Published:Updated:

`நாளைக்குத்தான் செல்போனே வாங்கப் போறேன்!' - தி.மு.க-வில் இப்படியும் ஒரு வேட்பாளர்

`நாளைக்குத்தான் செல்போனே வாங்கப் போறேன்!' - தி.மு.க-வில் இப்படியும் ஒரு வேட்பாளர்
`நாளைக்குத்தான் செல்போனே வாங்கப் போறேன்!' - தி.மு.க-வில் இப்படியும் ஒரு வேட்பாளர்

மானாமதுரை சட்டமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளருக்கு, சொந்தமாக செல்போன்கூட இல்லை.அந்த அளவிற்கு மிகவும் எளிமையாக இருக்கிறார். இதுதான் தி.மு.க-விற்கு ப்ளஸ் பாயின்ட் என்கிறார்கள் தி.மு.க நிர்வாகிகள்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தனித் தொகுதி. இந்தத் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ-வாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மாரியப்பன் கென்னடி. 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டவர்கள் பட்டியலில் மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ-வும் உண்டு. ஆகையால், இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல்  நடைபெற உள்ளது. அ.தி.மு.க சார்பில் நாகராஜனும், அ.ம.மு.க சார்பில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ மாரியப்பன் கென்னடியும் ,தி.மு.க சார்பில் இலக்கியதாசனும் களமிறங்கியிருக்கிறார்கள்.

தன்னுடைய எளிமையான தோற்றம், இயல்பான பேச்சு, பழக்கவழக்கங்கள்தான் என்னுடைய வெற்றிக்கு வழிவகுக்கும் என்கிற நம்பிக்கையில் தொகுதிக்குள் வலம்வருகிறார் இலக்கியதாசன். இந்த விஞ்ஞான தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த காலத்திலும் செல்போன் இல்லாமல் உலாவருகிறார் தி.மு.க வேட்பாளர் இலக்கியதாசன். கட்சி நிர்வாகிகள் எல்லாம் இவரைத் தொடர்புகொள்ள வேண்டுமானால், அவருடன் இருக்கும் நபருடைய எண்ணிற்குத் தொடர்புகொள்ள வேண்டியதாக இருக்கிறது என்கிறார்கள் கட்சி நிர்வாகிகள். 

இதுகுறித்து வேட்பாளர் இலக்கியதாசனிடம் பேசியபோது, 'நான் 1969-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா காலத்திலிருந்து கட்சியில் இருக்கிறேன். என்னோட குருநாதர் தா.கிருஷ்ணன். அப்போது இருந்தே நான் எளிமையான வாழ்க்கை வாழ்ந்துவருகிறேன். எனக்கு செல்போன் தேவையில்லை. நான் யார்கூட இருக்கிறேன் என்பது என் மனைவிக்குத் தெரியும். ஏதாவது பேச வேண்டும் என்றால்,  அவர்கள் செல்போன் எண்ணிற்கு அழைத்துப் பேசுவார்கள். இப்படித்தான் என் தொலைத்தொடர்புகள் போய்க்கொண்டிருக்கிறது. இனிமேல் இப்படி இருக்க முடியாது. என் கட்சித் தொண்டர்களுக்காகவும், தொகுதி மக்களுக்காகவும் நாளை செல்போன் வாங்க இருக்கிறேன் என்றார்.''