Published:Updated:

`அவுங்க பரிசுப் பெட்டகம் கொடுத்தாங்க, நீங்கள் என்ன கொடுப்பீங்க!'- கமல் கட்சி வேட்பாளரை அதிரவைத்த மூதாட்டி

`அவுங்க பரிசுப் பெட்டகம் கொடுத்தாங்க, நீங்கள் என்ன கொடுப்பீங்க!'- கமல் கட்சி வேட்பாளரை அதிரவைத்த மூதாட்டி
`அவுங்க பரிசுப் பெட்டகம் கொடுத்தாங்க, நீங்கள் என்ன கொடுப்பீங்க!'- கமல் கட்சி வேட்பாளரை அதிரவைத்த மூதாட்டி

பொள்ளாச்சியில் ஓர் வீட்டில் பரிசுப் பெட்டகம் வழங்கப்பட்டிருப்பதை மக்கள் நீதி மய்ய வேட்பாளர் மூகாம்பிகா அம்பலப்படுத்தியுள்ளார்.

பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.பி மகேந்திரன், தி.மு.க-வில் சண்முகசுந்தரம், அ.ம.மு.க-வில் முத்துக்குமார் வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர். மக்கள் நீதி மய்யத்தில், பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை வெளிக் கொண்டுவந்தவர்களின் ஒருவரான மூகாம்பிகா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், கோவையிலிருந்து லண்டனுக்கு காரிலேயே சென்று சாதனை படைத்தவர்.

வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. அனைத்து வேட்பாளர்களும் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்த நிலையில், மூகாம்பிகா பொள்ளாச்சியில் நேற்று மாலை வீடு, வீடாகச் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது, அங்கு ஒரு வீட்டில் அ.ம.மு.க-வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னமான பரிசுப் பெட்டகம் இருந்துள்ளதை அவர் கண்டுபிடித்துள்ளார்.

இதுகுறித்து மூகாம்பிகாவிடம் பேசியபோது, ``நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு பாட்டியின் வீட்டுக்குச் சென்றிருந்தோம். அந்தப் பாட்டி யதேச்சையாக இந்தப் பரிசுப் பெட்டகத்தைக் காட்டி, `அவர்கள் இதைக் கொடுத்துள்ளனர்… நீங்கள் என்ன கொடுப்பீர்கள்..? டார்ச்லைட் சின்னம்னா, டார்ச்லைட் கொடுப்பீர்களா?’ என்று கேட்டார். அந்தப் பரிசுப் பெட்டகத்தில் ஜெயலலிதா, சசிகலா, தினகரன் ஆகியோரது படங்கள் இருந்தன. உள்ளே என்ன இருந்தது? என்று பார்க்கவில்லை.

நம் மக்களை எந்த அளவுக்கு மாற்றி வைத்திருக்கிறார்கள் என்று பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. இது எங்களுக்கு முதல் தேர்தல். ஒவ்வொரு விஷயத்துக்கு அனுமதி வாங்குவதே சிரமமாக இருக்கிறது. என்னுடைய காரில்கூட கட்சிக்கொடி கட்ட விடுவதில்லை. மாற்றம் வேண்டும் என்றால், மக்கள்தான் மாற வேண்டும்” என்றார்.

அ.ம.மு.க-வுக்கு நேற்று காலைதான் பரிசுப் பெட்டகம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்குள்ளாகவே, வீடுகளுக்குச் சென்று பரிசுப் பெட்டகம் வழங்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.