Published:Updated:

ஹேக் செய்யப்பட்ட பி.ஜே.பி இணையதளம்... ஏன் சரிசெய்ய முடியவில்லை?

``இதில் ஹேக்கர்ஸ் மட்டும் தனியாகச் செயல்படுகிறார்கள் என்று சொல்ல முடியாது. மிடில் ஈஸ்ட், பாகிஸ்தான், சீனா, ரஷ்யா,உக்ரைன் இந்த நாடுகளில் இருந்தெல்லாம் எங்கள் இணையதளத்தை முடக்குகிறார்கள்."

ஹேக் செய்யப்பட்ட பி.ஜே.பி இணையதளம்... ஏன் சரிசெய்ய முடியவில்லை?
ஹேக் செய்யப்பட்ட பி.ஜே.பி இணையதளம்... ஏன் சரிசெய்ய முடியவில்லை?

த்தியில் உள்ள பி.ஜே.பி அரசின் செயல்பாடுகள், எதிர்காலத் திட்டங்கள் உள்ளிட்டவற்றை அதிகாரபூர்வமாக வெளியிட்டு வந்தது பி.ஜே.பி-யின் இணையதளமான bjp.org என்ற வலைதளம். நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. ஆளும் பி.ஜே.பி. அரசு, கடந்த ஐந்தாண்டுக்கால ஆட்சியின்போது செய்த சாதனைகள், நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, பி.ஜே.பி. மேற்கொள்ளவிருக்கும் பிரசாரம் குறித்த அறிவிப்புகள், வேட்பாளர்களின் பிரசார உரைகள் உள்ளிட்டவற்றை தங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் வேலைகளில் பி.ஜே.பி-யின் ஐ.டி. விங்கைச் சேர்ந்தவர்கள் பரபரப்பாகத் தயாராகிக்கொண்டிருந்தார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் பி.ஜே.பி-யின் அதிகாரபூர்வ இணையதளம் மார்ச் 5-ம் தேதி முதல் முடக்கப்பட்டது. மர்ம நபர்கள் சிலர் அந்த இணையதளத்தை ஹேக் செய்து முடக்கியது மட்டுமன்றி, அதில் பிரதமர் மோடியை விமர்சித்து ஒரு மீமையும் பதிவேற்றம் செய்தார்கள். 15 நாள்கள் ஆன நிலையிலும் இன்னமும் பி.ஜே.பி-யால் தங்களின் இணையதளத்தை மீட்டெடுக்க முடியவில்லை. மத்தியில் ஆட்சியில் உள்ள ஒரு கட்சியின் இணையதளமே முடக்கப்பட்டு இன்னும் மீட்கப்படாமல் இருப்பது குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வியெழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். பி.ஜே.பி. இணையதளத்தை முடக்கக் காரணம் என்ன, ஏன் அதை முடக்கினார்கள் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக அந்தக் கட்சியின் ஐ.டி விங் தமிழ்நாடு செயலாளர் நிர்மல்குமாரிடம் பேசினோம்.

அவர், ``கட்சியின் இணையதளத்தைச் சரி செய்வதொன்றும் எங்களுக்குப் பெரிய காரியமில்லை. எங்கள் இணையதளத்தைச் சீரமைக்கும் வேலையை இப்போதைக்கு நிறுத்தி வைத்திருக்கிறோம். பிரச்னை என்னவென்றால் நாங்கள் சீர் செய்யும்போதே ஹேக்கர்ஸ் தாக்க ஆரம்பிக்கிறார்கள். மிடில் ஈஸ்ட், பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, உக்ரைன் போன்ற நாடுகளில் இருந்தெல்லாம் எங்கள் இணையதளத்தை முடக்குகிறார்கள்" என்றார்.

``எதற்காக அவர்கள் தாக்குகிறார்கள் என நினைக்கிறீர்கள்?"

``ஹேக்கர்ஸ்-க்குப் பல நோக்கங்கள் இருக்கும். ஆனால், பி.ஜே.பி-யின் இணையதளத்தைத் தாக்குகிறார்கள் என்றால், இதில் ஹேக்கர்ஸ் மட்டும் தனியாகச் செயல்பட்டுள்ளார்கள் என்று சொல்லிவிட முடியாது. இங்கே இருக்கிற பிற கட்சிகள் ஹேக்கர்ஸ்களைத் தூண்டிவிடுகிறார்கள். எங்கள் வெப்சைட் ஹேக் செய்யப்படுவதற்கு எதிர்க்கட்சிகள், ஹேக்கர்ஸ்-க்குப் பெரிய அளவில் பணஉதவி செய்வதாகத் தெரிகிறது. நாட்டு மக்களிடையே பி.ஜே.பி வளர்த்து வைத்துள்ள நல்ல பிம்பத்தை எப்படியாவது உடைக்க வேண்டும் என்கிற திட்டங்களில் ஒன்றுதான் இது". 

``மத்தியில் ஆட்சி புரியும் ஒரு கட்சியின் இணையதளத்திற்கே இந்த நிலைமை என்றால் அரசுத் தொடர்புடைய மற்ற ஆவணங்கள், நாட்டு மக்களின் தகவல்கள் அடங்கிய இணையதளங்கள் ஆகியவற்றின் பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம்?"

``ஹேக் செய்யப்பட்ட எங்கள் வெப்சைட்டை ரிவேம்ப் செய்வது எங்களுக்குப் பெரிய விஷயமில்லை. சொல்லப்போனால் அதைச் சரி செய்தும் விட்டோம். ஆனால், உடனே மீண்டும் ஹேக்கர்ஸ் தாக்க ஆரம்பித்து விடுகிறார்கள். இணையதளத்தைச் சரிசெய்யும்போதே, குறுக்கிட்டு ஹேக் செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள். ஒரேநேரத்தில் 800 பேர் வெவ்வேறு நாடுகளிலிருந்து எங்கள் இணையதளத்தைத் தாக்குகிறார்கள். இது சீனாவின் சதி வேலையா அல்லது `ஐ.எஸ்.ஐ' அமைப்பின் நாசகரச் செயல்பாடா, எதிர்க்கட்சிகளின் காழ்ப்புணர்ச்சியா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் அதுபற்றித் தெரியவரும்".

``இதற்கு என்னதான் தீர்வு? பி.ஜே.பி. இணையதளம் இனிச் செயல்படாதா?"

``இப்போதெல்லாம் இணையதளங்களை ஹேக் செய்வதென்பது சாதாரணமான ஒன்றாகி விட்டது. நாம் எவ்வளவுதான் பாதுகாப்பாக இருந்தாலும், தகவல்களைத் திருடி, ஹேக் செய்து விடுகிறார்கள். அப்படியிருக்கிறபோது எதிரிகள் அதிகம் இருக்கிற பி.ஜே.பி-யின் இணையதளத்தை இன்னும் பாதுகாப்புடன் வைக்க வேண்டிய சூழலுக்கு நாங்கள் தள்ளப்பட்டிருக்கிறோம். ஆனால், இப்போதைக்கு எங்கள் கவனம் முழுக்க முழுக்க தேர்தலில் மட்டுமே உள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றவுடன் முழுமூச்சுடன் செயல்பட்டு கட்சியின் இணையதளத்தை மீட்டெடுப்போம்".