Published:Updated:

சித்திரைத் திருவிழா Vs. மதுரைத் தேர்தல்.. சிக்கல்களும் சவால்களும்!

சித்திரைத் திருவிழா Vs. மதுரைத் தேர்தல்.. சிக்கல்களும் சவால்களும்!
சித்திரைத் திருவிழா Vs. மதுரைத் தேர்தல்.. சிக்கல்களும் சவால்களும்!

மதுரை அரசியல் வரலாற்றில் புதிய பதிவாய் என்றும் நிலைத்திருக்கும், பண்பாட்டுத் திருவிழாவும் ஜனநாயகத் திருவிழாவும் ஒருசேர நிகழவிருப்பது புதிய அனுபவம்.

துரைத் தேர்தல் தேதியை மாற்றச் சொல்லித் தொடுக்கப்பட்ட வழக்கினை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டதால் ஏப்ரல் 18-ல் மதுரையில் வாக்குப்பதிவு உறுதியாகியுள்ளது. மதுரையில் தேர்தலை நடத்துவதற்குத் தேர்தல் ஆணையம், மாவட்ட நிர்வாகம், காவல்துறை, பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் என அனைத்துத் தரப்பினரின் முழுமையான பங்களிப்பு வழக்கத்தைவிட இன்னும் கூடுதலாகத் தேவைப்படும் என்பது உறுதி. ஊர்கூடித் தேர் இழுப்பதுடன், தேர்தலையும் சேர்த்து நகர்த்தப் போகிறார்கள், மதுரைவாசிகள். 

புதிய சவாலில் சிரமங்கள் என்னென்ன? 

தேர்தலுக்கு முந்தைய நாள் இரவே வாக்குச்சாவடிப் பணிகள் முடிந்து தயாராகி, மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். அதேநேரம், யானை வாகனத்தில் சொக்கரும், பூப்பல்லக்கில் மீனாட்சியும் மாசி வீதி வழியாக வலம் வருவர். திருக்கல்யாண நாளென்பதால் மக்கள் கூட்டம் அலைமோதும். வழக்கப்படி அன்றைய வீதியுலா நள்ளிரவு நெருங்கும் வரை நீளும். இதனால், அந்தப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் தேர்தல் ஏற்பாட்டுப் பணிகள் தொய்வடையலாம்.

மறுபுறம், அழகர்மலை சுந்தரராஜப் பெருமாள் கள்ளழகராய்த் தங்கப்பல்லக்கில் மலையிலிருந்து மதுரைக்குத் தேர்தலுக்கு முந்தைய நாள் மாலையில் புறப்படுவார். வேன், லாரி எனப் பல்வேறு வாகனங்களில் பக்தர்கள் இரவு முழுவதும் சாரை சாரையாகக் கோயிலைநோக்கிச் சென்ற வண்ணம் இருப்பார்கள். அன்றையதினம் மட்டும் மதுரை - அழகர்கோயில் மாநில நெடுஞ்சாலையின் 18 கி.மீ.தூரமும் ஒருவழிப்பாதையாகச் செயல்படும். இவற்றால் இப்பாதையில் அமைந்துள்ள கிராமங்கள், அருகருகே அமைந்திருக்கின்ற கிராமங்களின் வாக்குச்சாவடிகளைத் தயார்படுத்தும் பணிகளில் சுணக்கம் ஏற்படலாம்.

தேரோட்டமும், சுவாமி-அம்பாள் வீதியுலாவும் நடைபெறும் என்பதால் நான்கு மாசி வீதிகள் மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலுள்ள பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் செயல்படும் வாக்குச்சாவடிகளில் ஏற்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படக்கூடும். பல்லாயிரக்கணக்கானோர் திரளும் கள்ளழகர் எதிர்சேவை நடைபெறும் மூன்றுமாவடி, புதூர், ரிசர்வ் லைன், அவுட்போஸ்ட், தல்லாகுளம் பகுதிகளிலும் சாலையருகே பள்ளிகள் அமைந்துள்ளதால், சித்திரைத் திருவிழாவுக்கும், தேர்தலுக்கும் ஒருங்கே பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து தருவதில் போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் சிரமங்கள் நேரிட வாய்ப்புள்ளது.

தேரோடும் வீதியென்பதால் அதிகாலையிலிருந்து நண்பகல்வரை மாசி வீதிகளிலும் இதர தெருக்களிலும் மின் இணைப்பு முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டிருக்கும். இதனால், அப்பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில், மாற்று மின் ஏற்பாட்டைச் செய்துகொள்தல் அவசியமாகியுள்ளது.

