Published:Updated:

அ.தி.மு.க-வை வீழ்த்தும் அ.ம.மு.க பட்டியல்! - களநிலவரத்தால் உற்சாகமான தி.மு.க.

அ.தி.மு.க-வை வீழ்த்தும் அ.ம.மு.க பட்டியல்! - களநிலவரத்தால் உற்சாகமான தி.மு.க.
அ.தி.மு.க-வை வீழ்த்தும் அ.ம.மு.க பட்டியல்! - களநிலவரத்தால் உற்சாகமான தி.மு.க.

நீலகிரி தொகுதியில் போட்டியிடும் ஆ.ராசாவுக்கு மலைப் பகுதிகளில் நல்ல செல்வாக்கு இருக்கிறது. ஆனால், அவினாசி உள்ளிட்ட பகுதிகளில் களநிலவரம் சரியாக இல்லை.

னல் பறக்கும் வெப்பத்தையும் தாண்டி அரசியல் கட்சித் தலைவர்களின் விமர்சனங்கள், தேர்தல் சூட்டை அதிகரித்தபடியே இருக்கின்றன. `ஒவ்வொரு நாளும் தொகுதி நிலவரத்தை விரிவாக ஆராய்ந்து வருகிறார் ஸ்டாலின். கடந்த வாரத்தைவிடவும் இந்த வாரம் கூடுதல் உற்சாகத்தில் இருக்கிறோம். சில தொகுதிகளில் உட்கட்சி பூசல்களும் வெடிக்கத் தொடங்கியுள்ளன' என்கின்றனர் தி.மு.க நிர்வாகிகள். 

நாடாளுமன்றத் தேர்தல் தேதி நெருங்கிக் கொண்டிருக்கிறது. தி.மு.க, அ.தி.மு.க, அ.ம.மு.க உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தரப்பு வேட்பாளர்களுக்காகத் தீவிர பிரசாரம் செய்து வருகின்றன. இதில், அ.ம.மு.க-வுக்கான தேர்தல் சின்னம் குறித்து இன்னமும் உறுதியான முடிவெடுக்காததால், அக்கட்சியின் வேட்பாளர்கள் மட்டுமே தெருத்தெருவாகச் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். தேர்தல் பிரசாரத்தில் ஸ்டாலினும் எடப்பாடி பழனிசாமியும் மாறி மாறி விமர்சனம் செய்து வருவது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

தருமபுரி மக்களவைத் தொகுதி தி.மு.க வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்துப் பேசிய ஸ்டாலின், ``எடப்பாடி பழனிசாமியின் ஊழலைப் பாதுகாக்கும் காவலாளி சவுகிதார் மோடி. ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது என நீதிமன்றம் அறிவித்துள்ளதிலிருந்தே, மருத்துவமனையில் ஜெயலலிதா போட்ட கையெழுத்து போலி எனத் தெரியவந்துள்ளது. இதன்மூலம் அப்போலோ மருத்துவமனையில், ஜெயலலிதாவின் உயிரற்ற உடலை வைத்துக்கொண்டு நாடகம் அரங்கேறி இருக்கிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பற்றிப் பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு என்ன தகுதி இருக்கிறது. பா.ஜ.க-வுடன் அ.தி.மு.க-வை அடகு வைத்துவிட்டு ஆட்சி செய்கிறார் எடப்பாடி பழனிசாமி' எனக் காட்டமாக விமர்சித்தார். 

