Published:Updated:

தலைவர்களைக் குறி வைக்கும் விவசாயிகள்..!

தலைவர்களைக் குறி வைக்கும் விவசாயிகள்..!
தலைவர்களைக் குறி வைக்கும் விவசாயிகள்..!

`விவசாயி என்றால் விவசாயத்தைப் பார்த்துக்கொண்டு, அறுவடை செய்த தானியங்களுக்குக் கணக்கு பார்த்துக்கொண்டு இருப்பார்கள். அவர்களை ஒரு பொருட்டாகக் கருதத் தேவையில்லை’ என்று இத்தனை ஆண்டுகள் அவர்கள் முதுகில் ஏறிச் சவாரி செய்த அரசியல்வாதிகளே, இப்போது விவசாயிகளைக் கண்டு அதிரும் நிலை ஏற்பட்டுள்ளது. நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு இடங்களில் விவசாயிகள் செய்த வில்லங்க காரியம்,  இந்தியா முழுவதையும்  உற்றுநோக்க வைத்துள்ளது. 

சந்திரசேகர ராவ் முதல்வராக இருக்கும் தெலங்கானா மாநிலத்தில் உள்ள நாடாளுமன்றத் தொகுதி நிசாமாபாத். இது, விவசாயிகள் அதிகம் நிரம்பிய தொகுதி. குறிப்பாக மஞ்சள் சாகுபடி இந்தப் பகுதியில் அதிகம். தெலங்கானாவில் கடைசியாக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அந்த மாநில முதல்வராகப் போட்டியிட்ட சந்திரசேகர ராவ் விவசாயிகளுக்கு ஏராளமான வாக்குறுதிகளை அள்ளிக்கொடுத்தார். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு, அந்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றவில்லை என விவசாயிகள் புலம்பிவந்தனர். இதற்காக அவர்கள் பலகட்ட போராட்டங்களையும் நடத்தினார்கள். வழக்கபோல், அரசின் தரப்பிலிருந்து சமாதான படலங்கள் நடைபெற்றதேயொழிய, வேறு எந்த நடவடிக்கையும் இல்லை.

இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வந்த பிறகு, தெலங்கானா விவசாயிகள் சந்திரசேகர ராவுக்கு எதிராக ஏதாவது ஒரு நெருக்கடியை ஏற்படுத்த வேண்டும் என்று முடிவு செய்திருந்தனர். அந்தச் சூழ்நிலையில், சந்திரசேகர ராவ் மகள் கவிதா தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி சார்பில் நிசாமாபாத் தொகுதியில் போட்டியிடுவார் என்று அந்தக் கட்சித் தலைமை அறிவித்தது. அப்போது விவசாயிகளுக்குப் பொறி தட்டியது. முதல்வருக்குச் சிக்கல் ஏற்படுத்த வேண்டுமென்றால், அவருடைய மகளுக்கு நாம் நெருக்கடியை ஏற்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தனர். உடனடியாக, 178 விவசாயிகள் பெயர்கள் பட்டியலிடப்பட்டது. அந்த 178 பேரும் கவிதா போட்டியிடுவதாக அறிவித்த நிசாமாபாத் தொகுதியில் சுயேச்சையாக வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர். முதலில் இவர்கள் ஏதோ மிரட்டலுக்காகச் செய்கிறார்கள் என்று நினைத்த சந்திரசேகர ராவ், ``விவசாய அமைப்புகளை அழைத்து வாபஸ் வாங்கிக்கொள்ளுங்கள்’’ என்று சொல்லிவிட்டார். ஆனால், அவர்கள் போட்டியிடுவதில் உறுதியாக இருந்த பிறகு, வேட்புமனுவைத் தாக்கல் செய்த ஒவ்வொரு விவசாயியையும் கவிதா தனித்தனியாகச் சந்தித்து வேட்புமனுவை வாபஸ் வாங்கச் சொல்லியும் அவர்கள் மசியவில்லை.

