Published:Updated:

`1 லட்சம் சோஷியல் மீடியா வாரியர்ஸ்!'  - பா.ஜ.க-வின் மிரட்டல் அடி

`வேட்பாளர் அறிமுகக் கூட்டத்துக்கு 5,000 பேரைத் திரட்ட வேண்டும். வேட்புமனுத் தாக்கலின்போது 25,000 பேரைத் திரட்ட வேண்டும். பூத் கமிட்டி வேலைகள் 70 சதவிகிதம் முடிந்துவிட்டன. மீதமுள்ள 30 சதவிகிதப் பணிகளை ஒருவாரத்தில் முடித்துவிட வேண்டும்' எனக் கூறியிருக்கிறார் வானதி.

`1 லட்சம் சோஷியல் மீடியா வாரியர்ஸ்!'  - பா.ஜ.க-வின் மிரட்டல் அடி
`1 லட்சம் சோஷியல் மீடியா வாரியர்ஸ்!'  - பா.ஜ.க-வின் மிரட்டல் அடி

பா.ஜ.க வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக இருக்கிறது. `தமிழகம், பாண்டிச்சேரியில் எந்தெந்த வழிகளில் பிரசாரம் செய்ய வேண்டும்' என்பது குறித்து டெல்லித் தலைமை சில அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறது. `39 தொகுதிகளிலும் நரேந்திர மோடியே நிற்கிறார் என்பதை மனதில் வைத்துப் பிரசாரம் செய்யுங்கள்' எனக் கூறியிருக்கிறார் பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித் ஷா. 

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 30 நாள்கள் இருக்கின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அ.தி.மு.க, பா.ம.க, தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிட்டன. கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவால், பா.ஜ.க-வின் வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இன்று வேட்பாளர் பட்டியல் வெளியானதும், பிரசாரப் பணிகளில் வேகம் எடுக்க இருக்கிறது தமிழக பா.ஜ.க. 

மக்களவைத் தேர்தல் பிரசார வியூகம் குறித்து, பா.ஜ.க நிர்வாகிகளிடம் பேசினோம். ``தேர்தல் பிரசாரத்தை மூன்று வகைகளாகப் பிரித்திருக்கிறோம். பூத் கமிட்டி பொறுப்பாளர்களைச் சந்திப்பது, தொகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் ஒரேநாளில் சென்று வாக்கு கேட்பது, என்.டி.ஏ கூட்டணிக் கட்சி நிர்வாகிகளோடு சென்று மக்களைச் சந்திப்பது என வகைப்படுத்தியிருக்கிறோம். கடந்த தேர்தலைப் போல இந்த முறையும் டிஜிட்டல் பிரசாரத்தை முழுவேகத்தில் கொண்டு செல்ல இருக்கிறோம். சமூக வலைத்தளங்களில் பா.ஜ.க ஆதரவு மனநிலையில் உள்ளவர்களோடு சந்திப்புகளை நடத்துவது, அவர்கள் மூலமாக  சோஷியல் மீடியாக்களில் பிரசாரத்தை முன்னெடுப்பது எனத் திட்டமிட்டிருக்கிறோம். இதற்காக சோஷியல் மீடியா வாரியர்ஸ் என்ற பெயரில் கூட்டம் ஒன்றை நடத்தினோம். இந்தக் கூட்டத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் கலந்து கொண்டார். இதன் மூலம், நரேந்திர மோடிக்கு ஆதரவாகக் கருத்துக்களை வெளியிடும் 1 லட்சம் பேரை ஒருங்கிணைத்து வேலைகளைச் செய்ய இருக்கிறோம். மோடி ஆட்சியின் பெருமைகளைக் கொண்டு செல்வது, எதிர்க்கட்சிகளின் பிரசாரத்துக்குப் பதிலடி கொடுப்பது போன்றவை இதன் முக்கியப் பணிகளாக இருக்கும்" என விவரித்தவர்கள், 

