Published:Updated:

`முட்டுக்கட்டையாக இருக்கும் 3 சிக்கல்கள்!’ - மத்திய சென்னை நிலவரத்தால் தகிக்கும் உடன்பிறப்புகள்

பணம் வரவில்லை என்பது பிரதான காரணமாக இருந்தாலும், கட்சிக்காரர்கள் மத்தியிலும் ஒருங்கிணைப்பு இல்லை. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு வாரங்களே இருக்கின்றன. இதே நிலைமை நீடித்தால் வெற்றியை நோக்கிப் பயணிப்பது சிரமம்.

`முட்டுக்கட்டையாக இருக்கும் 3 சிக்கல்கள்!’ - மத்திய சென்னை நிலவரத்தால் தகிக்கும் உடன்பிறப்புகள்
`முட்டுக்கட்டையாக இருக்கும் 3 சிக்கல்கள்!’ - மத்திய சென்னை நிலவரத்தால் தகிக்கும் உடன்பிறப்புகள்

த்திய சென்னை தொகுதியின் களநிலவரத்தால் கடும் கொந்தளிப்பில் இருக்கின்றனர் தி.மு.க உடன்பிறப்புகள். ` தேர்தல் செலவுக்காக ஒரு ரூபாயைக்கூட இன்னும் செலவு செய்யவில்லை. பா.ம.க, எஸ்.டி.பி.ஐ ஆகிய கட்சிகள், தேர்தல் வேலைகளில் விறுவிறுப்பு காட்டத் தொடங்கிவிட்டன. தி.மு.க நிலைதான் படுமோசமாக இருக்கிறது' என்கின்றனர் தி.மு.க-வினர். 

நாடாளுமன்றத் தேர்தல் தேதி நெருங்கிக் கொண்டிருப்பதால், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அரசியல் கட்சித் தலைவர்கள் அனல் பறக்கப் பேசி வருகின்றனர். ` மோடியா...ராகுலா?' என்ற கோதாவில் எடப்பாடி பழனிசாமியும் ஸ்டாலினும் வரிந்துகட்டிக் கொண்டு பேசி வருகின்றனர். ` நாட்டுக்கு வலிமையான தலைவர் என்றால், அது மோடி மட்டும்தான்' என எடப்பாடியும் ` ஏழை எளியவர்களுக்கு ஆண்டுக்கு 72,000 ரூபாயை வங்கிக் கணக்கில் சேர்ப்பார் ராகுல். அந்தப் பணம் வருமா...வராதா என நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை' என ஸ்டாலினும் பிரசாரத்தின் மையக் கருத்தாக முன்வைக்கின்றனர்.

தி.மு.க போட்டியிடும் 20 தொகுதிகளோடு சேர்த்து, கூட்டணிக் கட்சிகளின் வெற்றிக்காகவும் மாநிலம் முழுக்க வலம் வந்து கொண்டிருக்கிறார் ஸ்டாலின். இந்தத் தேர்தலை வாழ்வா... சாவா போராட்டமாகப் பார்ப்பதால், களநிலவர அறிக்கைகளை நாள்தோறும் உற்றுக் கவனித்து வருகிறார். ` ஆர்.கே.நகர் போல பூத் கமிட்டி குளறுபடிகள் அமைந்துவிடக் கூடாது' என்பதால், ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள வாக்குச் சாவடி நிர்வாகிகளிடம் தனிப்பட்ட முறையில் பேசி வருகிறார். அப்போது, ` நீங்கள் ஒவ்வொருவருமே முக்கியமானவர்கள். கழகத்துக்கு வெற்றியைத் தேடிக் கொடுங்கள். தேர்தலுக்குப் பிறகு உங்களுக்குத் தேவையானவை அனைத்தும் வந்து சேரும்' என நம்பிக்கை வார்த்தைகளை வெளிப்படுத்தியிருக்கிறார். தி.மு.க தலைமையின் இந்த உறுதிமொழிக்குக் கட்டுப்பட்டு, பல தொகுதிகளில் தேர்தல் வேலைகள் வேகமெடுக்கத் தொடங்கிவிட்டன. 

`` ஆனால், மத்திய சென்னை தொகுதியின் நிலவரம் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. கூட்டணிக் கட்சிகளின் ஒருங்கிணைப்பும் இல்லாமல் நிலவரம் மோசமாக இருக்கிறது" என ஆதங்கத்தோடு நம்மிடம் விவரித்த தி.மு.க மூத்த நிர்வாகி ஒருவர், `` கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது என்ன நடந்ததோ, அதே பாணியைத்தான் இந்தத் தேர்தலிலும் கடைப்பிடிக்கின்றனர். தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதைத் தலைமை முடிவு செய்கிறது. கூட்டணி முடிவான பிறகு மாவட்டத்துக்குட்பட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகளின் பட்டியலை மாவட்டச் செயலாளர் கேட்டு வாங்குவார். பகுதி நிர்வாகம், வட்ட நிர்வாகம் என அனைத்து விவரங்களையும் சேகரிப்பார்கள். இந்தப் பட்டியலை வேட்பாளர் சம்பந்தப்பட்ட கட்சியின் கிளைக் கழக நிர்வாகிகளுக்கு மாவட்டச் செயலாளர் கொடுப்பார். அப்போதுதான் சரியான ஒருங்கிணைப்பு இருக்கும். இதுவரையில் மத்திய சென்னை தொகுதியில் இப்படியொரு பட்டியலே தயாரிக்கப்படவில்லை. இதைப் பற்றி வேட்பாளர் தயாநிதி மாறனும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை" என ஆதங்கத்தை வெளிப்படுத்தியவர், 

