Published:Updated:

`தில் பெண்மணி!' காவல் துறை அதிகாரி மகள் ஜெஸிண்டா, நியூசிலாந்து பிரதமரான கதை! #JacindaArdern

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
`தில் பெண்மணி!' காவல் துறை அதிகாரி மகள் ஜெஸிண்டா, நியூசிலாந்து பிரதமரான கதை! #JacindaArdern
`தில் பெண்மணி!' காவல் துறை அதிகாரி மகள் ஜெஸிண்டா, நியூசிலாந்து பிரதமரான கதை! #JacindaArdern

`தில் பெண்மணி!' காவல் துறை அதிகாரி மகள் ஜெஸிண்டா, நியூசிலாந்து பிரதமரான கதை! #JacindaArdern

ஜெஸிண்டா அர்டர்ன், ( Jacinda Ardern) கடந்த ஒரு வாரமாக சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் அதிகம் உச்சரிக்கப்பட்டப் பெயர். நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டிற்குப் பின், அதிகம் கவனிக்கப்பட்டவர் நியூசிலாந்தின் இளம்வயது பெண் பிரதமரான ஜெஸிண்டா அர்டர்ன்,. அனைவரின் கவனத்தையும் ஜெஸிண்டா  ஈர்க்கக் காரணம் அவரின் துரித நடவடிக்கைகளே!

26 அக்டோபர் 2017-ல் நியூசிலாந்தின் பிரதமராகப் பொறுப்பேற்ற ஜெஸிண்டா , 26 ஜுலை 19-ல் நியூசிலாந்தின் ஹாமில்டன் நகரில் பிறந்து, மொரின்ஸ்வில் மற்றும் முறுபராவில் வளர்ந்தார். தந்தை ரோஸ் அர்டர்ன் காவல் துறை அதிகாரி, தாய் லோரல் அர்டர்ன் பள்ளியில் கேட்டரிங் உதவியாளர். மொரின்ஸ்வில் கல்லூரியில் பயின்ற ஜெஸிண்டா  மாணவப் பிரதிநிதியாக பொறுப்பு வகித்தார். வைகடோ பல்கலைக்கழகத்தில் ( University of Waikato) 2001-ம் ஆண்டு தகவல்தொடர்பு படிப்புகளில் அரசியல் மற்றும் பொது தொடர்பில் இளங்கலை பட்டம் பெற்றார். ஜெஸிண்டா  தன் அத்தை, மாரி அர்டர்ன் மூலமாக அரசியலுக்கு அறிமுகமானார். 

நியூசிலாந்து லேபர் கட்சியின் நீண்ட கால உறுப்பினரான மாரி அர்டர்ன் 1999 ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில் பதின்ம வயது ஜெஸிண்டாவை உதவிக்காக தன்னுடன் அழைத்துச் செல்வார். பின்பு, ஜெஸிண்டா  அக்கட்சியின் உறுப்பினரானார். பின் லண்டன் சென்ற அர்டர்ன் மூத்த கொள்கை ஆலோசகராக இங்கிலாந்து பிரதமர் டொனி பிளேயரின் குழுவில் இருந்தார். 2008 -ல் சோஷலிச இளைஞர்களின் சர்வதேச சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். லண்டனிலிருந்து திரும்பிய ஜெஸிண்டா , 2011 ஆம் ஆண்டு லேபர் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டார். தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காவிடினும், லேபர் கட்சி பட்டியலில் 20 ம் இடத்தில் இருந்ததால் பாராளுமன்றத்தின் இளம் வயது எம்.பியாகும் வாய்ப்பினைப் பெற்றார். 2017-ல் நடந்த தேர்தலில் மவுண்ட் ஆல்பெர்டின் வேட்பாளராகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2017 ஆகஸ்ட் மாதத்தில், லேபர் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்ற ஜெஸிண்டா, அதே ஆண்டில் நடந்த பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று நியூசிலாந்தின் 40 வது பிரதமராக, தனது 37 ம் வயதில் பொறுப்பேற்றார். 

