
“நான் நிரந்தரமானவன்; அழிவதில்லை..!” - பகுதி 3

51. வசதியிலும் அந்தஸ்திலும் தங்களுக்குக் குறைந்தவர் என்பதால், டி.எம்.எஸ்ஸுக்குத் தன் தங்கை சுமித்ராவைத் திருமணம் செய்து தர மறுத்துவிட்டார் அண்ணன். சுமித்ராவுக்கோ டி.எம்.எஸ்ஸை மணம் செய்துகொள்ள வேண்டும் என்பதுதான் விருப்பம். ஆனால், அண்ணனோ தங்கையின் விருப்பத்தையும் மீறி, வேறு வசதியான இடத்தில் சம்பந்தம் பேசி முடித்துவிட்டார். ஆனால், திருமணத்துக்கு முந்தைய நாள் அந்தக் குறிப்பிட்ட வரன் எதிர்பாராத விதமாக இறந்துவிட, தான் விரும்பிய டி.எம்.எஸ்ஸையே கரம் பிடித்தார் சுமித்ரா.
52. எம்.ஜி.ஆர்., சிவாஜி, மு.கருணாநிதி, ஜெயலலிதா என அனைவரிடமும் நெருங்கிப் பழகியிருந்தாலும், இன்று வரையில் தனக்காக எந்த ஒரு விஷயத்துக்கும், யாரிடமும் சிபாரிசுக்காக அணுகாதவர் என்ற பெருமைக்குரியவர் டி.எம்.எஸ். அதேபோல், தன் பிள்ளைகளுக்கு சான்ஸ் கேட்டும் எந்த இசையமைப்பாளரிடமும், தயாரிப்பாளரிடமும், இயக்குநரிடமும், யாரிடமும் போய் நின்றதில்லை டி.எம்.எஸ்.
53. டி.எம்.எஸ். வாய்ப்பு தேடி அலைந்துகொண்டு இருந்த ஆரம்ப நாளில், கோவை, சென்ட்ரல் ஸ்டூடியோ முன்னால் பெட்டிக்கடை வைத்திருந்தவர் சாண்டோ சின்னப்பா தேவர். அப்போது உண்டான நட்புதான், பின்னாளில் அவர் தன் படங்கள் அனைத்திலும் டி.எம்.எஸ்ஸைப் பாட வைக்கக் காரணமாக இருந்தது. 'தாயில்லாமல் நானில்லை' படத்தில் கமல்ஹாசனுக்கும், 'தாய் மீது சத்தியம்' படத்தில் ரஜினிகாந்துக்கும் டி.எம்.எஸ்ஸைப் பாட வைத்தார் தேவர்.
54. இசைஞானி இளையராஜாவுக்கு டி.எம்.எஸ். குரலில் ஒரு ஈர்ப்பு உண்டு. 'திரையுலகில் உள்ள ஒரே ஒரு ஆம்பிளைக் குரல்' என்று புகழ்வார். அவர் இசையமைத்த முதல் படமான 'அன்னக்கிளி'யில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு ஆண் குரல் டி.எம்.எஸ்ஸின் குரலே!
55. 'அன்னக்கிளி'க்கு முன்பே 'தீபம்' என்ற படத்துக்காக (பின்னாளில் சிவாஜி நடித்து வெளியான 'தீபம்' இல்லை இது.) கங்கை அமரன் எழுதிய 'சித்தங்கள் தெளிவடைய' என்கிற பாடலை, இளையராஜாவின் இசையமைப்பில் பாடியுள்ளார் டி.எம்.எஸ். அந்தப் படம் வெளியாகவே இல்லை.
56. 'பாகப் பிரிவினை' படத்தின் நூறாவது நாள் விழா, சென்னை, எழும்பூரில் உள்ள ஹோட்டல் 'அசோகா'வில் நடந்தது. அதில் இயக்குநர், நடிகர் எனப் பலருக்கும் விருது வழங்கப்பட்டது. பாடகர்களுக்கு மட்டும் விருது இல்லை என்பது பாரபட்சமானது என்று கருதிய டி.எம்.எஸ்., விழாவில் 'கடவுள் வாழ்த்து' பாட அழைத்தபோது மறுத்துவிட்டார். அவரது கோபத்தில் உள்ள நியாயத்தை உணர்ந்து, அதன் பின்னர்தான் பட விழாக்களில் பாடகர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
57. சென்னைக்கு வந்ததும் முதலில் ஆழ்வார்பேட்டை பிள்ளையார் தெருவில் தனியாக வீடு எடுத்துத் தங்கினார். சொந்த சமையல். பின்பு, திருமணம் ஆனதும் மயிலாப்பூர் புதுத் தெருவில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தார். படங்களில் பாடி, கொஞ்சம் வசதி ஏற்பட்ட பின்பு, இப்போது உள்ள மந்தைவெளி வீட்டை விலைக்கு வாங்கிக் குடியேறினார்.