`` மத்திய சென்னை தொகுதிக்குட்பட்டு 6 சட்டமன்றத் தொகுதிகள் வருகின்றன. பி.கே.சேகர் பாபு கட்டுப்பாட்டின் கீழ் எழும்பூர், வில்லிவாக்கம், துறைமுகம் ஆகிய தொகுதிகளும் ஜெ.அன்பழகன் கட்டுப்பாட்டில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, அண்ணா நகர், ஆயிரம் விளக்கு ஆகிய தொகுதிகள் வருகின்றன. இந்தத் தொகுதிகளில் மொத்தம் 1,200 வாக்குச்சாவடிகள் இருக்கின்றன. இந்த வாக்குச்சாவடிகளில் உள்ள முகவர்களுக்கு டீ குடிப்பதற்குக்கூட வேட்பாளர் தரப்பிலிருந்து பணம் கொடுக்கப்படவில்லை. மாவட்டச் செயலாளர்களும், தனிப்பட்ட முறையில் செலவு செய்கின்றனர். அதுவும், யானைப் பசிக்கு சோளப் பொறியைக் கொடுத்தது போலத்தான் இருக்கிறது. தயாநிதி மாறன் தரப்பினரிடம் கேட்டால், ` தலைமையிலிருந்து எதுவும் கொடுக்கப்படவில்லை; விரைவில் பணம் வரும்' என்கிறார்கள். அடிமட்ட நிர்வாகிகளின் அன்றாட செலவுகளைப் பற்றிக்கூட யாரும் கவலைப்படவில்லை. பூத்துகளுக்கும் பணம் கொடுக்கவில்லை. கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுக்குத் தேர்தல் செலவாக ஒரு ரூபாயைக்கூடக் கொடுக்கவில்லை. இதனால் யாருமே தேர்தல் வேலை பார்க்கச் செல்லவில்லை. 

இதைப் பற்றி நேற்று ஸ்டாலின் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளனர். அவரும் இந்த விஷயத்தில் தலையிட்டு, ` என்னதான் பிரச்னை?' எனக் கேட்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து தொகுதிக்குட்பட்ட மாவட்டச் செயலாளர்களுக்கு சில அறிவுறுத்தல்களைக் கொடுத்திருக்கிறார். பணம் வரவில்லை என்பது பிரதான காரணமாக இருந்தாலும், கட்சிக்காரர்கள் மத்தியிலும் ஒருங்கிணைப்பு இல்லை. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு வாரங்களே இருக்கின்றன. இதே நிலைமை நீடித்தால் வெற்றியை நோக்கிப் பயணிப்பது சிரமம். நேற்று எழும்பூர் தொகுதியில் வேட்பாளர் தயாநிதி மாறன் வாக்கு சேகரித்தார். மத்திய சென்னை தொகுதியில் இருக்கும் முக்கிய தெருக்களில் மட்டுமே அவர் வலம் வருகிறார். தொகுதிக்குள் இருக்கும் தி.மு.க எம்.எல்.ஏ-க்களும் செலவு செய்யத் தயாராக இல்லை. மாவட்டச் செயலாளர்களும், என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. அதேநேரம், பா.ம.க வேட்பாளர் சாம் பால், அ.தி.மு.க நிர்வாகிகளுக்குப் பணத்தை வாரியிறைத்துக் கொண்டிருக்கிறார். இதனால் அவர் செல்லும் இடங்களில் நல்ல கூட்டத்தைச் சேர்த்துவிடுகிறார். அ.ம.மு.க-வின் கூட்டணிக் கட்சியான எஸ்.டி.பி.ஐ-யும் தொகுதி முழுக்க நிறைந்திருக்கும் இஸ்லாமிய வாக்குகளை அறுவடை செய்வதில் முனைப்பு காட்டிக் கொண்டிருக்கிறது. தி.மு.க நிலையைப் பார்த்து, உள்ளூர் நிர்வாகிகள் கண்ணீர் வடிக்கின்றனர்" என்றார் வேதனையோடு. 

தேர்தல் வெற்றிக்கான அடிப்படையே பூத் கமிட்டியில் இருந்துதான் தொடங்குகிறது. மத்திய சென்னை பூத் கமிட்டி நிர்வாகிகள் மத்தியில் தென்படும் சோர்வு, உடன்பிறப்புகளின் அதிருப்தி, செலவுக்கு நிதி இல்லை எனத் தயாநிதி மாறன் வெற்றிக்கு எதிராக 3 விஷயங்கள் முட்டுக்கட்டையாக நிற்கின்றன. `தலைமை கவனிக்குமா?' என்ற குரல், தொகுதி முழுக்க எதிரொலிக்கிறது.