Published:Updated:

''நான் சவுக்கிதார் இல்லை மோடி அவர்களே!” - காஞ்சா அய்லய்யா

''நான் சவுக்கிதார் இல்லை மோடி அவர்களே!” -  காஞ்சா அய்லய்யா
''நான் சவுக்கிதார் இல்லை மோடி அவர்களே!” - காஞ்சா அய்லய்யா

நரேந்திர மோடி தன்னை தேசத்தின் காவலன் என்று அறிவித்துக்கொண்டதை அடுத்து, அவருக்கு செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான காஞ்சா அய்லய்யாவின் திறந்த மடல்...

பிரதமர் நரேந்திர மோடிக்கு, எழுத்தாளர் காஞ்சா அய்லய்யா எழுதியுள்ள வெளிப்படையான மடல்...

"நான் டெல்லிக்கு சென்றிருந்த சமயம், விமான நிலையத்திலிருந்து நகரத்தின் மையப் பகுதிக்கு என்னை அழைத்துச்செல்லவிருந்த கார் டெல்லியின் முனிர்கா வழியாகச் சென்றது. டெல்லியின் பணக்கார குடியிருப்புகளுக்கு, அங்கிருந்துதான் வாட்ச்மேன்கள் (Chowkidhar) ஏற்றுமதி செய்யப்படுகின்றனர். முனிர்காவை கடந்து, கிரேட்டர் கைலாஷ் பகுதிக்குள் நுழைந்தோம். அங்கே, ஒவ்வொரு வீட்டின் வாசலிலும்  வாட்ச்மேன்கள் நின்றுகொண்டிருந்தார்கள். சுடும் வெயிலானாலும், கடும் குளிரானாலும் அவர்கள் அந்த வீடுகளின் வாசலில் வைக்கப்பட்டிருக்கும் சிறிய பொட்டிகளுக்குள் நின்றுகொண்டிருக்க வேண்டும்.

நான் வசிக்கும் ஹைதராபாத் பகுதியிலும் இதே சூழல்தான். வளம் கொழிக்கும் பகுதியான ஜூப்ளி ஹில்ஸில், ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் வாட்ச்மேன்கள் நின்றுகொண்டிருப்பார்கள். வறுமையின் காரணமாக, குறைந்த சம்பளத்துக்கு அவர்கள் பேரம் பேசப்படுவதால் அவர்களில் பெரும்பாலானோர் மெலிந்தே காணப்படுவார்கள். இரண்டு வேளை சாப்பாட்டுக்காகத்தான் இந்தப் பிழைப்பு என்றாலும், அந்த இரண்டு வேளை சாப்பாடு அவர்களுக்குக் கிடைப்பது மிகவும் கடினம். இந்திய மெட்ரோ நகரங்களின் நிலை இன்று இதுதான். பாரதிய ஜனதா கட்சி அறிமுகப்படுத்திய ஸ்மார்ட் சிட்டி திட்டம், இந்த  வாட்ச்மேன்களுக்கும் கொழிப்பவர்களுக்கும் இடையிலான பொருளாதார இடைவெளியை இன்னும் அதிகரிப்பதாகவே அமைந்துள்ளது. இந்தச் சூழலில், நமது மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி தன்னை ’சவுக்கிதார் பிரதமர்’ என்று கூறியிருப்பதும், அதற்கு ஒத்திசைக்கும் விதமாக பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா ’நானும் ஒரு சவுக்கிதார்’ எனப் பரப்புரை மேற்கொள்வதும் இந்தியாவில் இந்த வாட்ச்மேன்களின் சாதிய மற்றும் வகுப்புவாரிப் படிநிலை என்ன? என்பதை கவனிக்கச் செய்துள்ளது.

உயர் ரக ஆடைகள், தங்க நகைகள், வைர வைடூரியங்களை விற்கும் பெருநகர வணிக வளாகங்கள் எல்லாவற்றின் முன்பும் இதுபோன்ற வாட்ச்மேன்கள் நின்றுகொண்டிருப்பார்கள். பெருமுதலாளித்துவ நிறுவனங்களும் அந்தப் பெருமுதலாளிகளின் வீட்டுவாசல்களும் இந்த காவல்காரர்களால்தான் நிரம்பியிருக்கும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்த தேசத்தின் எந்த விவசாயினுடைய வீட்டின் முன்பும் அதுபோன்று வாட்ச்மேன்கள் தென்பட்டதில்லை.

