Published:Updated:

`ஓ.பி.எஸ் மகனை வீழ்த்த தங்கம்தான் நல்ல சாய்ஸ்!' - வேட்பாளர் தேர்வில் வித்தியாசம் காட்டிய டி.டி.வி

தேனி தொகுதியில் தங்கம் போட்டியிடுவார் என்பது கடைசி நிமிடம் வரையில் யாருக்கும் தெரியாது. சொல்லப் போனால், அவர் ஆண்டிபட்டி தொகுதியைத்தான் அதிகம் எதிர்பார்த்தார்.

`ஓ.பி.எஸ் மகனை வீழ்த்த தங்கம்தான் நல்ல சாய்ஸ்!' - வேட்பாளர் தேர்வில் வித்தியாசம் காட்டிய டி.டி.வி
`ஓ.பி.எஸ் மகனை வீழ்த்த தங்கம்தான் நல்ல சாய்ஸ்!' - வேட்பாளர் தேர்வில் வித்தியாசம் காட்டிய டி.டி.வி

ம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் இரண்டாம்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிட்டார் டி.டி.வி.தினகரன். `தேனி தொகுதியில் பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்துக்குப் பெரும் இடையூறாக இருக்கப் போகிறார் தங்க.தமிழ்ச்செல்வன். இதன் பின்னணியில் சில விஷயங்களும் அரங்கேறின' என்கின்றனர் அ.ம.மு.க வட்டாரத்தில். 

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முழுவீச்சில் தயாராகி வருகிறது அ.ம.மு.க. 24 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 9 சட்டமன்றத் தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை கடந்த 17-ம் தேதி வெளியிட்டிருந்தார் தினகரன். இன்று வெளியான 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலில் எம்.எல்.ஏ பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட தங்க.தமிழ்ச்செல்வன், பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பன், அரக்கோணம் பார்த்திபன் ஆகியோருக்கு சீட் வழங்கியிருக்கிறார் தினகரன். அத்துடன் 8 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிவித்திருக்கிறார். `ஆண்டிபட்டி தொகுதியில் தங்க.தமிழ்ச்செல்வன் போட்டியிடுவார்' என எதிர்பார்த்திருந்த நிலையில், அவருக்கு தேனி மக்களவைத் தொகுதியை ஒதுக்கியிருப்பதை நிர்வாகிகளே எதிர்பார்க்கவில்லை. தேனி தொடர்பாக பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோதும், `நானே கூட போட்டியிடலாம்' என சஸ்பென்ஸ் வைத்துப் பேசியிருந்தார் தினகரன். 

அ.ம.மு.க நிர்வாகிகளிடம் பேசினோம். ``தேனி தொகுதியில் தங்கம் போட்டியிடுவார் என்பது கடைசி நிமிடம் வரையில் யாருக்கும் தெரியாது. சொல்லப் போனால், அவர் ஆண்டிபட்டி தொகுதியைத்தான் அதிகம் எதிர்பார்த்தார். அங்கு அண்ணன் தம்பிகளே களத்தில் போட்டியிடுவதால், மிக எளிதாக ஜெயித்துவிடலாம் எனக் கணக்கு போட்டார். சசிகலா கணவர் நடராஜனுக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நடந்த நாளில், தேனி தொகுதியைப் பற்றிய பேச்சு வந்தது.

அப்போது, `விவேக் ஜெயராமனுக்குத் தேனியைக் கொடுத்துவிடுங்கள். அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஓ.பி.எஸ் மகன் ரவி ஜெயித்துவிட்டால் நாம் தலைநிமிர்ந்து நடக்க முடியாது. தவிர என்னால் செலவும் செய்ய முடியாது' என நிலவரத்தைக் கூறியிருக்கிறார் தங்கம். அப்போது பேசிய தினகரன், `விவேக்குக்குக் கொடுத்தால் குடும்ப அரசியல் எனப் பேச மாட்டார்களா?' எனக் கேட்டதாகவும் தகவல் வெளியானது. மேலும், `தேனி தொகுதியில் விவேக் போட்டியிட்டால், எனக்கும் சீட் கொடுங்கள்' என டாக்டர்.வெங்கடேஷ் வைத்த கோரிக்கையையும் தினகரன் ஏற்கவில்லை. இந்த விவகாரத்தில் யாருக்கு சீட் என்பதை இறுதி நிமிடம் வரையில் சஸ்பென்ஸாக வைத்திருந்தார் டி.டி.வி" என விவரித்தவர்கள், 

``பன்னீர்செல்வம் மகனுக்கு மிகச் சிறந்த போட்டியாளராக தங்க.தமிழ்ச்செல்வன் இருப்பார். தொகுதி முழுக்க 75 சதவிகிதம் அளவுக்கு கள்ளர் சமூக வாக்குகள் நிறைந்திருக்கின்றன. இந்தத் தொகுதியில் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. பன்னீர்செல்வத்தின் பரம எதிரியாகத் தங்கம் இருக்கிறார். ரவீந்திரநாத்தை வீழ்த்துவதில் மற்றவர்களைவிடத் தங்கம் உறுதியாக இருப்பார் என நம்புகிறார் தினகரன். நேற்று இரவு இதுதொடர்பாகப் பேசும்போது, `தேர்தல் செலவுகளை நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் களத்தில் நில்லுங்கள்' எனத் தங்கத்தை உற்சாகப்படுத்தினார் தினகரன். இதைத் தங்கம் எதிர்பார்க்கவில்லை. இந்த விவகாரத்தில்,` நீ யாருக்காகப் பரிந்துரை செய்கிறாயோ, அவருக்குக் கொடுக்காமல் உனக்குக் கொடுத்தால் என்ன?' என்பதுதான் தினகரனின் பார்வையாக இருந்தது. வேட்பாளர் தேர்வில் மிக வித்தியாசமான அணுகுமுறையாகத்தான் இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது. தொகுதி செலவுகளுக்கு 12 கோடி ரூபாய் வரையில் கொடுக்கத் திட்டமிட்டுள்ளனர். இதில், 10 கோடி ரூபாயை சசிகலா தரப்பிலிருந்து கொடுக்க உள்ளனர். இதனால், வேட்பாளர்கள் மத்தியிலும் உற்சாகம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது" என்கின்றனர் இயல்பாக.