Published:Updated:

`காலத்துக்கும் மறக்க முடியாத செயல் இது!' - கனிமொழியை நெகிழ வைத்த டம்மி வேட்பாளர்

விளாத்திகுளத்துக்கு உட்பட்ட ஊராட்சி மற்றும் வார்டுகள் குறித்தும் ஒவ்வொரு தேர்தலிலும் தி.மு.க மற்றும் பிற கட்சிகள் பெற்றிருக்க கூடிய வாக்கு எண்ணிக்கை குறித்த புள்ளிவிபரங்களையும் துல்லியமாக எடுத்துக் கூறி கனிமொழியை அசர வைத்தார்.

`காலத்துக்கும் மறக்க முடியாத செயல் இது!' - கனிமொழியை நெகிழ வைத்த டம்மி வேட்பாளர்
`காலத்துக்கும் மறக்க முடியாத செயல் இது!' - கனிமொழியை நெகிழ வைத்த டம்மி வேட்பாளர்

தூத்துக்குடி தொகுதியில் தனக்கு மாற்றாக டம்மி வேட்பாளராக முக்கிய நிர்வாகிகளைப் போடாமல் பேரூர் கழக செயலாளர் ஒருவரது பெயரை முன்மொழிந்திருக்கிறார் கனிமொழி. `காலம் உள்ளவரைக்கும் இந்தச் செயலை என்னால் மறக்க முடியாது' என நெகிழ்ச்சியோடு கூறியிருக்கிறார் அந்த மாற்று வேட்பாளர். 

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடக் கூடிய இறுதி வேட்பாளர்களின் பட்டியல் நாளை மறுதினம் வெளியாக இருக்கிறது. ஒவ்வொரு கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளரும் வேட்புமனுத் தாக்கலின்போது மாற்று வேட்பாளர் யார் என்பதைக் குறிப்பிடுவது வழக்கம். இதன்மூலம், வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டுவிட்டால், மாற்று வேட்பாளரே களத்தில் நிற்க வேண்டிய சூழல் உருவாகும். இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து வேட்பாளர்கள் பலரும் தங்களுடைய மனைவி பெயரையோ, மைத்துனர் பெயரையோ குறிப்பிடுவது வழக்கம். மாற்று வேட்பாளர் என்ற இடத்தில் உட்கட்சி நிர்வாகிகள் பெயரைக் குறிப்பிடுவதற்கே பலரும் தயக்கம் காட்டுவது வழக்கம். இந்த நிலையில், தூத்துக்குடி தொகுதிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்த கனிமொழி, விளாத்திகுளம் பேரூராட்சி செயலாளர் வேலுச்சாமியின் பெயரை முன்மொழிந்திருக்கிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் கீதா ஜீவன், மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் வழக்கறிஞர் ஜோயல் உட்பட முக்கியப் பிரமுகர்கள் பலரும் இருக்கையில் கனிமொழியின் வித்தியாசமான செயல்பாட்டை யாரும் எதிர்பார்க்கவில்லை. 

தி.மு.க நிர்வாகிகளிடம் பேசினோம். ``வேட்புமனுத் தாக்கலின்போதுதான் மாற்று வேட்பாளராக யார் பெயரைக் கனிமொழி பரிந்துரை செய்திருக்கிறார் என்பதைப் பார்க்க முடிந்தது. மாற்று வேட்பாளராகப் போடப்பட்டுள்ள வேலுச்சாமி, தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். விளாத்திகுளம் பேரூர் செயலாளராகக் கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பணியாற்றி வருகிறார். விளாத்திகுளத்துக்கு உட்பட்ட ஊராட்சி மற்றும் வார்டுகள் குறித்தும் ஒவ்வொரு தேர்தலிலும் தி.மு.க மற்றும் பிற கட்சிகள் பெற்றிருக்க கூடிய வாக்கு எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரங்களையும் துல்லியமாக எடுத்துக் கூறி கனிமொழியை அசர வைத்தார். இவ்வளவு புள்ளிவிவரங்களை உட்கட்சி நிர்வாகிகள் யாரும் வைத்திருக்கவில்லை. இரண்டு ஏக்கர் நிலம் மட்டுமே அவர் பெயரில் இருக்கிறது. வேறு எந்த வழக்குகளும் அவர் மீது நிலுவையில் இல்லை. 

அரசுப் பணியில் ஆய்வக உதவியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவியும் அரசு மருத்துவமனையில் பிரசவ உதவியாளராக இருக்கிறார். அவரது எளிமையும் கட்சியின் மீதான அர்ப்பணிப்பும்தான் கனிமொழியைக் கவர்ந்தது. மாற்று வேட்பாளர் பெயர்ப் பரிந்துரையில் கீதா ஜீவன், ஜோயல் உட்படச் சிலரது பெயர்கள் அடிபட்டாலும், வேலுச்சாமியைத் தேர்வு செய்தார் கனிமொழி. இந்தத் தகவலைக் கேள்விப்பட்டு கண் கலங்கிவிட்டார் வேலுச்சாமி. நேரிடையாக கனிமொழியை சந்தித்து, `என்னால் காலத்துக்கும் மறக்க முடியாதபடி செய்துவிட்டீர்கள். ரொம்ப நன்றி' என நெகிழ்ந்தார். ` உங்களைப் போன்றவர்கள்தான் கழகத்துக்குத் தேவை. தேர்தல் பணியில் சிறப்பாகச் செயல்படுங்கள்' எனக் கூறி அனுப்பி வைத்தார் கனிமொழி" என்கின்றனர் ஆச்சரியத்துடன்.