Published:Updated:

பொதுத்தேர்தல் 2019: காஷ்மீர் பாரதிய ஜனதாவுக்கு எப்படி இருக்கும்?

பொதுத்தேர்தல் 2019: காஷ்மீர் பாரதிய ஜனதாவுக்கு எப்படி இருக்கும்?
பொதுத்தேர்தல் 2019: காஷ்மீர் பாரதிய ஜனதாவுக்கு எப்படி இருக்கும்?

"`காஷ்மீருக்காகவும் ராணுவத்துக்காகவும் பாகிஸ்தானை எதிர்த்தோம்' என்று பி.ஜே.பி-யினர் சொல்வது வெளிமாநிலங்களில் வேண்டுமானால் செல்லுபடியாகலாம். எங்கள் மாநிலத்தில் அவர்களால் அப்படிப் பேசி ஓட்டுக் கேட்க முடியாது!”

பொதுத்தேர்தல் பரபரப்பில் சுழன்றுகொண்டிருக்கிறது தேசம். ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரசார உத்திகளில் முக்கியமானதாகப் பார்க்கப்படுவது புல்வாமா தாக்குதலுக்கான பதிலடி! தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க-வுடனான கூட்டணி அறிவிப்புக்குப் பிறகு தமிழகம் வந்த பிரதமர் மோடி, பொதுக்கூட்ட மேடையில் பேசுகையில்கூட, ``புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க நாம் என்ன செய்தோம் என்பதை நாடறியும். விமானி அபிநந்தனை நாம் எப்படி மீட்டுக் கொண்டுவந்தோம் என்பது எல்லோருக்கும் தெரியும்” என்றார். ஆனால், காஷ்மீர் சம்பவத்தை மையமாக வைத்து வாக்குச்சேகரித்தாலும் அதே காஷ்மீரில் பாரதிய ஜனதா கட்சியின் நிலைமை வேறாகவே இருக்கிறது.

பொதுத்தேர்தல் நேரம் என்பதால் காஷ்மீருக்கான விதான் சபா தேர்தலைத் தற்காலிகமாக மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது. அனைத்துத் தொகுதிகளுக்கும் போதிய பாதுகாப்பு அளிப்பதில் உள்ள சிக்கல் அதற்குக் காரணமாகக் கூறப்பட்டது. இதனால் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சிகள் மத்திய பி.ஜே.பி. அரசின் மீது கடும் அதிருப்தியில் உள்ளன. ஜம்மு-காஷ்மீரின் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா, சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தாதது குறித்து தன்னுடைய கடும் கண்டனங்களைத் தொடர்ந்து பதிவு செய்து வந்தார். 

மற்றொரு பக்கம் அந்தக் கட்சி காங்கிரஸுடன் இணைந்து, நாடாளுமன்றப் பொதுத்தேர்தலைச் சந்திக்க இருப்பதாக அறிவித்துள்ளது. அதிலும் ஜம்மு மற்றும் உதம்பூர் மக்களவைத் தொகுதிகளில் தனித்து நின்றாலும் அதில் நட்பின் அடிப்படையிலான போட்டியாகத்தான் இருக்கும், `தங்களின் இரு கட்சிகளில் யார் ஜெயித்தாலும் தங்களுக்கு மகிழ்ச்சிதான்!’ என்கிற அடிப்படைப் புரிதலுடன் களமிறங்குகிறார்கள். தேசிய மாநாட்டுக் கட்சியின் நிறுவனர் ஃபரூக் அப்துல்லா போட்டியிடும் தொகுதியில் தாங்கள் யாரையும் வேட்பாளராக நிறுத்தப்போவதில்லை என்கிற சமரசத்தில் காங்கிரஸ் கட்சி இருக்கிறது. 

காஷ்மீரின் மற்றொரு கட்சியான மெஹபூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி, மாநில சட்டசபைத் தேர்தல் சமயத்தில் பி.ஜே.பி-யுடன் கூட்டணி வைத்திருந்தது. ஆனால், கத்துவா பாலியல் வன்கொடுமைச் சம்பவம் இரு கட்சிகளுக்கு இடையே ஏற்படுத்திய பூசல்களை அடுத்து பி.ஜே.பி. கூட்டணியிலிருந்து வெளியேறியது. பி.ஜே.பி-யிலிருந்த அப்போதைய கேபினேட் அமைச்சரான லால் சிங், பகிரங்கமாக கத்துவா பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு ஆதரவாகப் பேசினார் என்பதால் அவர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பி.ஜே.பி ஆதரவளிக்காத நிலையில் லால் சிங் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள், தனியாகப் பிரிந்து டோக்ரா ஸ்வபிமான் சங்கதன் மோர்ச்சா என்கிற கட்சியைத் தொடங்கி நடத்தி வருகிறார்கள். 

தேர்தல் கள நிலவரம் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்ட ஜம்மு-காஷ்மீர் ஏர்லி டைம்ஸ் பத்திரிகையின் மூத்த பத்திரிகையாளர், ``பாலியல் சம்பவம் நடந்த அதே தொகுதியிலிருந்து இந்த முறை தன் கட்சியின் சார்பாக லால் சிங் நாடாளுமன்றத்துக்குப் போட்டியிட இருக்கிறார். அவர் பி.ஜே.பி-யின் வாக்குகளைப் பிரித்தாலும் அந்தக் கட்சியின் அங்கமாகவே மக்களால் பார்க்கப்படுகிறார். இதுவரை 114 பேர்வரை விசாரணை செய்யப்பட்டுள்ள கத்துவா பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைச் சம்பவத்தில் வருகின்ற ஜூன் மாதத்தில் தீர்ப்பு எதிர்பார்க்கப்படுகிறது. இவை இரண்டும் பி.ஜே.பி-க்குப் பெருத்த பின்னடைவாக இருக்கும்.

மற்றொரு பக்கம் இங்கே இருக்கும் காஷ்மீரியப் பார்ப்பன சங்கங்களும், பி.ஜே.பி. மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். அவர்கள் இருக்கும் பகுதியில்கூட எவ்வித மேம்பாட்டு நடவடிக்கைகளிலும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபடாததே அதற்குக் காரணம். மேலும் பா.ஜ.க.வின் இந்த ஐந்தாண்டு ஆட்சியில்தான், காஷ்மீரில் ராணுவத் தாக்குதல், துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் பொதுமக்கள் மரணம் போன்றவை அதிகம் நேர்ந்துள்ளன. தவிர, ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது போன்ற பல காரணங்களால் உள்ளூர்க் கட்சிகள் இரண்டுமே அவர்களுக்கு ஆதரவாக இல்லாத நிலையில் காஷ்மீரில் பி.ஜே.பி. மிகவும் வலுவிழந்திருக்கிறது. `காஷ்மீருக்காகவும் ராணுவத்துக்காகவும் பாகிஸ்தானை எதிர்த்தோம்' என்று பி.ஜே.பி-யினர் சொல்வது வெளிமாநிலங்களில் வேண்டுமானால் செல்லுபடியாகலாம். எங்கள் மாநிலத்தில் அவர்களால் அப்படிப் பேசி ஓட்டுக் கேட்க முடியாது” என்றார். 

அடுத்த கட்டுரைக்கு