Published:Updated:

`டி.டி.வி.தினகரனின் பின்னால் அ.தி.மு.க வரும்!’ - ஸ்டாலின் சந்திப்பை விவரிக்கும் வி.பி.கலைராஜன்

`டி.டி.வி.தினகரனின் பின்னால் அ.தி.மு.க வரும்!’ - ஸ்டாலின் சந்திப்பை விவரிக்கும் வி.பி.கலைராஜன்
`டி.டி.வி.தினகரனின் பின்னால் அ.தி.மு.க வரும்!’ - ஸ்டாலின் சந்திப்பை விவரிக்கும் வி.பி.கலைராஜன்

என்னுடைய மாவட்டத்தில் நடக்கும் பணிகளை நான்தான் கவனிக்க வேண்டும். இன்னொரு மாவட்டச் செயலாளர் தலையிடுவதை என்னால் ஏற்க முடியாது. தன்மானத்தை உரசும் வகையில் சிலர் நடந்துகொண்டார்கள். மனிதனுக்கு சுயமரியாதை என்பது மிகவும் முக்கியம். 

ம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தென்சென்னை வடக்கு மா.செ பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார் தி.நகர் முன்னாள் எம்.எல்.ஏ வி.பி.கலைராஜன். அ.தி.மு.க இரண்டாகப் பிளவுபட்டபோது, தினகரன் ஆதரவாளராக இயங்கி வந்தவர், இன்று ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டார். அரசியல்வாதியாக இருந்தாலும் கலை, இலக்கியம் போன்றவற்றில் தீவிர ஈடுபாடு கொண்டவர் கலைராஜன். திருச்சியில் அவரை வரவேற்ற தி.மு.க தலைவர் ஸ்டாலின், `எப்போதோ வந்திருக்க வேண்டியவர் நீங்கள், தாமதமாக வந்து சேர்ந்திருக்கிறீர்கள்’ என நெகிழ்ந்து கொண்டார். 

வி.பி.கலைராஜனிடம் பேசினோம். 

``தி.மு.க-வை நோக்கிச் செல்ல வேண்டிய அவசியம் ஏன் வந்தது?’’ 

``மத்திய அரசாங்கத்தின் செயல்பாடுகளைப் பார்த்தால், தமிழ்நாடு இந்தியாவில்தான் இருக்கிறதா என்ற சந்தேகம் வருகிறது. குஜராத்தில் ஒருவர் இறந்துபோனால், அவரை இந்திய மீனவராகப் பார்க்கிறார்கள். தமிழக மீனவர் இறந்துபோனால், அவரைத் தமிழராகத்தான் பார்க்கிறார்கள். இந்திய மீனவராகப் பார்ப்பதில்லை. `திராவிட நாடு கேட்பதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன’ எனக் கூறி, திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டார் அண்ணா. அந்தச் சூழ்நிலை மீண்டும் வந்துவிடுமோ என்ற அச்சம், இப்போது நிலவி வருகிறது. மற்ற மாநிலங்களைவிடத் தமிழகத்துக்கு மத்திய அரசு இழைத்த அநீதிகள் கொஞ்சம் நஞ்சமல்ல.

கல்வி, விவசாயம், குடிநீர் என அனைத்திலும் தமிழகம் சீரழிந்துவிட்டது. மத்திய அரசோடு நட்பில் இருந்தாலும், மோடியிடம் பேசி மக்கள் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு எடப்பாடி பழனிசாமி அரசு முயலவில்லை. அவர்களுடைய தனிப்பட்ட வழக்கு பிரச்னைகளைத்தான் தீர்த்துக் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட நேரத்தில், திராவிட இயக்கம் அழிந்துபோகாமல் படர்ந்து தழைத்தோங்குவதற்குச் சரியான ஒரு தலைமை தேவைப்படுகிறது. அந்தத் தலைமையைக் கொடுக்கக்கூடிய தலைவராக ஸ்டாலின் இருக்கிறார். என்னைக் கட்சியைவிட்டு நீக்கினார்கள். எனக்கு வேறுவழியில்லை. இப்படியொரு நிலையை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.’’ 

``நீங்கள் தி.மு.க-வில் இணையப்போகும் தகவலை அறிந்த பிறகுதான், உங்களை டி.டி.வி.தினகரன் நீக்கினாரா?’’ 

`` நான் தி.மு.க-வுக்குச் செல்லப்போகும் தகவல் அவர்களுக்கு எப்படித் தெரியும். என்னைக் கட்சியிலிருந்து நீக்கினார்கள். நான் தி.மு.க-வுக்கு வந்துவிட்டேன். அங்கு யார் மீதும் எனக்கு வருத்தமில்லை.’’ 

``தொடர்ச்சியாக அ.ம.மு.க-வில் இயங்க முடியாமல் போனதற்கு என்ன காரணம்?’’ 

``நான் முழுக்க டி.டி.வி-யின் நட்புக்கும் பாசத்துக்கும் கட்டுப்பட்டுத்தான் அ.ம.மு.க-வில் சேர்ந்தேன். மற்ற யாருக்காகவும் நான் சேரவில்லை. அந்த நட்பில் சில இடர்ப்பாடுகள் ஏற்பட்டன. என்னை மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்குவதற்கும் சிலர் முயற்சி செய்தார்கள். என்னுடைய மாவட்டத்தில் நடக்கும் பணிகளை நான்தான் கவனிக்க வேண்டும். இன்னொரு மாவட்டச் செயலாளர் தலையிடுவதை என்னால் ஏற்க முடியாது. தன்மானத்தை உரசும் வகையில் சிலர் நடந்துகொண்டார்கள். மனிதனுக்குச் சுயமரியாதை என்பது மிகவும் முக்கியம்.’’ 