ஆம். வாட்ச்மேன்கள், இந்த தேசத்தின் பணம் கொழிப்பவர்களைப் பாதுகாக்கத்தான். ஆனால், அந்த வாட்ச்மேன்கள் தங்களின் இறுதிக் காலம்வரை வறுமையில்தான் உழன்றுகொண்டிருப்பார்கள். இந்த நாட்டின் காவல்கார பிரதமராகத் தன்னை அறிவித்துக்கொண்டிருக்கும் மோடி, கடந்த ஐந்து ஆண்டுகாலத்தில் அந்த நிலைமையை மாற்றினாரா? ஆம், நிச்சயம் மாற்றினார். பெரும்பாலான விவசாயிகள் இந்தப் பெருமுதலாளிகளின் வீட்டு வாட்ச்மேன்களாக மாறிப்போனார்கள்.

இப்படித்தான், 2014 தேர்தல் சமயத்தில் மோடி தன்னை, ’இளமைக்காலத்தில் தேநீர் விற்றவர்’ எனப் பிரகடனப்படுத்திக்கொண்டார். அதுவும் சாதாரணமாக அல்ல, ‘இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து வந்து தேநீர் விற்றேன்’ எனக் கூறினார். ஒரு ’தேநீர் விற்றவர்’ பிரதமராகும்போது, அவரைப் போல மற்ற எல்லா தேநீர் விற்பவர்களின் நிலை மற்றும் சாமான்யர்களின் நிலை, பொருளாதார ரீதியாகவும் படிப்பினை ரீதியாகவும் முன்னேறும் என மக்கள் நம்பினார்கள். குறைந்தபட்சம் சில தேநீர்க் கடைகளாவது, கடந்த ஐந்தாண்டுகளில் ஹோட்டல்களாக உருமாற்றம் கண்டிருக்க வேண்டும். ஆனால், தேநீர் விற்று பிரதமரானவர் அறிவித்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையால், நாடு முழுவதும் உள்ள தேநீர் விற்பவர்கள் போன்ற சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரம் இன்னும் மோசமடைய நேரிட்டது.

தேநீர் விற்பவர்களுக்கும் காவல்காரர்களுக்கும் சில வேறுபாடுகள் இருக்கின்றன. தெருவில் தேநீர் விற்றாலும், அவர்களால் சுயமரியாதையுடனும் மாண்புடனும் வாழமுடியும். ஆனால், காவல்காரர்களின் நிலை அப்படிக் கிடையாது. முதலாளிகளுக்கு அவர்களை மனிதர்களாக நடத்த வேண்டும் என்கிற எண்ணம் இருந்ததே இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியில், தேநீர் விற்றவர்கள், வாட்ச்மேன்களின் வீட்டுப் பிள்ளைகள் யாரேனும் மாண்புமிக்க வேலை கிடைத்து சேர்ந்துள்ளனரா? இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து வந்து தேநீர் விற்றவரால், அதே பிரிவைச் சேர்ந்த எத்தனைப் பேரின் பொருளாதாரம் வளர்ந்திருக்கிறது? இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் இல்லை என்பதுதான் பதில். 

ஒருங்கிணைந்த ஆந்திராவின் முதல்வராக  2004-ல் இருந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி, கல்லூரி மாணவர்களின் கல்விக் கட்டணத்தைத் திரும்பப் பெறும் திட்டம் ஒன்றை அறிவித்தார். இதனால், தேநீர் விற்பவர்கள் மற்றும் காவல்காரர்களின் பிள்ளைகள் ஏராளமானோர் பட்டதாரிகளானார்கள். உயர்ந்த நிறுவனங்களின் மரியாதைக்குரிய பதவிகள் அவர்களுக்குக் கிடைத்தன. மோடியின் ஆட்சியில் அப்படியான திட்டங்கள் எங்கே?. உண்மையில் அப்படி பதவிக்கு வந்தவர்களை ஆட்குறைப்பு செய்வதுதான் தற்போது அரங்கேறி வருகிறது. மற்றொரு பக்கம், புதிதாக அரசு வேலைகளும் உருவாக்கப்படவில்லை என்பதால், வாட்ச்மேன்களின் பிள்ளைகளையும் தேநீர் விற்பவர்களின் வாரிசுகளையும் பக்கோடா விற்கச்சொல்லி மோடியும், பி.ஜே.பி தலைவர் அமித் ஷாவும் யோசனை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

