Published:Updated:

`இந்த இரண்டு பேரால்தான் நாடு குட்டிச்சுவராகிவிட்டது!'- முசிறியில் கொந்தளித்த ஸ்டாலின்

`இந்த இரண்டு பேரால்தான் நாடு குட்டிச்சுவராகிவிட்டது!'- முசிறியில் கொந்தளித்த ஸ்டாலின்
`இந்த இரண்டு பேரால்தான் நாடு குட்டிச்சுவராகிவிட்டது!'- முசிறியில் கொந்தளித்த ஸ்டாலின்

``நரேந்திர மோடி, எடப்பாடி பழனிசாமி இருவரும் தவறான மனிதர்கள்தான். இவர்களின் ஆட்சியால் நாடு குட்டிச்சுவராகிவிட்டது. இனியும் இந்த மனிதர்களை அரியணையில் அமர வைத்துவிடாதீர்கள்'' என்று மத்திய, மாநில அரசைக் கடுமையாக விமர்சனம் செய்தார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்.

பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் முசிறி, தாத்தையங்கார் பேட்டை சாலையில் நடைபெற்றது. `` உதயசூரியன் சின்னத்தில் நிற்கும் பாவேந்தருக்கு நீங்கள் ஆதரவு தந்து வாக்களிக்க வேண்டும் என்று இருகரம் கூப்பிக் கேட்கிறேன்'' என வாக்கு கேட்ட பிறகு தலைவர்கள் பேசத்தொடங்கினார்கள்.

ஐ.ஜே.கே வேட்பாளர் பாரிவேந்தர் பேசியதாவது, ``நான் ஒன்றும் பெரம்பலூர் தொகுதிக்கு புதிதானவன் அல்ல. எனது மூதாதையர்கள் வாழ்ந்த ஊர்.  எனது குலதெய்வ கோயிலும் இங்குதான் உள்ளது. இத்தொகுதியில் 2014-ல் பா.ஜ.க கூட்டணியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தேன். அதன் பிறகுதான் உணர்ந்தேன். போகக் கூடாத இடத்துக்குப் போய்விட்டேன் என்று நீங்கள் யோசிக்கலாம். இப்ப சொல்வதற்கு என்ன காரணம் என்று இரண்டு வருடங்களாக பொறுத்திருந்தேன். நாட்டுக்கு எதாவது செய்வார்கள் என்று. எதுவும் செய்யாததால் அந்தக் கோபத்தில் தான் அவர்களை விட்டு வெளியேறினேன்.

பா.ஜ.க தொடர்ந்து மக்களை வஞ்சித்துக்கொண்டிருக்கிறது. 2016-ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை. இதனால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்கள். 2017 ஜி.எஸ்.டி, 2018ல் கஜா புயல். இப்புயலால் நான்கு மாவட்ட மக்கள் ஒரு வேலை சாப்பாட்டுக்காகக் கையேந்தும் சூழல் வந்தது. ஆனால், மத்திய அரசு கண்டுகொள்ளாமல் மவுனமாக இருந்தது. நாங்களும் தி.மு.க-வும் நிறைய உதவிகள் செய்தோம். அதை நீங்கள் கண்கூடாகப் பார்த்திருக்க முடியும். மக்களைப் பற்றி எந்நேரமும் சிந்திக்கும் ஒரே கட்சி தி.மு.க. அதற்கு வாக்களியுங்கள். உங்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்'' என்று பேசிவிட்டுச் சென்றார்.

அவரைத் தொடர்ந்து மு.க ஸ்டாலின் பேசத்தொடங்கினார். ``மோடி இந்தியாவுக்குப் பிரதமரா இல்லை, வெளிநாடுகளுக்குப் பிரதமரா என்று அடிக்கடி என்னுள் கேள்வி எழுகிறது. இதுவரையிலும் 84 முறை வெளிநாட்டுக்குச் சென்றுள்ளார். இதற்கான செலவு எவ்வளவு தெரியுமா 1400 கோடி ரூபாய். இது மக்கள் பணம். இதை நாம் தட்டிக்கேட்கவேண்டாமா.  பா.ஜ.க ஆட்சியில் நாடு மோசமான சூழ்நிலையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. கடந்த 5 ஆண்டுகள் தமிழ்நாட்டில் எந்தத் திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. என்ன வளர்ச்சியைக் கண்டுள்ளது என்று அவர்களால் சொல்லமுடியுமா. ஆனால், அவர்கள் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பிறகு எத்தனை தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. சிறு, குறு தொழிலாளர்கள் கடுமையாக நசுக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற புள்ளிவிவரம் என்னிடம் இருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் தவறானவர்களைத் தேர்ந்தெடுத்ததால் தான் தவறான மனிதர்கள் அதிகாரத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். நரேந்திர மோடியும், எடப்பாடி பழனிசாமியும் தவறான மனிதர்கள்தான். குஜராத்தில் நரேந்திர மோடி முதல்வராக இருந்தபோது, நடைபெற்ற படுகொலைகள், என்கவுன்டர் சம்பவங்கள் இன்றைக்கும் கரும்புள்ளியாக உள்ளன. மக்களைப் பரிதவிக்கவிட்ட மத்திய அரசை அப்புறப்படுத்த நேரம் வந்துவிட்டது'' என்று மாநில அரசு பக்கம் தனது பேச்சைத் திருப்பினார்.

``அ.தி.மு.க ஆட்சியில் பொள்ளாச்சி பொல்லாத ஆட்சியாக மாறி அங்குள்ள பெண்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளது. இந்த ஆட்சியில் எங்கு பார்த்தாலும் ஊழல், லஞ்சம், கொலை, பாலியல் பிரச்னை என  மக்களுக்குத் தொல்லை தரக்கூடிய பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது. இந்த ஆட்சி மட்டுமல்ல மோடி ஆட்சியும் வீட்டுக்கு அனுப்பப்படும். ஜெயலலிதா மரணம் குறித்து நடைபெறும் விசாரணை நியாயமாக நடைபெறாது என எல்லோருக்கும் தெரியும். தி.மு.க ஆட்சி வந்த  அடுத்த விநாடியே ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டு இதில் தொடர்புடையவர்களைச் சிறையில் அடைப்பது உறுதி. எங்கள் தேர்தல் வாக்குறுதியில் நீட் தேர்வை ரத்து செய்வோம் எனக் கூறியுள்ளோம். ஆனால், அவர்கள் வேறு வழியில்லாமல் நீட் ரத்து செய்ய வலியுறுத்துவோம் என்று சொல்கிறார்கள். அதிகாரத்தில் இருந்தபோது வாயைத் திறக்காதவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்து கிழிக்கவா போகிறார்கள். அரசியலுக்காக வெற்று வார்த்தைகளை விடுகிறார்கள். இதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்'' என கடுமையாக தீட்டித் தீர்த்தார் ஸ்டாலின்.

அடுத்த கட்டுரைக்கு