Published:Updated:

மசூத் அசார் விவகாரம்... பாகிஸ்தானிடம் சீனா மண்டியிடுவது ஏன்?!

தொடர்ந்து 4-வது முறையாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க விடாமல் சீனா தடுத்து வருவதற்கு 2 முக்கிய காரணங்கள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. 

மசூத் அசார் விவகாரம்... பாகிஸ்தானிடம் சீனா மண்டியிடுவது ஏன்?!
மசூத் அசார் விவகாரம்... பாகிஸ்தானிடம் சீனா மண்டியிடுவது ஏன்?!

புல்வாமா தாக்குதலுக்குக் காரணமான ஜெய்ஷ் -இ- முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கவிடாமல், சீனா தொடர்ந்து முட்டுக்கட்டைப் போட்டு வருவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. 

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவித்து, தடை விதிக்கக் கொண்டு வந்த தீர்மானத்துக்கு சீனா மட்டும் தடையாக இருந்தது. இதுகுறித்து இந்தியா கடும் அதிருப்தியைத் தெரிவித்ததோடு, `தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாட்டை சீனா கைவிட வேண்டும்’ என்றும் வலியுறுத்தியது. ஆனால், `சீனாவின் தடை தொழில்நுட்ப ரீதியானதுதான்’ என்றும் விளக்கமளித்த இந்தியாவுக்கான சீனத் தூதர், தொடர்ந்து ஆலோசனைகள் நடத்தி, இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Image Courtesy: Reuters Photo

இந்த நிலையில், தொடர்ந்து 4-வது முறையாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க விடாமல் சீனா தடுத்து வருவதற்கு 2 முக்கிய காரணங்கள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. 

சீனா - பாகிஸ்தான் பொருளாதாரப் பாதை திட்டம்

சீனா எப்போதுமே, தனது வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் அது தொடர்பான விருப்பங்களைத் தனது நாட்டின் நலன்கள் மற்றும் வியூகங்களின் அடிப்படையிலேயே தீர்மானிக்கும். அப்படித்தான் தற்போது மசூத் அசார் விவகாரத்திலும் அது இந்தியாவுக்கு எதிராக நடந்து வருகிறது. இயல்பாகவே இந்திய நலன்களுக்கு எதிரானவற்றைத்தான் தனது தூதரக நடவடிக்கைகள் மூலம் சீனா மேற்கொள்ளும். அதிலும், பாகிஸ்தான் கூட்டாளி நாடு என்பதால், அந்த நாடு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் மட்டுமல்லாது, தனது நலன்களையும் கருத்தில் கொண்டே, மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க விடாமல் காப்பாற்றி வருகிறது. 

அப்படி என்ன நலன்கள் உள்ளது என்றால், முதலில் வருவது CPEC (China Pakistan Economic Corridor) எனப்படும் சீனா - பாகிஸ்தான் பொருளாதாரப் பாதை திட்டம். சுமார் 60 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்பில் சீனா செயல்படுத்தி வரும் இந்தப் பொருளாதாரப் பாதை திட்டம், ஐரோப்பிய - ஆசிய பிராந்தியத்தின் எதிர்கால அரசியல் மற்றும் பொருளாதாரத்தை மாற்றியமைக்கக் கூடும். இந்தத் திட்டம் தெற்காசிய பிராந்தியத்தின் ஒட்டு மொத்த நுகர்வோர் சந்தையையும் தனது டிராகன் கரங்களுக்குள் கொண்டு வர நினைக்கும் சீனாவின் மிகத் தந்திரமான திட்டமாகவே பார்க்கப்படுகிறது.

சீனாவின் முக்கிய நிலப்பகுதிகளை சாலைகள், ரயில் பாதை மற்றும் கடல் வழிகள் ஊடாக ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளுடன் இணைக்கும் நோக்கத்தில்தான் இந்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. தெற்காசிய எல்லைப்பகுதிக்குள் இருக்கும் சீனாவின் சுயாட்சி மாகாணமான சின்ஜியாங் மாகாணத்தில் உள்ள காஸ்கர் என்ற இடத்தை, பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாடர் என்ற துறைமுக நகரை இணைப்பதுதான், இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம்.

இந்தப் பொருளாதாரப் பாதையானது, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்துள்ள காஷ்மீர் வழியாகப் பயணிக்கிறது. இந்தத் திட்டத்தினால் பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல் வேறு பலமட்டங்களிலும் மிக அதிகமாகப் பயனடையப்போகும் நாடு சீனாதான். ஏனெனில், உலகின் தெற்குக் கடல் பகுதியை அடைய முடியாத அளவுக்கு பூகோள ரீதியாக மிகவும் முடமான நிலையில் உள்ளது சீனா. இதனால் ஐரோப்பா, மத்தியக் கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளிலிருந்து சீனாவுக்குச் செல்லும் சரக்குக் கப்பல்கள் இந்தியா, மலாக்கா மற்றும் ஆசிய நாடுகளைச் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டியது உள்ளது. ஆனால், இந்த நாடுகளில் பெரும்பாலானவை, சீன ராணுவத்தின் ஆக்கிரமிப்பு குணத்தால், அந்த நாட்டை வெறுப்புடனேயே பார்த்துக்கொண்டிருக்கின்றன. 