இங்கே, பெருநிறுவனங்களைக் காவல்காக்கும் வாட்ச்மேன்கள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள், ஆதிவாசிப் பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் அல்லது நேபாளத்தின் ஒடுக்கப்பட்ட கூர்கா சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான்.  உயர்குடியில் பிறந்தவர்கள் யாரும் இங்கே வாட்ச்மேன்களாக விரும்புவதில்லை. மோடி ஆட்சியில் தரமான கல்வி என்பது வாட்ச்மேன்களின் முதலாளிகளுக்கு மட்டுமான தனிச்சொத்தாக மாறியிருக்கிறது. மறுபக்கம், வாட்ச்மேன்களின் பிள்ளைகள் தங்களின் கனவுகள் களவாடப்பட்டுக்கிடக்கிறார்கள். தாய்மொழி வழியிலான கல்வி, வாட்ச்மேன்களின் பிள்ளைகள் படிக்கும் பாழடைந்த பள்ளிகளுக்கு மட்டுமானது என்றும், குளிரூட்டப்பட்ட கல்வி அறைகளுக்கு ஆங்கிலவழிக் கல்விதான் பொருத்தம் என்றும் மாறிப்போனது சர்வசாதாரணமாகிவிட்டதுதான் இந்த அரசின் பொருளாதாரம் கண்டுள்ள வெற்றி.

தான் காவல்காக்கும் வீட்டின் வெளிப்புறம் நின்றுகொண்டு, அவர்கள் வீட்டுப் பிள்ளைகளின் செழிப்பான வாழ்வுடன் தங்கள் பிள்ளைகளின் வாழ்வை ஒப்பிட்டுப்பார்க்கும் வாட்ச்மேன்களின் நெஞ்சம் மட்டும் பதைக்கவில்லை; அவர்களின் வயிறுகளும் சேர்ந்துகொண்டு அவர்களுக்கே உரிய வறுமைபோலப் பற்றி எரிகின்றன.

அரசுக் கல்விக்கூடங்களை கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைந்துவருவதும், தனியார் கல்விக்கூடங்கள் அதிகரித்துவருவதும், பெருமுதலாளிகளுக்கு மட்டுமே பொருத்தமான இடமாக கல்விக் கூடங்கள் மாறி இருப்பதும், வாட்ச்மேன்களின் பிள்ளைகள் பக்கோடா விற்க வழிகாட்டப்படுவதும்தான், இந்த தேசத்தின் வாட்ச்மேன்களால் வளர்க்கப்பட்ட பொருளாதாரமாக உள்ளது. அந்தப் பொருளாதாரம் நம்மை எங்கே அழைத்துக்கொண்டு வந்துள்ளது பாருங்கள்!. 

உண்மையில், சுயமரியாதையுள்ள எந்த வாட்ச்மேன்களும் இந்த தேசத்தில் தங்கள் வேலையை விருப்பப்பட்டு மனமாரச் செய்வதில்லை. ஆகையால், ‘நானும் சவுக்கிதார்’ எனப் பிரசாரம் செய்வோர், அந்தப் பிரசாரத்திற்கு முன்பு ஒவ்வொரு பெருமுதலாளிகளின் வீட்டு வாசலிலும் தங்கள் கட்சி அல்லது அமைப்பைச் சேர்ந்தவர்களை நிற்கவைத்துவிட்டு, பிறகு பேசட்டும்.

வாட்ச்மேன் வாழ்க்கை ஒரு மனிதனுக்கு எவ்வித சுயமரியாதையையும் மாண்பையும் தந்துவிடுவதில்லை. அதனால், எனக்குச் சவுக்கிதாராக இருக்க விருப்பமில்லை. ஏனென்றால், சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், அறத்தின் அடிப்படையிலும் மனிதர்களாக நடத்தப்படுவதற்கான வாய்ப்புகளை வாட்ச்மேன் வேலைகள் வழங்குவதில்லை. ஆம், ’நான் சவுக்கிதார் இல்லை!’". 

நன்றி: தி இந்தியன் எக்ஸ்பிரஸ்

அடுத்த கட்டுரைக்கு