Published:Updated:

விருதுநகர் தொகுதி: மாணிக்தாகூருக்கு ஆதரவாகவும் எதிராகவும் செயல்படும் காங்கிரஸார்!

"இந்தத் தொகுதியில் போட்டியிட 9 பேர் பணம் கட்டியுள்ளனர். அதில் யாருக்குக் கொடுத்தாலும் நல்லதுதான். ஆனால், மாணிக்தாகூருக்கு வாய்ப்பு கொடுத்தால் வேலை செய்ய மாட்டோம். அவரை நிறுத்தினால் கட்சியில் உள்ள பெரும்பாலானோர் இவருக்கு ஆதரவாக வேலை செய்ய மாட்டார்கள்."

விருதுநகர் தொகுதி: மாணிக்தாகூருக்கு ஆதரவாகவும் எதிராகவும் செயல்படும் காங்கிரஸார்!
விருதுநகர் தொகுதி: மாணிக்தாகூருக்கு ஆதரவாகவும் எதிராகவும் செயல்படும் காங்கிரஸார்!

நாடாளுமன்றத் தேர்தல் களைகட்டத் தொடங்கியிருக்கும் நிலையில், ``விருதுநகர் மக்களவைத் தொகுதியில் வேட்பாளரே அறிவிக்கப்படாத சூழலில், முன்னாள் எம்.பி. மாணிக்தாகூருக்குத்தான் வாய்ப்பளிக்க வேண்டும்" என காங்கிரஸில் அவருக்கு ஆதரவாக ஓர் அணியும், ``அவருக்கு வாய்ப்பளித்தால் வேலை செய்ய மாட்டோம்" என மற்றோர் அணியினரும் தெரிவித்துள்ளதால் அக்கட்சியில் உட்கட்சிப் பூசல் உருவாகியுள்ளது.

விருதுநகர் மக்களவைத் தேர்தலில் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ராதாகிருஷ்ணன் 4,06,694 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். காங்கிரஸ் கட்சி சார்பில் 2009-ம் ஆண்டு போட்டியிட்டு வெற்றிபெற்ற மாணிக்தாகூர் 2014-ம் ஆண்டு தேர்தலில் 38,842 வாக்குகள் மட்டுமே பெற்று நான்காமிடம் பிடித்தார். தற்போது நடைபெற உள்ள 2019-ம் ஆண்டு தேர்தலில் விருதுநகர் தொகுதி அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. கட்சிக்கும், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. தே.மு.தி.க. வேட்பாளராக விருதுநகர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த அழகர்சாமி என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் கூட்டணிக் கட்சிப் பொறுப்பாளர்களைச் சந்தித்து ஆதரவு கோரி வருகிறார்.

காங்கிரஸ் கட்சி இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. ஆனால், மீண்டும் சீட் வாங்குவதற்கான அனைத்து முயற்சிகளிலும் மாணிக்தாகூர் ஈடுபட்டு வருகிறார். இதனால் அவருக்கே மீண்டும் சீட் வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சியினர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், மீண்டும் அவருக்கு சீட் வழங்கக் கூடாது என அதே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த உறுப்பினர்களே தலைமைக்குப் புகார் மனு அனுப்பியுள்ளனர்.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் விருதுநகர் கிழக்கு மாவட்டத் தலைவர் ராஜாசொக்கர் மற்றும் மேற்கு மாவட்டத் தலைவர் தளவாய்சுந்தரம் ஆகியோர் கூறும்போது, ``காங்கிரஸ் கட்சி சுதந்திரமான கட்சி. அனைவருக்கும் கருத்து கூற உரிமை உண்டு. அனைத்துத் தொண்டர்கள், நகரத் தலைவர்கள் என அனைவரையும் ஒருங்கிணைத்து விருதுநகர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளராக மாணிக்தாகூரை அறிவிக்க வேண்டும் என விருப்பமனு அளித்தோம். ஆனால், கட்சிக்காக எந்த வேலையும் செய்யாமல் கட்சிக்குப் பாதகம் ஏற்படும் வகையில் முன்னாள் தலைவர்களான ஞானசேகரன் மற்றும் கணேசன் ஆகியோர் அ.தி.மு.க-வினரிடம் பணம் வாங்கிக் கொண்டு சிலரின் தூண்டுதலின் பேரில் மாணிக்தாகூர் மீது புகார் கூறுகின்றனர். அமைச்சரிடம் இவர்கள் பேரம் பேசியுள்ளனர். எனவே, அவர்கள் இரண்டு பேரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க வேண்டும். மாணிக்தாகூருக்கே வாய்ப்பு தர வேண்டும்" எனத் தெரிவித்தனர்.

சிவகாசி நகர் மன்றத் தலைவர் ஞானசேகரன், ``மாணிக்தாகூரின் செயல்பாடுகள் சரியில்லை. அதனால்தான் அவரை வேண்டாம் எனத் தலைமையிடம் தெரிவித்துள்ளேன். நான் யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. கட்சிக்குள் எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. கட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்பது மட்டுமே என் நோக்கம். தனிப்பட்ட முறையில் அவர்மீது எனக்கு எந்தக் கோபமும் இல்லை. ஆனால், நம்மைத் தவிர யாரும் கட்சியில் இருக்கக் கூடாது என மாணிக்தாகூர் நினைக்கிறார். இந்தத் தொகுதியில் போட்டியிட 9 பேர் பணம் கட்டியுள்ளனர். அதில் யாருக்குக் கொடுத்தாலும் நல்லதுதான். ஆனால், மாணிக்தாகூருக்கு வாய்ப்பு கொடுத்தால் வேலை செய்ய மாட்டோம். அவரை நிறுத்தினால் கட்சியில் உள்ள பெரும்பாலானோர் இவருக்கு ஆதரவாக வேலை செய்ய மாட்டார்கள். உள்ளூரைச் சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும்" என்றார்.

இதுகுறித்து முன்னாள் மாவட்டத் தலைவர் கணேசன், ``காங்கிரஸ் கட்சியில் 1969-ம் ஆண்டு சேர்ந்தேன். 50 ஆண்டுகளாகக் கட்சிக்காக உழைத்துள்ளேன். அ.தி.மு.க. அமைச்சரிடம் நான் காசு வாங்கியதாகச் சொல்வதை யாரும் நம்ப மாட்டார்கள். என்னைக் கட்சியிலிருந்தே நீக்கினாலும் நான் காங்கிரஸ் கட்சிக்காரன்தான். அதை யாராலும் மாற்ற முடியாது" என்றார்.