ஆனால், பாகிஸ்தானை தனது நட்பு நாடாக சீனா வளைத்துப்போட்டுள்ளதால், பாகிஸ்தான் வழியாக அரேபிய கடலை அடைவதற்கான பாதை கிடைக்கும். அதாவது இந்தியப் பெருங்கடலுக்குச் செல்வதற்குக் குறுக்கு வழி கிடைக்கும். இதனால் இந்தியப் பெருங்கடலின் மேற்குப் பகுதிகளை சீனா எளிதாக அடைய முடியும். மேலும், மேற்கு ஆசியாவிலிருந்து தனக்கான ஆயில் சப்ளைகளையும் எளிதாகப் பெற சீனாவுக்கு இந்தத் திட்டம் உதவும்.  

மசூத் அசாருக்காக மண்டியிடுவது ஏன்?

இந்த அளவுக்கு சீனாவுக்குப் பயனளிக்கும் இந்த CPEC திட்டத்துக்கான பாதை, பிரச்னைக்குரிய பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கில்கிட் - பல்டிஸ்தான் வழியாகச் செல்கிறது. இந்தப் பிரதேசத்தை இந்தியா, தனக்குச் சொந்தமான வரலாற்று முக்கியத்துவம் கொண்ட புறநிலப்பகுதியாகப் பார்க்கிறது. இத்தகைய சூழலில் மேற்கூறிய பொருளாதாரப் பாதை கட்டுமான பணிக்கான பாதுகாப்புக்காக, சீனா தனது துருப்புகளை அங்கு நிறுத்தியுள்ளது. இது பூகோள ரீதியாக இந்தியாவின் பாதுகாப்பு வியூக முனைக்கு, குறிப்பாக உலகின் மிக உயரமான பனிப்பாறையாகக் கருதப்படும் சியாச்சின் சிகரத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. 

இதனால்தான் இந்தத் திட்டத்துக்கு இந்தியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனாலும், இந்தத் திட்டம் இந்தியாவை மையமாகக் கொண்டது அல்ல என்றும், பொருளாதார வளர்ச்சி மற்றும் பிராந்திய அமைதியை நோக்கமாகக் கொண்டது என்றும் சீனா மறுப்புத் தெரிவித்து வருகிறது. 

இந்த நிலையில், இந்தப் பொருளாதாரப் பாதை திட்டப் பணிகள், குறிப்பாக பாகிஸ்தானுக்கு உட்பட்ட பாதையில் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், இதற்காக இதுவரை ஏகப்பட்ட பில்லியன் டாலரை சீனா வாரி இறைத்துள்ளது. 

இந்த நிலையில், மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கச் செய்யும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்துக்கு சீனா ஆதரவு தெரிவித்தால், அது பாகிஸ்தானை மட்டுமல்லாது மசூத் அசாரையும் பகைத்துக் கொள்வதாக அமையும். அப்படிப் பகைத்துக்கொண்டால், அது CPEC பொருளாதாரப் பாதை திட்டத்துக்குக் குந்தகமான விளைவுகளை ஏற்படுத்தி விடும். ஏற்கெனவே, இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதால் தங்களது நிலங்கள் பறி போவதாக CPEC திட்டம் செயல்படுத்தப்படும் பாகிஸ்தான் பகுதிகளிலுள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

குறிப்பாக கில்கிட் - பல்டிஸ்தான் பகுதி மக்கள், இந்தத் திட்டத்தினால் தங்களது இயற்கை வளம் பறிபோவதாகவும், அந்த வளத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் இந்தத் திட்டத்துக்கான பணிகளில் கூட, தங்களை அமர்த்தாமல் சீனப்பணியாளர்களே பயன்படுத்தப்படுவதாக அதிருப்தி வெளியிட்டு வந்தனர். ஆனால், அவர்களை ஒருவழியாக பாகிஸ்தான் அரசு சமாதானப்படுத்தியும்  ராணுவத்தினர் மூலம் அச்சுறுத்தியும் வைத்துள்ளது.

