Published:Updated:

நாடாளுமன்றத் தேர்தல் 2019: ஜெயலலிதாவையும் கருணாநிதியையும் 'மிஸ்' செய்கிறார்களா வாக்காளர்கள்?

நாடாளுமன்றத் தேர்தல் 2019: ஜெயலலிதாவையும் கருணாநிதியையும் 'மிஸ்' செய்கிறார்களா வாக்காளர்கள்?
News
நாடாளுமன்றத் தேர்தல் 2019: ஜெயலலிதாவையும் கருணாநிதியையும் 'மிஸ்' செய்கிறார்களா வாக்காளர்கள்?

தேர்தல் கூட்டணிகள் பற்றியெல்லாம் அறியாமையில் இருக்கும் மக்கள், ``தாமரைக்குத் தாங்கள் எப்போதுமே வாக்களித்ததில்லை. ஆனால், வழிவழியாகத் தாங்கள் இரட்டை இலை ஆதரவாளர்கள்’’ என்கிறார்கள். இத்தனை ஆண்டுகளாகத் தமிழகத்தில் மலர முடியாத தாமரை, இரட்டை இலையை இறுகப் பற்றிக்கொண்டு களமிறங்குவதற்கு இதுவும் ஒருவகையில் காரணம்.

டிஸ்கி: கீழ்க்காணும் கட்டுரையில் இடம்பெறும் யாவும் கற்பனையல்ல... களநிலவரமே! 

மிழகத்தின் 50 ஆண்டுக்கால திராவிடக் கட்சிகளின் ஆட்சி, இந்தமுறை (நாடாளுமன்றத் தேர்தல் 2019) முற்றிலும் வித்தியாசமானதொரு தேர்தலைச் சந்திக்க இருக்கிறது. ‘மக்களால் நான்! மக்களுக்காகவே நான்’ என்றவரும் மரணித்துவிட்டார். ஓய்வெடுக்காமல் உழைத்தவரும் நிரந்தரமாக ஓய்வெடுத்துக்கொண்டுவிட்டார். தமிழகத் தலைமைகளாக இருந்த ஜெயலலிதாவும் கருணாநிதியும் இல்லாமல் வழிநடத்தப்படும் முதல் தேர்தல் இது. கடந்த தேர்தலில் தனித்து நின்று 37 தொகுதிகளில் வெற்றிபெற்ற அ.தி.மு.க அப்படியான தலைமை தற்போது இல்லாததால் பல தலைகளின் தலைமையில் மெகா கூட்டணியாகச் சந்திக்கிறது. அத்தனை வாய்ப்புகள் கிடைத்தும் தேசியக் கட்சியை உள்ளே நுழையவிடாதவரின் வாரிசுகள் தங்களின் பலதரப்பட்ட குட்டுகளுக்காகச்  சாவர்க்கரின் வாரிசுகளுடன் சமரசம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து வலுவான கூட்டணி அமைத்தாலும் சோஷியல் மீடியாக்களுக்கு முற்றிலும் புறம்பான கதையைத்தான் களநிலவரம் வெளிப்படுத்துகிறது. இன்னும் இரண்டே வாரங்களில் தேர்தல் நடக்க இருப்பதையொட்டி மக்களின் மனநிலையை அறிய பயணப்பட்டோம். 