இதற்குப் பதிலடியாக திருவண்ணாமலை அக்ரி கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, `தி.மு.க தலைமையில் அமைந்துள்ள கூட்டணி எந்தவிதக் கொள்கையும் இல்லாத கூட்டணி. இந்தக் கூட்டணியை மக்கள் புறக்கணிப்பார்கள். எனது ஆட்சியில் கட்டப்பஞ்சாயத்தும் இல்லை, ரவுடியிசமும் இல்லை' என்றார் பெருமிதத்தோடு. `எடப்பாடியா...ஸ்டாலினா?' என்ற மோதல் உச்சகட்டத்தை நெருங்கி வரும் வேளையில் தொகுதி நிலவரம் குறித்து நாள்தோறும் அறிக்கைகளைக் கேட்டுப் பெறுகிறார் ஸ்டாலின். அதில் சொல்லப்படும் விஷயங்களை வைத்து, கட்சி நிர்வாகிளுக்கு அறிவுறுத்தல்களைக் கொடுத்து வருகிறார்.

தேர்தல் நிலவரம் குறித்து நம்மிடம் தி.மு.க முன்னணி நிர்வாகிகள் சிலர், `` கடந்த வாரத்தில் இருந்த சூழல்களைவிடவும் இந்த வாரம் தி.மு.க-வுக்குச் சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அ.ம.மு.க வேட்பாளர் பட்டியல் வெளியானதிலிருந்து தி.மு.க முகாமில் அதிக சுறுசுறுப்பு தென்படுகிறது. அ.தி.மு.க வாக்குகளை சிதைக்கக் கூடிய அளவுக்கு அ.ம.மு.க சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். உதாரணமாக, தேனி தொகுதியில் ரவீந்திரநாத் குமாருக்கு எதிராகக் களத்தில் நிற்கும் தங்க.தமிழ்ச்செல்வன், தருமபுரியில் அன்புமணிக்கு எதிராகக் களமிறங்கும் பழனியப்பன் என அ.தி.மு.க-வை வீழ்த்தும் அளவுக்கு நிறுத்தியிருக்கிறார் `தினகரன். தருமபுரியில் தி.மு.க வேட்பாளர் செந்தில்குமாருக்குத் தொகுதியில் நல்ல பெயர் இருக்கிறது. எந்தவித நெகட்டிவ் விமர்சனங்களும் அவர் மேல் இல்லை. ஒசூரில் பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவிக்கு எதிராக பெங்களூரு புகழேந்தி நிறுத்தப்பட்டிருக்கிறார். அ.தி.மு.க வாக்குகளை அவர் பிரிப்பதன் மூலம் தி.மு.க வேட்பாளர் சத்யாவுக்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. 

திருநெல்வேலியில் தி.மு.க வேட்பாளராகப் போட்டியிடுகிறார் ஞான திரவியம். அவருக்கு எதிர்முனையில் அ.தி.மு.க சார்பில் மனோஜ் பாண்டியன் நிற்கிறார். அவருக்குச் செக் வைக்கும் வகையில் மைக்கேல் ராயப்பனை நிறுத்தியிருக்கிறது அ.ம.மு.க. இதனால் அ.தி.மு.க வாக்குகளைக் கணிசமான அளவுக்கு அ.ம.மு.க பிரிக்கும். இதன்மூலம், தி.மு.க-வுக்கான வெற்றி வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. தவிர, எடப்பாடி பழனிசாமியின் வேன் பிரசாரம் மிகப் பெரிய மைனஸாக மாறிவிட்டது. வேன் நிற்கும் ஒவ்வொரு பிரசாரப் பாயின்டிலும் சொற்பமான கூட்டமே கூடுகிறது. அதுவே, சில ஊர்களை ஒன்றிணைத்து பிரசார பொதுக்கூட்டமாக மாற்றியிருந்தால் இந்தளவுக்கு நெகட்டிவ் அலை தென்பட்டிருக்காது. மத்திய, மாநில அரசுகள் மீதான எதிர்ப்புகளும் அ.ம.மு.க வேட்பாளர் பட்டியலும் தி.மு.கவுக்குச் சாதகமாக மாறிவிட்டன. வாக்கு எண்ணிக்கை நாளில் இதை அறியலாம்" என்கின்றனர் உற்சாகத்துடன். 