``உங்கள் மாவட்டத்தில் தலையிடுவதாக நீங்கள் குறிப்பிடுவது வெற்றிவேலைப் பற்றித்தானே?’’ 

``ஆமாம். அவர் மண்டல நிர்வாகியாக இருக்கிறார். என்னுடைய மாவட்டத்தில் வட்டச் செயலாளர், பகுதிச் செயலாளர் யார் என்பதை அவரே முடிவு செய்தார். நான் கொண்டு வர விரும்பும் நிர்வாகிகளின் பட்டியலையும் மாற்றிவிட்டு, அவர் விருப்பத்துக்குப் பதவிகளை நிரப்பினார். என்னுடைய கவனத்துக்குக்கூட கொண்டு வராமல் செயல்படுவது என்பது, எனக்கு இழைக்கப்படும் அநீதிதானே. இப்படிப்பட்ட அவமானங்களைத் தாங்கிக்கொண்டு எப்படி அ.ம.மு.க-வில் நீடிக்க முடியும்? இதுவும் ஒரு காரணம். திராவிட இயக்க உணர்வுள்ளவர்கள், அங்கு செயல்பட முடியாது. பிரதமர் மோடியை, `சாடிஸ்ட்', `பாஸிஸ்ட்’ எனக் கடுமையாக விமர்சிக்கிறார் ஸ்டாலின். அவரை ஏற்றுக் கொள்வதில் தவறு இல்லையே?’’ 

``அப்படியானால், தினகரன் மோடியை விமர்சிப்பதில்லை என்கிறீர்களா?’’ 

``அப்படியில்லை. `என்னுடைய ஆயுள் இருக்கின்ற வரையில் பா.ஜ.க-வுடன் உறவு வைக்க மாட்டேன்’ எனக் கூறியிருக்கிறார் தினகரன். ஆனால், தமிழ்நாடு முழுக்க 40 சதவிகிதத்துக்கும் மேல் வாக்குவங்கி உள்ள தி.மு.க-வால்தான் களத்தில் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியை வீழ்த்த முடியும். மற்றவர்கள் எல்லாம் சிதறியிருக்கும்போது எதிரிக்கு வாய்ப்பு கொடுத்தது போலாகிவிடும். டி.டி.வி-யோடு எனக்குத் தனிப்பட்ட மோதல் எதுவும் இல்லை.’’

``உங்களுக்கு நேர்ந்த இடர்ப்பாடுகள் குறித்து டி.டி.வி-யின் கவனத்துக்குக் கொண்டு சென்றீர்களா?’’ 

`` இது தெரிந்த விஷயம்தான். இதைப் பெரிதுபடுத்த நான் விரும்பவில்லை. என்னுடைய பாதையில் சில இடையூறுகள் வரும்போது, அவற்றைச் சகித்துக்கொண்டு புதிய பாதையைத் தேர்வு செய்துகொள்ள வேண்டும் என விரும்பினேன். அவ்வளவுதான்.’’ 

``நாடாளுமன்றத் தேர்தலில் தினகரன் தனித்து நிற்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’ 

``எப்படியும் வெற்றிபெற்றுவிடலாம் என அவர் நினைக்கிறார். மக்கள் மத்தியில் தினகரனுக்கு வரவேற்பு இருக்கிறது. அதை இல்லையென்று மறுக்க முடியாது. அதைக் குறைத்தும் மதிப்பிட முடியாது. அந்த வரவேற்பை வைத்துக்கொண்டு தமிழகம் முழுவதும் அவரால் வெற்றி பெற்றுவிட முடியுமா என்ற சந்தேகம் இருக்கிறது. இன்று தேர்தல் களத்தில் முன்னணியில் நிற்கிறார் ஸ்டாலின்.’’ 

``தி.மு.க-வுக்கு வருவதற்கு ஏதேனும் உத்தரவாதம் தரப்பட்டதா?’’ 

``எந்தவித உத்தரவாதங்களும் தரப்படவில்லை. நானும் அதை எதிர்பார்க்கவில்லை. என்னை நல்லபடியாக வரவேற்றார். `சிறப்பாகப் பணியாற்றுங்கள்’ என்றார்.’’ 

``அ.ம.மு.க-வின் எதிர்காலம் எப்படியிருக்கும்?’’ 

``அந்த இயக்கம் நல்லபடியாக வளர வேண்டும் என விரும்புகிறேன். அ.ம.மு.க வளர்ந்தால்தான், அண்ணா தி.மு.க என்ற பெயரில் இப்போது இயங்கும் போலியான கும்பல் சிதறும். மற்றவர்கள் எல்லாம் டி.டி.வி-யின் பின்னால் வருவதற்கான வாய்ப்புகளும் உருவாகும். அந்த அடிப்படையில் அ.ம.மு.க நன்றாக வளர வேண்டும் என விரும்புகிறேன்.’’

அடுத்த கட்டுரைக்கு