Published:Updated:

`தோல்வி பயத்தின் வெளிப்பாடுதான் சோதனை’ - பா.ஜ.க அரசை விளாசும் ஜவாஹிருல்லா!

`தோல்வி பயத்தின் வெளிப்பாடுதான் சோதனை’ - பா.ஜ.க அரசை விளாசும் ஜவாஹிருல்லா!
`தோல்வி பயத்தின் வெளிப்பாடுதான் சோதனை’ - பா.ஜ.க அரசை விளாசும் ஜவாஹிருல்லா!

தி.மு.க பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தியது தேர்தல் நெருங்கும் நேரத்தில் பா.ஜ.க-வின் தோல்வி பயத்தின் வெளிப்பாடு என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

தி.மு.க பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் வீட்டில் வருமானவரித் துறையினர் நேற்று நள்ளிரவு சோதனை நடத்தினர். நள்ளிரவு தொடர்ந்த சோதனை காலை 8 மணி வரை நீட்டித்தது. தேர்தல் நேரத்தில் நடைபெற்றுள்ளன இந்தச் சோதனை சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தச் சோதனைக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியுள்ளதாவது, ``தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்து மத்திய அரசு வெறும் காபந்து அரசாகச் செயல்படும் நிலையில் மத்திய பா.ஜ.க அரசு வருமான வரித்துறையை ஏவிவிட்டு தி.மு.க பொருளாளர் துரைமுருகன் வீட்டில் சோதனை நடத்துவது என்பது அப்பட்டமான ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது. 

நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் ஏற்படவிருக்கும் தோல்வி குறித்த பயத்திலும் விரக்தியிலும் மத்திய அரசில் இருக்கும் பா.ஜ.க, தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களின் முக்கிய அரசியல் பிரமுகர்களின் வீடுகளில் வருமானவரித் துறையின் சோதனை என்ற பெயரில் பயத்தையும் பதற்றத்தையும் உருவாக்க நினைப்பது வெட்கக்கேடானது.

இந்திய தேர்தல் ஆணையம் உடனே இவ்விஷயத்தில் தலையிட்டுத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் வருமானவரிச் சோதனை என்ற பெயரில் சர்வாதிகார நோக்கில் எதிர்முகாம்களில் உள்ள பிரமுகர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்க நினைக்கும் பா.ஜ.க மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுபோன்ற வருமான வரி திடீர் சோதனைகளை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.