``ஒரே நாளில் அனைத்து வீடுகளுக்கும் சென்று பார்ப்பது என்பது பிரசாரத்தின் முக்கியப் பணியாக இருக்கும். பாண்டிச்சேரியில் 12-ம் தேதி இந்தப் பணி தொடங்க இருக்கிறது. தமிழ்நாட்டில் எந்தெந்த தேதிகள் என்பது இன்னும் முடிவாகவில்லை. பூத் கமிட்டி நிர்வாகிகளைக் காலையிலும் மாலையிலும் சந்தித்துப் பேச வேண்டும் என டெல்லி மேலிடம் உறுதியாகக் கூறிவிட்டது. அதேபோல், `ஒவ்வொரு தொகுதிகளிலும் குறைந்தபட்சம் 50 வாக்குகளைப் பெற்றுத் தரக் கூடிய கீ ஓட்டர்ஸை சந்திக்க வேண்டும்' எனவும் அறிவுறுத்தியுள்ளனர். இது தொடர்பாகப் பேசிய அமித் ஷா, `5 தொகுதிகளில் நாம் நிற்கிறோம். இந்த 5-ல் மட்டும் கவனம் செலுத்தாமல் 39 தொகுதிகளிலும் நரேந்திர மோடியே நிற்கிறார் என்பதை மனதில் வைத்துப் பிரசாரம் செய்யுங்கள்' எனக் கூறிவிட்டார். தற்போது ஆர்.எஸ்.எஸ் உட்பட அனைத்து இந்துத்துவ அமைப்புகளையும் ஒருங்கிணைத்துக் கூட்டம் நடத்தி வருகிறோம். பிரதமர், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், தேசியத் தலைவர்கள் ஆகியோர் தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர். இதற்கான தேதிகளும் ஏறக்குறைய முடிவாகிவிட்டன" என்கின்றனர் விரிவாக. 

பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்பட்ட 5 தொகுதிகளிலும் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டனர் தொகுதி பொறுப்பாளர்கள். நேற்று மாலை கோவை சித்தாபுதூரில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் நிர்வாகிகளிடம் பேசிய தொகுதி பொறுப்பாளர் வானதி சீனிவாசன், `தேர்தல் வேலைகளுக்காக உடனடியாக அலுவலகம் திறக்க வேண்டும். வேட்பாளர் அறிமுகக் கூட்டத்துக்கு 5,000 பேரைத் திரட்ட வேண்டும். வேட்புமனுத் தாக்கலின்போது 25,000 பேரைத் திரட்ட வேண்டும். பூத் கமிட்டி வேலைகள் 70 சதவிகிதம் முடிந்துவிட்டன. மீதமுள்ள 30 சதவிகிதப் பணிகளை ஒருவாரத்தில் முடித்துவிட வேண்டும். பூத்துகளுக்குக் கடந்த முறை செலவு செய்ததைப் போலத்தான் இந்த முறையும் செய்வோம். தேர்தல் செலவுகளுக்குப் பெரிய அளவில் எதிர்பார்க்க வேண்டாம். பொதுமக்களிடம் நிதி உதவி பெற்றுத் தேர்தல் பணிகளை நடத்துவோம்' என விவரித்திருக்கிறார். இந்த முறை கோவை மக்களவைத் தொகுதியின் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் களமிறங்க இருக்கிறார். அவருக்காக முழுவீச்சில் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டார் வானதி. 

இதுதொடர்பாகப் பேசும் பா.ஜ.க நிர்வாகிகள், ``கோவையைப் பொறுத்தவரையில் அ.தி.மு.க ஆதரவே எங்களுக்குத் தேவையில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில்தான் அ.தி.மு.க வேட்பாளரிடம் தோல்வியடைந்தோம். சிங்காநல்லூரில் 6,000 வாக்குகள் முன்னணியிலும் தெற்குத் தொகுதியில் 7,000 வாக்குகள் முன்னணியிலும் இருந்தோம். சூலூரும் பல்லடமும்தான் எங்களுக்குக் கை கொடுக்கவில்லை. அந்த 2 தொகுதிகளில் கிடைத்த வாக்குகளால்தான் அ.தி.மு.க வென்றது. இந்த ஓராண்டில் பல்லடத்திலும் சூலூரிலும் நல்லபடியாகத் தொகுதி வேலையை நன்றாகப் பார்த்திருக்கிறோம். முன்பெல்லாம் பூத் கமிட்டிகளில் 20 சதவிகிதம் பேரைத்தான் நிரப்புவோம். இப்போது 70 சதவிகிதம் அளவுக்கு முகவர்களைப் போட்டிருக்கிறோம். கோவையில் உறுதியாக வெல்வோம்" என்கின்றனர் நம்பிக்கையோடு.