ஒரு பெரிய கட்சியின் தலைவர் எதற்காகச் சுயேச்சை வேட்பாளர்களைக் கெஞ்ச வேண்டும் என்றால், அதில்தான் சூட்சுமம் இருக்கிறது. நமது நாட்டில் பயன்படுத்தப்பட்டு வரும் மின்னணுத் தேர்தல் முறையில் ஒரு தொகுதியில் அதிகபட்சம் 64 பேர் போட்டியிட்டால் மட்டுமே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்களிக்க முடியும். அதற்கு மேல் எண்ணிக்கையில் வேட்பாளர்கள் களத்தில் நின்றால் பழைய முறையில் வாக்குச்சீட்டு முறைக்கு மாற்றப்படும். விவசாயிகள் வேட்புமனு எதையும் நிராகரிக்க முடியாத அளவுக்குத் தெளிவாக இருந்ததால், தேர்தல் அலுவலர் அனைத்து வேட்பு மனுக்களையும் ஏற்றுக்கொண்டும்விட்டார். கவிதாவோடு காங்கிரஸ் வேட்பாளர் உட்பட 185 வேட்பாளர்கள் அந்தத் தொகுதியில் களத்தில் நிற்கிறார்கள். இதனால் 20 பக்க புத்தகமாக வாக்குச்சீட்டு அச்சிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இத்தனை பேரில் தனது சின்னத்தையும், தனது பெயரையும் வாக்காளர்கள் எப்படிக் கண்டுபிடித்து வாக்களிப்பார்கள் என்ற அச்சத்தில்தான் சாதாரண விவசாயிகளிடம் மன்றாட வேண்டிய அவசியம் முதல்வரின் மகளுக்கு ஏற்பட்டது. ஏப்ரல் 11-ம் தேதி அன்று அந்தத் தொகுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. குறிப்பாக, வாக்குச்சீட்டு முறையில் இங்கு தேர்தல் நடைபெற உள்ளது. 

முதல்வரின் மகளுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் பிரதமருக்கும் அதே நிலையே இப்போது ஏற்பட்டுள்ளது. தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் பேசியபோது, “வேளாண் பொருள்களுக்கு உரிய விலை தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்து டெல்லியில் 100 நாள்கள் போராட்டம் நடத்தினோம். ஆனால், அதைப் பிரதமர் மோடி தலைமையிலான அரசு நிறைவேற்றவில்லை. எனவே, மோடி போட்டியிடும் வாரணாசித் தொகுதியில் விவசாயிகள் 111 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்ய உள்ளார்கள்” என்று அதிரடியாக அறிவித்துள்ளார். பிரதமர் மோடி போட்டியிட உள்ள வாரணாசியில் ஏப்ரல் மாதம் 24-ம் தேதி இவர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்ய உள்ளார்கள். தமிழக விவசாயிகள் இதற்காக ரயில் டிக்கெட்டும் வாரணாசிக்கு முன்பதிவு செய்துள்ளார்கள். வாரணாசியில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் களம் இறங்கினால், அங்கும் வாக்குப்பதிவு இயந்திரத்துக்குப் பதிலாக வாக்குச்சீட்டு முறையே நடைமுறைக்கு வரும். மேலும், பத்துக்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட புத்தகமாக வாக்குச்சீட்டு இருக்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே, தமிழக விவசாயிகளை சமாதானம் செய்யும் முயற்சியும் ஒருபுறம் நடைபெற்றுவருகிறது. ஆனால், அதற்கு அய்யாக்கண்ணு தரப்பு ஒத்துவராமல் இருப்பதால், வாரணாசியிலும் தேர்தல் முறையில் மாற்றம் வரும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்த இரண்டு தொகுதிகளை முன் உதாரணமாகக் கொண்டு இந்தியாவில் பல்வேறு தொகுதிகளிலும் பாதிப்புக்கு உள்ளான விவசாயிகள் தேர்தல் களத்தில் இறங்கும் வாய்ப்புள்ளதாக உளவுத்துறையும் மத்திய அரசை உஷார்படுத்தியிருப்பதால், விவசாயிகளின் இந்த வில்லங்க திட்டத்தை எப்படி முறியடிப்பது என்கிற ஆலோசனையில் இப்போது ஆளும் தரப்பு இறங்கியுள்ளது.