58. “என் வயிற்றைக் குளிர வைத்தது ஏவி.எம். ஸ்டுடியோ; என் மனத்தைக் குளிர வைத்தது மருதகாசி” என்று, ஆரம்பக் காலத்தில் தனக்கு ஆதரவுக் கரம் நீட்டிய இருவரையும் இப்போதும் நன்றியுடன் குறிப்பிடுவார் டி.எம்.எஸ்.
59. டி.எம்.எஸ்ஸின் வாரிசுகள் ஏழு பேரில் இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் இறந்துவிட, பால்ராஜ், செல்வகுமார் ஆகிய இரண்டு மகன்களும், மல்லிகா என்ற ஒரு மகளும் மட்டுமே இப்போது இருக்கிறார்கள்.
60. ‘அண்ணன் என்னடா, தம்பி என்னடா’ என்ற படத்தில், ஆபாவாணன் இசையில் பாடியுள்ளார் பால்ராஜ். ‘சில நேரங்களில்...’ என்னும் படத்தில் ஸ்ரீகாந்த் தேவா இசையில் அசோகன் மகன் வின்சென்ட் அசோகனுக்கும் ஒரு பாடல் பாடியுள்ளார். அப்பா டி.எம்.எஸ். நடிகர் அசோகனுக்குப் பாட, மகன் அசோகனின் மகனுக்குப் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
61. செம்மொழி மாநாட்டுக்கான பாடல் வெளியீட்டு விழாவில், முன் வரிசையில் அமர்ந்திருந்தார் டி.எம்.எஸ். மேடை ஏறுவதற்காக வந்த கலைஞர், டி.எம்.எஸ்ஸைப் பார்த்துவிட்டு, அவரைக் கையைப் பிடித்து, தானே மேடைக்கு அழைத்துச் சென்று, அவருக்கு ஒரு நாற்காலி போடச் சொல்லி அமர வைத்துக் கௌரவப்படுத்தினார். ‘மந்திரி குமாரி’ காலத்திலிருந்து தொடர்ந்து வரும் நட்பல்லவா!
62. மதுரைப் பல்கலைக் கழகம் டி.எம்.எஸ்ஸுக்கு 'பேரவைச் செம்மல்' விருது வழங்கிக் கௌரவித்துள்ளது. 'கலைமாமணி' பட்டம் பெற்றுள்ளார். பெல்ஜியம் நாட்டுப் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ 'டாக்டர்' பட்டம் அளித்துள்ளது. 2000-வது ஆண்டு, ஜனாதிபதி அப்துல்கலாம் இவருக்கு 'பத்மஸ்ரீ' விருது அளித்துக் கௌரவித்தார். தனக்கு அதிகம் பாடிய டி.எம்.எஸ்ஸை அரசவைக் கவிஞர் ஆக்காமல், சீர்காழி கோவிந்தராஜனை நியமித்தார் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆட்சியில் அவர் டி.எம்.எஸ்ஸை அரசவைக் கவிஞராக ஆக்கினார். இயல், இசை, நாடக மன்றத் தலைவராகவும் இருந்திருக்கிறார் டி.எம்.எஸ்.
63. டி.எம்.எஸ். பாடத் தொடங்கி 25 ஆண்டுகள் ஆகிவிட்டதை முன்னிட்டு, 1972-ல் அவருக்கு ஒரு பாராட்டு விழா எடுத்தார் ஏவி.எம். அதில், 'எழிலிசை மன்னர்' என்ற பட்டத்தை டி.எம்.எஸ்ஸுக்கு வழங்கிச் சிறப்பித்தார் கலைஞர் மு.கருணாநிதி.
64. "ராஜ்கபூருக்கு முகேஷ் அமைந்தது போல், டி.எம்.எஸ் எனக்குப் பின்னணி பாட வந்தது, எனக்குக் கிடைத்த வரப் பிரசாதம்!" என்று தன் நெருங்கிய சிநேகிதியான இந்திப் பாடகி லதாமங்கேஷ்கரிடம் மனம் விட்டுப் பாராட்டியுள்ளார் நடிகர் திலகம் சிவாஜிகணேசன்.
65. ஆரம்ப காலத்தில் அசைவ உணவுகள் சாப்பிட்டிருக்கிறார் டி.எம்.எஸ். ஆனால், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக முழுச் சைவம். முன்பெல்லாம் எப்போதும் வெற்றிலை, பாக்கு போட்டுக்கொண்டு இருந்தார். இப்போது இல்லை. மற்றபடி, புகைத்தல் போன்ற கெட்டப் பழக்கம் எப்போதும் இல்லை.
66. டி.எம்.எஸ்ஸுக்கு எம்.கே.டி. பாகவதரின் பாடல்கள் என்றால் உயிர். அவர் அடிக்கடி விரும்பிக் கேட்பது, பாகவதரின் 'ஸத்வ குண போதன்...' என்ற பாடல். "அதை முழுமையாக உள்வாங்கிக்கொண்டுதான், அதே பாணியில் 'எங்கே நிம்மதி...' பாடலைப் பாடினேன்" என்று சொல்வார்.
##~~## |