அதேநேரம், தி.மு.க-வுக்குச் சிம்ம சொப்பனமாக இருக்கும் கொங்கு மண்டலத்தில் இருந்தும் சில அதிருப்தி குரல்கள் தென்படத் தொடங்கியுள்ளன. ``பொள்ளாச்சி தொகுதியின் தி.மு.க வேட்பாளராக சண்முகசுந்தரம் போட்டியிடுகிறார். இந்தத் தொகுதிக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கு பொறுப்பாளர்களை நியமித்துள்ளது தலைமை. உடுமலை, பொள்ளாச்சி, மொடக்குறிச்சி, வால்பாறை உள்ளிட்ட தொகுதிகளுக்கு வெள்ளகோவில் சாமிநாதன், கரூர் பரணி, சச்சிதானந்தம், மேட்டுப்பாளையம் அருண்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கும் தொகுதிகளுக்கும் சம்பந்தமே இல்லை. இவர்களால் உள்ளூர் கட்சி நிர்வாகிகள்தான் அதிகம் கலவரப்படுகின்றனர். தொண்டாமுத்தூர் தொகுதிக்கு சிங்காநல்லூர் கார்த்தியைக் கொண்டு வந்துள்ளனர். கோவை வடக்கு மாவட்டத்துக்குள் தொண்டாமுத்தூர் தொகுதி வருகிறது. இங்கு வடக்கு மா.செ ராமச்சந்திரன் ஆதரவு நிர்வாகிகளைப் புறக்கணிக்கும் வேலையைச் செய்து வருகிறார் கார்த்தி. 

அவர் நேரடியாகவே ராமச்சந்திரன் தரப்பினரை மிரட்டுகிறார். ` நாளைக்கு என்னிடம்தான் எல்லோரும் வர வேண்டும். நான் சொல்கின்ற நபர்தான் மாநகர கவுன்சிலராக இருப்பார். எனக்கு யாரும் சரிவராவிட்டால், ஓரம்கட்டிவிடுவேன்' என வெளிப்படையாகவே பேசி வருகிறார். இதனால் தொண்டாமுத்தூர் ஒன்றியத்தில் அதிருப்தி குரல்கள் எழத் தொடங்கியுள்ளன. இந்தப் பகுதியை மேற்பார்வையிடும் பொறுப்பை இளைஞர் அணியின் பொறுப்பில் இருந்த முருகவேலிடம் கொடுத்திருக்கிறார். இவர்கள் ஒட்டுமொத்தமாக அதிகாரம் செலுத்துவதை உள்ளூர் நிர்வாகிகள் ரசிக்கவில்லை.

அதேபோல், நீலகிரி தொகுதியில் போட்டியிடும் ஆ.ராசாவுக்கு மலைப் பகுதிகளில் நல்ல செல்வாக்கு இருக்கிறது. ஆனால், அவினாசி உள்ளிட்ட பகுதிகளில் களநிலவரம் சரியாக இல்லை. திருப்பூர் வடக்கு மா.செ செல்வராஜும் அவர் தரப்பு நிர்வாகிகளும் சரியாக ஒத்துழைப்பு தருவதில்லை. வாக்குப் பதிவின்போது அவினாசி தொகுதியில் குளறுபடி ஏற்படுமோ என்ற அச்சமும் ஆ.ராசாவுக்கு இருக்கிறது. கொங்கு மண்டலம் அ.தி.மு.க கோட்டையாக இருப்பதால், அதை முறியடிக்கப் பல்வேறு வியூகங்களை வகுத்துச் செயல்படுகிறார் ஸ்டாலின். உட்கட்சி பூசல்களால் தேர்தல் வெற்றி பாதிக்குமா என்ற அச்சமும் வேட்பாளர்கள் மத்தியில் நிலவுகிறது" என்கின்றனர் கொங்கு மண்டல தி.மு.க-வினர். 
 

அடுத்த கட்டுரைக்கு