பேருந்து நிலையத்தில் தேர்தல் கூட்டத்துக்குச் செல்வதற்காகக் காத்திருக்கும் கரைவேட்டிகள், `சாமி சொல்லும் கட்சிக்கு எங்கள் ஓட்டு’ என்பவர்கள், டாஸ்மாக் நேரம் மாற்றப்பட்டதால் மதிய வேளைகளை ஆசுவாசமாகப் பாட்டில்களுடன் கழிக்கும் குடிமகன்கள், இளநீர் விற்பவர்கள், பூ விற்பவர்கள், கூழ் விற்பவர்கள், மீன் வியாபாரிகள், மீனவர்கள், எத்தனை ஆட்சிகள் மாறினாலும் இன்னமும் தங்கள் குடிசைகள் மாறவில்லை என்று புகார் கூறிய இருளர்கள் எனப் பலதரப்பட்ட மக்களைச் சந்திக்க முடிந்தது.  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அத்தனை மக்களுக்கும் இலை, சூரியன் தவிர, பெரிதாக வேறு எதுவும் தேர்தல் சின்னங்கள் தெரியவில்லை என்பதுதான் நிதர்சனம். சாதிவாரி ஓட்டுகள் பிரியும் இடங்களில் மட்டும் சிலர் தங்களை 'மாம்பழ ஆதரவாளர்கள்’ என்கிறார்கள். தி.மு.க - அ.தி.மு.க. என்றால் என்ன என்று புரியாத இடங்களில்கூட இரட்டை இலையும் சூரியனும் சென்று சேர்ந்திருக்கிறது. 50 ஆண்டுக்கால திராவிட ஆட்சியின் சாதனையாகத் தங்கள் கட்சியின் சின்னங்களை மக்கள் மனதில் ஆழப்பதிய வைத்ததையும் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். சின்னங்களையொட்டியும் கட்சிகளின் வெற்றிவாய்ப்புக் கணிக்கப்படும் நிலையில் டார்ச் லைட்டு, பரிசுப்பெட்டி, பானை, விவசாயி ஆகிய சின்னங்கள் இவ்வளவு குறிகிய காலத்தில் சூரியன் அல்லது இலை போல மக்களிடம் சென்று சேருமா என்பது கேள்வியே? தேர்தல் கூட்டணிகள் பற்றியெல்லாம் அறியாமையில் இருக்கும் மக்கள், ``தாமரைக்குத் தாங்கள் எப்போதுமே வாக்களித்ததில்லை. ஆனால், வழிவழியாகத் தாங்கள் இரட்டை இலை ஆதரவாளர்கள்’’ என்கிறார்கள். இத்தனை ஆண்டுகளாகத் தமிழகத்தில் மலர முடியாத தாமரை, இரட்டை இலையை இறுகப் பற்றிக்கொண்டு களமிறங்குவதற்கு இதுவும் ஒருவகையில் காரணம். காங்கிரஸ் கட்சிக்குச் சுதந்திரப் போராட்டம் இன்னும் கைகொடுத்துக் கொண்டிருப்பதால், பி.ஜே.பி-யைப்போலத் தங்கள் கட்சியை மக்களிடம் பரிச்சயம் செய்ய வேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை. ஆனாலும், கைச்சின்னத்துக்கு ஓட்டு இல்லை என்று மறுக்கும் உதய சூரியன் ஆதரவாளர்களையும் சந்திக்க நேர்ந்தது.   

உழைப்பவர்களில் பலர் பெண்களாகவே இருந்ததும், அவர்களில் முக்கால் சதவிகிதம் பேர் இந்தத் தேர்தலில் ஜெயலலிதா இல்லாததைப் பற்றி ஏக்கத்துடன் அங்கலாய்த்ததையும் எவ்வித மாற்றுக் கருத்தும் வாதப் பிரதிவாதங்களும் இல்லாமல் முன்வைக்க வேண்டியிருக்கிறது. கடந்த ஐந்தாண்டுக் காலத்தில் மிக முக்கியப் பிரச்னையாகப் பார்க்கப்பட்டது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு. எண்ணற்ற குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானதும் அதனால் இறந்ததும் கடந்த ஐந்தாண்டுக் காலத்தில் அதிகம். வெறும் நான்கைந்து ஆண்கள் 150-க்கும் மேற்பட்ட பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியிருக்கும் பொள்ளாச்சி சம்பவங்கள் போன்ற பயங்கரத்தை ஆட்சியில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டிருக்கிறார். அதே சமயம் எந்தத் தேர்தல் அரசியல் கட்சிகளின் அறிக்கையிலும் அது பற்றிய இம்மியளவு அதிர்வலைகூட இல்லை. இதே சம்பவத்தை ஒரு பெண் தலைமை எப்படிக் கையாண்டிருக்கும் என்கிற கேள்வி நமக்கு இருக்கிறது.

அது நாங்கள் சந்தித்த மக்களிடமும் எதிரொலித்தது, ``அந்தம்மா இருந்தப்போ பொம்பளைங்க எங்களுக்குப் பாதுகாப்பு ஓரளவாச்சும் இருந்துச்சு. இப்போதான் தினம் ஒரு செய்தி பார்க்கறீங்களே! எங்க பிள்ளைங்களைத் தனியா விடவே பயமா இருக்கு. இதுல யாரை நம்பி நாங்க ஓட்டுப்போட?’’ என்றார் கைக்குழந்தையுடன் நின்றுகொண்டிருந்த ஒரு பெண்மணி. 

