Published:Updated:

``அம்பேத்கர் தொடங்கிய கட்சியின் தேர்தல் வேட்பாளர் பவர் ஸ்டாரா?” - இந்தியக் குடியரசுக் கட்சிக்கு ஒரு கேள்வி

பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன் ஐபிசி 406 (நம்பிக்கை மோசடி) 420 (மோசடி) 506/2 (கிரிமினல் குற்றம்) 27 ஆர்ம்ஸ் ஆக்ட் உள்ளிட்ட பல பிரிவுகளில் காவல்துறையால் கைது செய்யப்பட்டவர். இதற்கு முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்த அவர், பிறகு அந்தக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

``அம்பேத்கர் தொடங்கிய கட்சியின் தேர்தல் வேட்பாளர் பவர் ஸ்டாரா?” - இந்தியக் குடியரசுக் கட்சிக்கு ஒரு கேள்வி
``அம்பேத்கர் தொடங்கிய கட்சியின் தேர்தல் வேட்பாளர் பவர் ஸ்டாரா?” - இந்தியக் குடியரசுக் கட்சிக்கு ஒரு கேள்வி

நாடாளுமன்றத் தேர்தல் களம், அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிப்பு மற்றும் தேர்தல் அறிக்கைகள் வெளியீடுகளைத் தொடர்ந்து சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதற்கிடையே இந்தியக் குடியரசுக் கட்சி (அ) தனது தென் சென்னைத் தொகுதி வேட்பாளராக நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனை நிறுத்தியிருப்பதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

சர்ச்சைக்குப் பின்னணி இதுதான்..!

அரசியல் சாசன சிற்பி அண்ணல் அம்பேத்கர், கடந்த 1956-ல் தன்னுடைய இறுதிக்காலங்களில் உருவாக்கிய பட்டியல் சாதிகள் கூட்டமைப்பை வேர் ஆதாரமாகக் கொண்டு உருவாக்கியதுதான் இந்தியக் குடியரசுக் கட்சி. இந்தக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட சிறிது காலத்திலேயே அம்பேத்கர் மறைந்தார். கூட்டமைப்பில் அம்பேத்கரிடம் அரசியல் பயின்ற மாணவர்கள், இந்தக் கட்சியை உருவாக்கினார்கள். பிற்காலத்தில் பல்வேறு கருத்து வேறுபாடுகளால் அந்தக் கட்சி பிளவுபட்டது. பிளவுபட்ட கட்சிகள் அதன் தலைவர்களின் பெயரை முன்மொழிந்து, இந்தியக் குடியரசுக் கட்சி என்கிற பெயரிலேயே இயங்கி வருகின்றன. அந்த வகையில் இந்தியக் குடியரசுக் கட்சி (அ) ராம்தாஸ் அத்வாலேயைத் தலைவராகக் கொண்டு மும்பையிலிருந்து இயங்கி வருகிறது. ராம்தாஸ் அத்வாலே,  நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் சமூக நீதித்துறை கேபினட் அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர்.

இதற்கிடையேதான், `அம்பேத்கர் உருவாக்கிய கட்சியின் வேட்பாளர் சர்ச்சைக்குள்ளான நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனா?' என்று கொள்கை அரசியல் செயற்பாட்டாளர்கள் பலர் கேள்விகளை முன்வைத்து வருகின்றனர். பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் இந்தியக் குற்றவியல் சட்டம் 406 (நம்பிக்கை மோசடி), 420

(மோசடி) 506/2 (கிரிமினல் குற்றம்) 27 ஆயுதங்கள் சட்டம் உள்ளிட்ட பல பிரிவுகளில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்தவர். இதற்கு முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்த அவர் பிறகு அந்தக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். 

தேர்தல் அரசியல் களங்களில் நடக்கும் சமரசப் போக்குகள் பற்றி கொள்கை அரசியல்வாதிகள் சுட்டிக்காட்டி வந்தாலும், `கொள்கை அரசியல் கட்சிகளே மக்கள் நம்பிக்கையை இழக்கச் செய்யும் வகையில் நடந்துகொள்வது வருத்தமளிக்கிறது' எனச் சமூக ஊடகங்களில் இதுதொடர்பாகக் கருத்துகள் பகிரப்பட்டு வந்தன. இதுகுறித்து ராம்தாஸ் அத்வாலேயைத் தொடர்புகொண்டு பேசினோம். ``கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் மத்திய பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டாக இயங்கினோம். ஆனால், அவர்கள் மக்களுக்குப் பரந்துபட்ட அளவில் எவ்வித நன்மையையும் செய்யவில்லை. அதனால், இந்தத் தேர்தலில் பட்டியல் சமூக மக்களுக்கு உரிய குரலாக இருக்கும் வகையில் தனித்துப் போட்டியிடுகிறோம். மற்றபடி தமிழகத்தில் இயங்கும் எங்கள் கட்சி, வேட்பாளர்களை முடிவுசெய்து விட்டுத்தான் எங்களுக்குத் தெரிவிப்பார்கள். நீங்கள் அவர்களிடமே கேட்டுக்கொள்ளுங்கள்” என்றார். 

இந்தியக் குடியரசுக் கட்சியின் தமிழகத் தலைவர் சூசை கூறுகையில், ``பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் இரண்டு வருடங்களாக எங்கள் கட்சியின் மாநிலப் பொறுப்பில் இருக்கிறார். நாங்கள் திருவள்ளூர் தொடங்கி மதுரை வரை போட்டியிடுகிறோம். ஆக, தென்சென்னைத் தொகுதியில் அவர் போட்டியிட விருப்பம் தெரிவித்த நிலையில் அவரை வேட்பாளராகத் தேர்வு செய்தோம். இது கட்சித் தலைவர் ராம்தாஸ் அத்வாலேவுக்கும் தெரிவிக்கப்பட்டது. மற்றபடி ஒருவர் செய்த தவறுக்காக, அவரை முற்றிலும் ஒதுக்கிவைப்பது நியாயம் இல்லை. ஸ்ரீனிவாசன் மீது இதுநாள்வரைச் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்துக்கும் அவரே தீர்வு காண்பார் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது” என்று தெரிவித்தார்.