Published:Updated:

“காங்கிரஸ் தன்னுடைய கூட்டணியை பலவீனமாக்குகிறது!” - அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கு

“காங்கிரஸ் தன்னுடைய கூட்டணியை பலவீனமாக்குகிறது!” - அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கு
“காங்கிரஸ் தன்னுடைய கூட்டணியை பலவீனமாக்குகிறது!” - அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கு

ந்தியா முழுவதும் 17-வது மக்களவைத் தேர்தல் ஏழுக் கட்டங்களாக நடைபெற உள்ளன. தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸும், அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் மத்தியில் ஆட்சியில் உள்ள பி.ஜே.பி-யும் தேர்தலைச் சந்திக்கின்றனர். பெரும்பாலான மாநிலங்களின் கட்சிகளின் கூட்டணிகளும் உறுதி செய்யப்பட்டு வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டாலும், சில மாநிலங்களில் கூட்டணிப் பேச்சு வார்த்தைகள் இழுபறியான நிலையில்தான் உள்ளன.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், டெல்லியில் மொத்தமுள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளையும் பி.ஜே.பி கைப்பற்றி வலுவான நிலையில் உள்ளது. தற்போது டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் உத்திரபிரதேசம் , மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் பி.ஜே.பி-க்கு எதிராகக் கூட்டணியை வலுப்படுத்துவதற்காகப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தது. ஏற்கெனவே காங்கிரஸ் உடன் கூட்டணி வைப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட மாயவதியும் மம்தா பானர்ஜியும் தனித்துத் தேர்தலைச் சந்திக்கின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள ஏழு தொகுதிகளின் அடிப்படையில் காங்கிரஸ், ஆம் ஆத்மிக்கு இடையேயான கூட்டணிப் பேச்சுவார்த்தையும் உடன்படாத நிலையை எட்டியுள்ளது. ஏழு தொகுதிகளில் ஐந்து போட்டியிட ஆம் ஆத்மி விரும்பியது ஆனால், சம அளவில் போட்டியிட காங்கிரஸ் விருப்பம் தெரிவித்தது. இந்த இரண்டு கட்சிகளுக்கு இடையான கூட்டணி ஏற்படுத்துவதற்காக சரத்பவர் முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், இந்தக் கூட்டணிப் பேச்சு வார்த்தைகள் இறுதி வடிவத்தை எட்டவில்லை. இந்நிலையில் இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், “ஆம் ஆத்மி தனித்து தேர்தலில் போட்டியிடுகிறது, இனி காங்கிரஸ் உடன் கூட்டணிப் பேச்சு வார்த்தையில்லை. காங்கிரஸ் தன்னுடைய கூட்டணியை பலவீனமாக்கி வருகின்றது” எனக் கூறியுள்ளார்.