த நிலையில், இன்று தி.மு.க-வோடு கைகோத்து நிற்கிறார்கள். இதையெல்லாம் மக்கள் எவ்வாறு ஜீரணித்துக் கொள்வார்கள் எனத் தெரியவில்லை. காரணம், மக்கள் நடந்த சம்பவங்களை மறந்து விடுவார்கள் என்பதாலேயே இப்படி இவர்களால் சுதந்திரமாக வலம் வர முடிகிறது. எவ்வாறு பா.ம.க-வும் - அ.தி.மு.க-வும், முரண்பட்ட கூட்டணி என்று சொல்கிறார்களோ, அதேபோன்று கொஞ்சமும் குறைவில்லாத கூட்டணிதான் தி.மு.க-வும் அதன் கூட்டணிக் கட்சிகளும். இந்த முரண்பட்ட கூட்டணிக் கட்சிகளின்  நிலை குறித்து மக்களுக்கு நன்றாகத் தெரியும். அவற்றை எல்லாம் நாங்கள் மக்களுக்குத் தெளிவாக எடுத்துரைப்போம். இரண்டு கட்சிகளும் அந்தக் கட்சியில் உள்ள கூட்டணிகளும் ஒரே மாதிரியானவை. குறிப்பாகச் செயல்பாட்டில் தொடங்கி ஊழல்வரை ஒரே மாதிரியானவை.. 

அப்படியான மோசமான கட்சிகளிலிருந்து நாங்கள் வேறுபட்டவர்கள். அதனால் எங்கள் கூட்டணி வெற்றிபெறும் என்ற நம்பிக்கை உறுதியாக உள்ளது. குறிப்பாகப் பணபலம், படைபலம் போன்றவற்றை மையமாக வைத்து இரண்டு கட்சிகளும் களம் காண்கின்றன. ஆனால், நாங்கள் மக்களை நம்பி மட்டுமே களம் இறங்குகிறோம். மக்களிடையே நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. பழைய முறைகளைப்போல் ஒருவர்மீது உள்ள ஈர்ப்பின் காரணமாக அவர்கள்  பின்னாடியே செல்லக்கூடிய மனநிலையிலிருந்து மக்கள்   மாறியுள்ளனர். அது மட்டுமல்லாமல், அந்த இரண்டு கட்சிகளின்  நிலைப்பாட்டையும் மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். இதுபோன்ற பலவிதமான பலவீனங்கள் அந்தக் கட்சிகளுக்கு உள்ளதால் மக்கள் எங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதோடு எங்களுடைய  தலைவர் நேர்மையானர். தமிழகத்தை வழி நடத்தக்கூடிய பொறுப்பை உணர்ந்தவர் என்பதால், மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார். 

தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.