மசூத் அசார் விவகாரத்தில் இந்தியாவை சீனா ஆதரிக்கும் பட்சத்தில் அது, பாகிஸ்தான் அரசுக்கு மட்டுமல்லாது மசூத் அசாரின் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் உள்ளிட்ட பல பயங்கரவாத இயக்கங்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தும். இதனால் பயங்கரவாத அமைப்புகளால் இடையூறு அல்லது அச்சுறுத்தல் ஏற்பட்டு, பொருளாதாரப் பாதை திட்டத்தைச் செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்படும். இந்தியாவையே மிரட்டிப் பார்க்கும் சீனாவுக்கு, பாகிஸ்தானை அடக்குவது பெரிய விஷயம் அல்ல என்றாலும், பொருளாதாரத் திட்டத்தைச் செயல்படுத்தும் விஷயத்தில் தடாலடியாகச் செயல்பட்டு விட முடியாது. 

ஏனெனில், CPEC திட்டத்தைத் தொடர்ந்து, ஐரோப்பா, ஆசியா என இரண்டு கண்டங்களின் ஒட்டுமொத்த நுகர்வோர் சந்தையையும் தனது பிடியில் கொண்டுவரும் நோக்கத்துடன் சீனா உருவாக்கி இருப்பது, One Belt-One Road (OBOR) எனப்படும் `ஒரு சூழல் - ஒரு பாதை’ என்ற திட்டம். பண்டைக்காலத்தில் `பட்டுப்பாதை’ என்ற பெயரில் ஐரோப்பிய நாடுகளையும் ஆசியாவையும் இணைக்கும் வணிகப்பாதை ஒன்று இருந்தது. அதை மீண்டும் உருவாக்குவதுதான், `புதிய பட்டுப் பாதை’ (New Silk road) என்ற பெயரில் அழைக்கப்படும் இந்தத் திட்டம். இதில் மேலும் பல நாடுகள் சம்பந்தப்பட்டிருப்பதால், பாகிஸ்தானை இன்று மிரட்டினால், அதைப் பார்க்கும் மற்ற நாடுகள் பின்வாங்கி விடும். அப்படி ஒரு நிலை உருவானால், அது சீனாவுக்குப் பல பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி விடும். 

அது மட்டுமல்லாது, CPEC திட்டத்துக்காக இதுவரை செலவழிக்கப்பட்ட பணமும் வீணாகி விடும். அப்படி ஒரு நிலை உருவாவதை விரும்பாததால்தான், மசூத் அசார் விவகாரத்தில் சீனா, பாகிஸ்தானுக்குச் சாதகமாக பம்மிப் பதுங்குகிறது. 

கவனத்தைத் திசை திருப்பும் யுக்தி

அடுத்த காரணம், இந்தியா தன் சீனா எல்லையையொட்டி உள்ள தனது பகுதிகளில் சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு பணிகளை மிகத் தீவிரமாகவும் வேகமாகவும் செயல்படுத்தி வருகிறது. உதாரணத்துக்குச் சொல்வதென்றால், சீனப் படையினர் எல்லைப் பகுதியில் அத்துமீறலில் ஈடுபட்டால் உடனடியாக அங்கு இந்தியத் துருப்புகள் விரைவாகச் சென்று சேருவதற்கான சாலை அமைத்தல், விமானத் தளங்களை அமைத்தல் போன்ற பணிகளைச் செயல்படுத்தி வருகிறது. மேலும், சீனாவையொட்டியுள்ள எல்லைப் பகுதிகளில் பல மலைப் பகுதியாகவும், பனிச் சிகரமாகவும் இருப்பதால், மலைப்பகுதியில் சண்டையிடும் திறன் கொண்ட அதிரடி கமாண்டோக்களைக் கொண்ட படையினரின் எண்ணிக்கையையும் இந்திய ராணுவம் அதிகரித்துள்ளது. இவையெல்லாம் சீனாவுக்குக் கவலை ஏற்படுத்தி உள்ளது. 

எனவேதான், இந்தியாவின் கவனம் எப்போதும் பாகிஸ்தான் பக்கமே இருக்க வேண்டும், நம் பக்கம் திரும்பக் கூடாது என்ற எண்ணத்தில் இந்தியா - பாகிஸ்தான் உறவில் எப்போதும் ஒரு கொந்தளிப்பான நிலை நீடிப்பதை அது விரும்புகிறது. அதற்கு மசூத் அசார் போன்ற பயங்கரவாதிகளை இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் மூலம் பயன்படுத்திக் கொள்வது நல்லது என்று கருதுகிறது. அதனால்தான் மசூத் அசார் விவகாரத்தில் சீனா தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக முட்டுக்கட்டை போட்டு வருகிறது என்கிறார்கள் பாதுகாப்புத் துறை நிபுணர்கள். 

இருப்பினும், `சீனா தொடர்ந்து இதே போக்கைக் கடைப்பிடித்தால், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் வேறு நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய நெருக்கடிக்கு உள்ளாவார்கள்’ என்று பாதுகாப்பு கவுன்சில் தூதர் ஒருவர் கூறியிருப்பது இந்தியாவுக்குச் சாதகமான நிலையாகப் பார்க்கப்படுகிறது.