``அந்த அம்மாவுக்காகவே இரட்டை இலையை ஆதரிச்சோம்” என்ற பெண்கள், ``இந்தத் தேர்தலிலும் ‘அம்மா’வுக்காகவே இரட்டை இலையை ஆதரிக்கிறோம்’’ என்றார்கள். ``எங்க குடும்பத்தோட கஷ்டங்களை ஐயாவைத் தவிர யாரு கேட்டாங்க” என்று கருணாநிதியைப் பற்றிப் பேசி கண்ணீர் சிந்தினார்கள் சிலர். இதில், இன்னும் சிலருக்கு, இருவரும் இறந்த செய்தியே எங்கள் வழியாகத்தான் சென்று சேர்ந்தது. ”திராவிடக் கட்சிகள் இலவசங்களைத் தந்து ஏமாற்றிவிட்டன” என எழும் தேர்தல் பிரசாரங்களுக்கு இடையே, “அந்தம்மா வந்து இலவச மிக்ஸி - கிரைண்டர் கொடுத்தாங்க, அந்த அப்பா வந்து இலவசமா டிவி கொடுத்தாரு. படிப்பறிவில்லாத எங்களுக்கு எங்களோட பிள்ளைகளைப் படிக்க வைக்கவாச்சும் அவங்க செஞ்சதெல்லாம் ஏதோ ஒரு வகையில உதவியா இருந்துச்சு. இனிமே அதுமாதிரி யாரை நாங்க நம்ப முடியும்? இந்தத் தேர்தல்ல யாருமே அப்படித் தெரிஞ்ச முகம் இல்லையே” என்ற இருளர் இனப்பெண் ஒருவரின் கேள்வியில் நியாயம் இருப்பதாகவே தோன்றியது. நம்புங்கள், ஒருவர் ‘ஒம் பன்னீர்செல்வம்’ என்கிற பெயரிலான தமிழக முதல்வரைப் பற்றி நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தார். திராவிடக் கட்சிகளிடம் இத்தகைய நம்பிக்கையை மக்கள் வைத்திருந்தாலும் ஜெயலலிதா மரணப்படுக்கையில் இருந்தபோது அவர் எதிர்த்த மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புத் திட்டத்துக்காகவும் உதய் மின் (UDAY) திட்டத்துக்காகவும் தமிழக மக்களின் வாழ்வுப் பாதுகாப்பை விலை பேசிய `இரட்டைக் குழல் துப்பாக்கிகள்’ அவர் இறந்து இரண்டாண்டுகளுக்குப் பிறகு, மக்கள் பாதுகாப்பைப் பற்றிச் சிந்திப்பார்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பது நேர விரயம்.

37 தொகுதிகளிலும் மொத்தமாக வெற்றியை அள்ளிய ஜெயலலிதா இருந்திருந்தால், இந்த முறையும் அதே நம்பிக்கையுடன் தனித்துத்தான் நின்றிருப்பார். அதே அ.தி.மு.க கூட்டணியில் இருக்கும் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் பொருளாளர் பிரேமலதா பத்திரிகைச் சந்திப்பு ஒன்றில் பேசுகையில், “கடந்த முறை 37 பேர் நாடாளுமன்றத்தில் இருந்தாங்க. ஆனா, தனிச்சு இருந்ததால தமிழகத்துக்கான எந்த நன்மையும் பெற முடியலை” என ஜெயலலிதாவின் முடிவைத் தவறு என்று பேசினார். ‘அம்மா வழி, அம்மா வழி’ என்றவர்கள் அதற்கான எதிர்வினை எதுவும் ஆற்றவில்லை. பிரேமலதா குற்றம் சொன்னதுபோல நன்மை பெற முடியாவிட்டாலும் நாடாளுமன்றத்தில் தன்மானத்தோடு நீட் தேர்வு உட்பட தனது தேவைகளுக்காகக் குரல்கொடுத்தது தமிழகம். ஆனால், இனிவரும் ஆண்டுகளில் அப்படிச் சுயமாகக் குரல்கொடுப்பது சாத்தியமா? மாநிலங்களில் இருந்துகொண்டு மத்தியில் பிரதமர்களை முடிவுசெய்த காலம்போய், மத்தியில் இருப்பவர்கள் மாநிலத் தலைமைகளில் ஆதிக்கம் செய்வது அப்பட்டமானதாகி வருகிறது. இருதலைவர்களும் இல்லாத வெற்று நாற்காலிகள் சாட்சியமாகத் தமிழகத்தின் தன்மானத்தின் மீதுதான் தற்போதைய கூட்டணி பேரமும் முடிந்திருக்கிறது. சுயமரியாதை மண்ணின் சுயஉரிமைக் குரல்கள் காப்பாற்றப்பட வேண்டியது காலத்தின் தேவை.