2018 செப்டம்பர் 24 -ல் நடைபெற்ற ஐ.நா சபை பொதுக்கூட்டத்தில், மகளோடு கலந்துகொண்டார். மகள் அப்போது மூன்று மாதமே ஆகியிருந்தது. ஐநாவில், கைக்குழந்தையுடன் கலந்துகொண்டு பொதுக்கூட்டத்திற்கு வந்த முதல் பெண் என்ற வரலாற்றைப் படைத்தார். பதவியில் இருந்தபோதே குழந்தை பெற்றுக்கொண்ட முதல் பெண் என்ற கௌரவத்தை பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ பெற்றார். தற்போது ஜெஸிண்டாவும் பெற்றுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று கிறிஸ்ட் சர்ச் மசூதிகளில் நடந்த துப்பாக்கி சூட்டிற்குப் பின், இவரின் நடவடிக்கைகள் உலக நாடுகள் அனைத்தையும் இவர் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. துப்பாக்கிச் சூடு விவகாரம் குறித்து ஆலோசிக்கும் எம்.பி கள் முன்னிலையிலான சிறப்புப் பாராளுமன்ற கூட்டத்தில்  ஜெஸிண்டா அரபு மொழியில் முகமன் கூறிவிட்டு உரையாற்றத் தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது,

"பயங்கரவாத நடவடிக்கைகளால் பல உயிர்களைப் பலிவாங்கிய அவனின் பெயரை உச்சரிப்பதையும், கேட்பதையும் கூட நான் விரும்பவில்லை. நீங்களும் அவனின் பெயரை உச்சரிப்பதை விடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது குறித்துப் பேசுங்கள். இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக எம்.பிகள் பணியாற்றுவார்கள். மேலும், குற்றவாளியின் மீது சட்டம் முழு வீச்சில் பாயும்" என்றார். நியூசிலாந்து சட்டப்படி ஒருவர் 16 வயதில் சாதாரணத் துப்பாக்கியும், 18 வயதில் தானியங்கி துப்பாக்கியும் பயன்படுத்த முடியும். "நடைமுறையில் உள்ள துப்பாக்கி சட்டத்தில் 25 ம் தேதிக்குள் திருத்தம் கொண்டு வரப்படும்"' என்றார். 

துப்பாக்கிச் சூட்டை நடத்திய தீவிரவாதி பிரேண்டன் ட்ரேண்ட் தாக்குதலை நேரலையாக சமூகவலைதளங்களில் பதிவிட்டான். 17 நிமிடங்களில் பல லட்சம் பேரால் பார்க்கப்பட்டும் பகிரப்படும் வந்த காணொலியை நீக்குமாறு சம்பந்தப்பட்ட ஊடகங்களுக்குக் கட்டளையிட்டார். மேலும், இது போன்ற காணொலியைப் பதிவேற்றம் செய்ய அனுமதித்தை வன்மையாகக் கண்டித்தார். தேசிய வானொலி சேவையில் உயிரிழந்தோருக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்திய பின், முஸ்லிம்கள் தொழுகைக்கான அழைப்பு ஊடகங்களில் ஒலிபரப்பப்படும் என்றும் அறிவித்தார். பின், கிறிஸ்ட் சர்ச் நகருக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர் முஸ்லிம் பெண்களின் வழக்கப்படி தலையில் துணி அணிந்து சென்றார். பின் துப்பாக்கிச் சூட்டில் இறந்த மாணவர்களின் பாடசாலைக்குச் சென்று மாணவர்கள் இடையே இரங்கல் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, "நீங்கள் என்னை வரவேற்ற விதத்திற்கு மிக்க நன்றி, நீங்கள் உங்கள் சக மாணவர்களின் இறப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்தச் சம்பவம் என்னை மிகவும் வேதனைக்கு உள்ளாக்குகிறது. உங்களுக்கு என்ன உதவித் தேவைப்பட்டாலும் என்னிடம் கேளுங்கள்" என்றார். அப்போது அங்கிருந்த மாணவி, "நீங்கள் நலமாக உள்ளீர்களா?" என்று கேட்டதற்கு, "நான் மிகவும் கவலையாக உள்ளேன்" என்று பதிலளித்தார்.

தனது பேரன்பாலும், நடவடிக்கைகளாலும் பாராட்டுகளைக் குவித்து வரும் பிரதமர் ஜெஸிண்டா அர்டர்னின் சேவைத் தொடரட்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு