Published:Updated:

``தேர்தலுக்குப் பிறகு, தமிழிசை தலைவராக இருக்க மாட்டார்!’’ - டிவி புகழ் ராமசுப்பிரமணியன்

``தேர்தலுக்குப் பிறகு, தமிழிசை தலைவராக இருக்க மாட்டார்!’’ - டிவி புகழ் ராமசுப்பிரமணியன்
``தேர்தலுக்குப் பிறகு, தமிழிசை தலைவராக இருக்க மாட்டார்!’’ - டிவி புகழ் ராமசுப்பிரமணியன்

ஸ்டெர்லைட் ஆலைப் பிரச்னையைப் பொறுத்தவரை, மத்திய பா.ஜ.க-வும் தமிழக அரசும் ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு ஆதரவாகவே இருக்கிறது. அதேபோல சேலம் - சென்னை எட்டு வழிச்சாலையையும் இரண்டு கட்சிகளுமே கொண்டுவர ஆர்வம் காட்டுகின்றன. இவற்றுக்கெல்லாம் மக்கள் மத்தியில் எதிர்ப்பு உள்ளது.

தொலைக்காட்சி விவாதங்களில் எந்தத் தலைப்பில் விவாதம் நடந்தாலும் ராமசுப்பிரமணியன் அங்கே இருப்பார். அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தவாதியான இவர், பா.ஜ.க-வில் இருந்தபோது அந்தக் கட்சியைப் பாராட்டிக்கொண்டே உள்கட்சி விவகாரங்களை வெளிப்படையாக விமர்சிக்கவும் செய்தார். இதனால் கட்சியிலிருந்து இவர் நீக்கப்பட்டாலும் வலதுசாரி சிந்தனையாளராக டிவி விவாத நிகழ்ச்சிகளில் வலம்வந்துகொண்டுதான் இருக்கிறார். அவரிடம் பேசினேன்.

`தமிழிசையை வெளிப்படையாக விமர்சித்ததால்தான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டீர்களா?’’

``பொன்னார் மத்திய அமைச்சராகிய காரணத்தால், தமிழிசைக்கு இந்தத் தலைமைப் பதவி கிடைத்தது. தமிழிசையின் பெயரைப் பரிசீலித்த தருணத்தில் ஹெச்.ராஜாவின் பெயரும் பரிசீலிக்கப்பட்டது. பா.ஜ.க-வுக்கு ஏற்கெனவே `பிராமின் பார்ட்டி’ என்ற பெயருள்ள சூழலில் ஹெச்.ராஜாவைத் தலைவராக்கினால் அது உண்மையாகிவிடும் என்பதால், அவருக்குப் பதிலாக தமிழிசையை நியமித்தார்கள். தற்போது அகில இந்திய பா.ஜ.க தலைவரான அமித்ஷாவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தமிழக பா.ஜ.க தலைவருக்கான பதவிக்காலத்தையும் நீட்டித்துள்ளார்கள். தேர்தலுக்குப் பிறகு, தமிழிசை தலைவராக இருக்கமாட்டார். யார் அடுத்த தலைவர் என்பதை, தேர்தல் முடிவுகளே தீர்மானிக்கும்.’’

``நீண்ட  இழுபறிக்குப் பிறகு முடிவான பா.ஜ.க தேர்தல் கூட்டணியின் வெற்றி வாய்ப்பு எப்படியுள்ளது?’’

``இந்த முறை பா.ஜ.க மெகா கூட்டணி அமைத்துள்ளது. கூட்டணிக் கணக்குப்படி பார்த்தால் அசைக்க முடியாத பெரிய வெற்றியைப் பெற வேண்டும். ஆனால், கூட்டணிக் கட்சிகளுக்கிடையே உள்ள முரண்பாடுகளால் இது கடினமான ஒன்றாக உள்ளது.

ஆளும் அ.தி.மு.க-வுக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு அதிகம் உள்ளது. அ.தி.மு.க-வை ஊழல் கட்சியாகவே மக்கள் பார்க்கிறார்கள். தற்போது பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்திலும் ஆளும்கட்சிமீது பழி விழுந்துள்ளது. அதேபோல ஓ.பி.எஸ் அணியில் இருப்பவர்களில் அவரின் மகன் தவிர மற்றவர்களுக்கு சீட் மறுக்கப்பட்டு மொத்தமாக ஓரங்கட்டப்பட்டுள்ளதால், அவர்கள் எந்த அளவுக்கு தேர்தலில் ஆர்வம் காட்டுவார்கள் என்பது சந்தேகம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை நீட் தேர்வை ரத்துசெய்யக்கோரும் பிரச்னை மிகப்பெரிய ஒன்று. மத்திய அரசு, நீட் தேர்வைக் கொண்டுவருவோம் என்கிறது. மாநில அரசு அதை ரத்துசெய்வோம் என்கிறது. இதேபோல, ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ, மீத்தேன் திட்டங்களிலும் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் முரண்பாடு இருக்கிறது. இந்தக் கொள்கை முரண்களை இருவரும் தீர்க்கவேயில்லை.

ஸ்டெர்லைட் பிரச்னையைப் பொறுத்தவரை, மத்திய பா.ஜ.க-வும் தமிழக அரசும் ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு ஆதரவாகவே இருக்கின்றன. அதேபோல சேலம் - சென்னை எட்டு வழிச் சாலையையும் இரண்டு கட்சிகளுமே கொண்டு வர ஆர்வம் காட்டுகின்றன. இவற்றுக்கெல்லாம் மக்கள் மத்தியில் எதிர்ப்பு உள்ளது. அ.தி.மு.க-வை பா.ம.க கடுமையாக விமர்சனம் செய்துவந்தது. அந்த விமர்சனங்களையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு தற்போது கூட்டணி அமைத்துள்ளது. அப்படியானால், அந்த விமர்சனங்கள் என்னவாயின? அதேபோல, பா.ஜ.க-வினருக்குப் பிடிக்குதோ பிடிக்கலையோ, பெரியார் சிலையை உடைப்போம் என்றெல்லாம் அரசியல் செய்தது சரியான அரசியல் அணுகுமுறை கிடையாது.

ஏழு தமிழர் விடுதலையை, மத்திய அரசு கடுமையாக எதிர்க்கிறது. அவர்களை விடுதலை செய்தால் அபாயகரமான முன்னுதாரணமாகிவிடக்கூடும் என்றும், உலக அரங்கில் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாகப் பேசப்படும் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளது. இதனால்தான் கவர்னர் ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்துகிறார். இதுவும் இந்தத் தேர்தலில் பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணிக்கு எதிராக எதிரொலிக்கும். ஒக்கி, கஜா புயல் காலங்களில் தமிழகத்துக்கு மத்திய அரசு பண உதவியே செய்யவில்லை. இதுவும் தமிழக மக்களிடையே மத்திய அரசுக்கு எதிரான மனநிலையை உருவாக்கியுள்ளது. தினகரன் எந்த அளவுக்கு வாக்குகளைப் பிரிப்பார் என்றும் கணிக்க முடியவில்லை. இன்னொரு பக்கம், தி.மு.க கூட்டணிக் கட்சிகளுக்குள் பெரிய முரண்பாடு எதுவும் இல்லை. இவை அனைத்தும் சேர்ந்து பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணிக்குப் பாதகமாக அமையக்கூடும்.’’

``கூட்டணிப் பேச்சுவார்த்தையில் எடப்பாடியின் அணுகுமுறை எப்படியுள்ளது?’’

``மிகவும் சாதுர்யமாகத் திட்டமிட்டு, கூட்டணிப் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளார். கூட்டணி பேரத்தில் பா.ஜ.க அதிக தொகுதிகள் கேட்கக் கூடாது என்றே நாடாளுமன்றத்தின் இறுதிக்காலத்தில் தம்பிதுரை மூலம் கடுமையான எதிர்ப்பைப் பதிவுசெய்தார்கள். அதன் காரணமாகக் கூட்டணி அமைந்தாலே போதும் என்ற நிலைக்கு பா.ஜ.க தள்ளப்பட்டது. தங்கள் வசம் 20 தொகுதிகளை வைத்துக்கொண்டு, 5 தொகுதிகளை மட்டுமே பா.ஜ.க-வுக்கு அளித்துள்ளார் எடப்பாடி. எதிர்காலத்தில் தமிழகத்தில் பா.ஜ.க செல்வாக்கு பெறக் கூடாது என்ற எண்ணத்திலேயே அவர் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. பா.ஜ.க, பா.ம.க இரண்டுக்குமே வெற்றி வாய்ப்பு குறைவாக உள்ள தொகுதிகளையே அ.தி.மு.க ஒதுக்கியுள்ளது. இந்தத் தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க தோற்றால் மீண்டெழுவது கடினம்.’’

``ஐந்தாண்டு கால மோடி ஆட்சி எப்படியுள்ளது?’’

``நேர்மையான ஆட்சியை மோடி கொடுத்துள்ளார். ஊழல் நடக்கவேயில்லை. உள்கட்டமைப்புத் துறையில் நிறைய முதலீடு செய்துள்ளார்கள். இது வரவேற்கத்தக்க ஒன்று. விலையேற்றமும் கட்டுக்குள் உள்ளது. மோடி கொண்டுவந்த பணமதிப்பு நீக்கம், மக்களை மோசமாகப் பாதித்தது. திருப்பூரில் மட்டுமே 5 லட்சம் பேர் வரை வேலையிழந்துள்ளனர். இந்தியா முழுக்க 3 கோடி பேர் வேலையிழப்பைச் சந்தித்தனர். ஜி.எஸ்.டி அமலாக்கத்தை அவசரக்கோலத்தில் நிறைவேற்றியதால், எதிர்பார்த்த அளவு வரி வருமானத்தைப் பெற முடியவில்லை. வேலைவாய்ப்பின்மை 7.4 சதவிகிதம் அதிகமாகியுள்ளது.

அதேபோல, 5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு அரசு அறிவித்திருக்கும் 6,000 ரூபாய் உதவித்தொகையால், விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் மேம்படாது. ஏற்றுமதித் துறையில் ஆண்டுக்கு 500 பில்லியன் டாலர் இலக்கு வைத்திருந்தார்கள். ஆனால், 300 பில்லியன் டாலரைக்கூடத் தாண்டவில்லை. இப்படி, இந்த ஆட்சியில் நன்மையும் தீமையும் கலந்தே இருக்கின்றன.’’

``தேர்தல் முடிவு எப்படியிருக்கும்?’’

``மோடியே மீண்டும் ஆட்சி அமைப்பார். சமீபத்தில் நடந்த பால்கோட் தாக்குதல் மூலமாக பா.ஜ.க-வுக்குக் கூடுதல் தொகுதிகள் கிடைக்கக்கூடும். 230 தொகுதிகள் வரை தனித்துப் பெறுவார்கள் என எதிர்பார்க்கிறேன். கூட்டணிக் கட்சிகளோடு இணைந்து ஆட்சியைப் பிடிப்பார்கள். கூட்டணி ஆட்சி என்பது இந்தியாவுக்கு நல்லதுதான்.’’

அடுத்த கட்டுரைக்கு