Published:Updated:

2 துணை முதல்வர்கள்; ரிசார்ட்டில் எம்.எல்.ஏ-க்கள்? - கோவா சட்டமன்றத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

2 துணை முதல்வர்கள்; ரிசார்ட்டில் எம்.எல்.ஏ-க்கள்? - கோவா சட்டமன்றத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு
2 துணை முதல்வர்கள்; ரிசார்ட்டில் எம்.எல்.ஏ-க்கள்? - கோவா சட்டமன்றத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

கோவா முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கர் உயிரிழந்த பிறகு இன்று அந்த மாநிலத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

கோவாவில் மொத்தம் 40 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அங்கு கடந்த 2017-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜ.க 13 இடங்களிலும், காங்கிரஸ் 17 இடங்களிலும் கோவா ஃபார்வர்டு மற்றும் மஹாராஷ்ட்ரவாதி கோமந்தக் ஆகிய கட்சிகள் தலா மூன்று இடங்களும், தேசியவாத காங்கிரஸ் ஒரு இடத்திலும், சுயேச்சைகள் மூன்று இடத்திலும் வெற்றி பெற்றன.

இதையடுத்து, சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சையுடன் கூட்டணி அமைத்து பா.ஜ.க தங்களின் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி அமைத்தது. கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் பொறுப்பேற்றார். இந்த நிலையில், அம்மாநில முதல்வர் பாரிக்கருக்கு கடந்த வருடம் கணைய புற்று நோய் ஏற்பட்டது. இதற்காகப் பல மருத்துவமனைகள் மற்றும் அமெரிக்காவிலும் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், எந்த சிகிச்சையும் அவரது நோயைக் குணப்படுத்தவில்லை. உடல்நிலை சரியில்லாத நிலையிலும் பாரிக்கர் சில மாதங்கள் முதல்வராகப் பதவி வகித்தார். கடந்த 17-ம் தேதி இரவு உடல் நிலை மிகவும் மோசமானதால் மனோகர் பாரிக்கர் உயிரிழந்தார்.

அன்றைய தினம், இரவே கோவா சட்டமன்ற சபாநாயகராக இருந்த பிரமோத் சாவந்த் அம்மாநில முதல்வராகப் பதவியேற்றார். இருந்தும் கோவாவில் தங்களுக்குத்தான் தனிப் பெரும்பான்மை உள்ளது, எங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்றும் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் கோவா காங்கிரஸ் கட்சியினர் ஆளுநரிடம் மனு அளித்தனர். இதை ஏற்ற ஆளுநர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அனுமதி அளித்தார்.

அதன்படி இன்று காலை 11:30 மணியளவில் கோவாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. மனோகர் பாரிக்கர், ஃபிரான்ஸிஸ் டிசௌசா ஆகியோரின் இறப்பு மற்றும் இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமாவுக்குப் பிறகு தற்போது அங்கு 36 சட்டமன்ற உறுப்பினர்களே உள்ளனர். இவற்றில் 19 தொகுதிகள் கைப்பற்றினால் மட்டுமே ஆட்சியமைக்க முடியும்.

சிறிய கட்சிகள் ஆதரவு அளித்தால் மட்டுமே பா.ஜ.கவோ, காங்கிரஸோ ஆட்சி அமைக்க முடியும். ஆனால், தற்போது பா.ஜ.கவுக்கு ஆதரவு அளித்துள்ள கோவா ஃபார்வர்டு கட்சியும், மஹாராஷ்ட்ரவாதி கோமந்தக் கட்சியும் தங்களுக்குத் துணை முதல்வர் பதவி வேண்டும் எனக் கேட்பதால் அங்கு சிக்கல் நிலவுகிறது. மேலும், பா.ஜ.க-வினர் கட்சி தாவாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் அனைவரும் 5 ஸ்டார் ரிசார்டில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதனால் கோவா அரசியலில் உச்சகட்ட பரபரப்பு நிலவுகிறது.