மதுரை சித்திரைத் திருவிழா நடைபெறும் பகுதிகளில் கூடும் பக்தர்களுக்கு நீர்மோர், சிற்றன்னங்கள், பனை ஓலை விசிறிகள் உள்ளிட்டவற்றை வழங்குவதைக் கண்காணித்தலும், கட்டுப்படுத்துதலும் இயலாத காரியம். மீறியும் பொதுமக்கள், பக்தர்களிடையே கெடுபிடி செய்தால் அது, அதிகாரிகள் மீதான பக்தர்களின் எரிச்சலாக மாறக்கூடிய வாய்ப்பாக அமையும். 

மதுரையில் மட்டும் இரவு 8 மணிவரை வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாலையில் அவுட்போஸ்ட்டிலிருந்து புறப்படுகின்ற பெருமாள், இரவு தல்லாகுளத்தில் எழுந்தருள்வதைக் காண அத்தனை கிராமங்களிலிருந்தும், வெளிமாவட்டங்களிலிருந்தும் வந்து குவிகின்ற மக்கள் வைகைக் கரையோரங்களில் இடம்பிடித்து அதிகாலையில் கள்ளழகர் தரிசனத்திற்காக இரவு முழுவதும் தங்கியிருப்பார்கள். இதனால், வாக்குப்பதிவு சதவிகிதம் குறைவதோடு கள்ள ஒட்டுப் போடுவதற்குச் சாதகமான சூழலும் ஏற்படக்கூடும். 

தேர்தல் முடிந்ததும் மதுரைத் தொகுதி வாக்குச்சாவடிகளின் வாக்குப்பெட்டிகள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான மதுரை அரசு மருத்துவக் கல்லூரிக்குக் கொண்டுவரப்படும். திருவிழாக் கூட்டம் நிரம்பியிருக்கின்ற கோரிப்பாளையம், அண்ணா பேருந்து நிலையம் ஆகியவற்றின் மையப் பகுதியில் மருத்துவக்கல்லூரி அமைந்திருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் பக்தர்களின் கூட்டத்தை ஒழுங்குபடுத்த  திணறும் காவல்துறை, அவற்றோடு இந்த வாகனங்களைப் பாதுகாப்பாய்க் கொண்டுசேர்ப்பது கூடுதல் சவாலாகத் திகழும்.

வழக்கமாக வெளி மாவட்டங்களிலிருந்து காவலர்கள் வரவழைக்கப்படுவார்கள். ஆனால், மற்ற மாவட்டங்களிலும் தேர்தல் நடப்பதால், அண்டை மாநிலங்களிலிருந்து காவலர்கள் வரவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிக்குச் சரி. ஆனால், திருவிழாப் பணியில் மற்ற மாவட்ட, மாநிலக் காவல்துறையினர் ஈடுபடும்போது, உள்ளூர்க் காவலர்கள் அவர்களை வழிநடத்த வேண்டும். பெரும்பாலும் கோட்டை விட்டுவிடுவதால் திருவிழா நேரங்களில் பல குழப்பங்கள் நடைபெற வாய்ப்பு ஏற்படும். அதுபோன்ற குழப்பங்கள், இந்தாண்டு தொடராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது காவல்துறை உயரதிகாரிகளின் கடமையாகும்.

தரிசனம், திருவிழாக் கொண்டாட்டம் என வீதிகளெங்கும் கூடி நிற்கும் பக்தர்களை அலைக்கழிக்கச் செய்யாமல் அவர்களுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்தித் தருவது, அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரின் கடமையாகும். போக்குவரத்து மாற்றங்களை முன்கூட்டியே திட்டமிடுவது, பக்தர்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கும், வாக்காளர்களுக்கும் சுகாதாரமான குடிநீர் வசதி, சுத்தமான கழிப்பறை வசதி என அனைத்திலும் கவனம் செலுத்த வேண்டும். வாக்காளர்களாக வரும் பக்தர்கள், வாக்குச்சாவடிகளில் ஓட்டு போட்டுவிட்டுத் திருவிழாவைக் களிப்புடன் கொண்டாடவுள்ள மதுரை மக்கள், மேற்கண்ட கோரிக்கைகளை மாநகராட்சி அதிகாரிகளுக்கு விடுத்துள்ளனர். 

மதுரை அரசியல் வரலாற்றில் புதிய பதிவாய் என்றும் நிலைத்திருக்கும், பண்பாட்டுத் திருவிழாவும் ஜனநாயகத் திருவிழாவும் ஒருசேர நிகழவிருப்பது புதிய அனுபவம். இரண்டு திருவிழாக்களும் வெற்றிகரமாக நடைபெற வேண்டியது மதுரை மக்கள் மற்றும் அதிகாரிகளின் கைகளில்தாம் உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு