Published:Updated:

` தேர்தல் அறிக்கையில் எங்களை மறந்துவிட்டீர்கள்!' - கனிமொழியை கலங்க வைத்த மீனவர்கள்

` தேர்தல் அறிக்கையில் எங்களை மறந்துவிட்டீர்கள்!'  - கனிமொழியை கலங்க வைத்த மீனவர்கள்
` தேர்தல் அறிக்கையில் எங்களை மறந்துவிட்டீர்கள்!' - கனிமொழியை கலங்க வைத்த மீனவர்கள்

நீங்கள் எங்களுடன்தான் இருக்கிறீர்கள். அதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால், தி.மு.க வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் எங்களுக்கென்று எந்த வாக்குறுதிகளும் கொடுக்கப்படவில்லை. வழக்கம்போல, கச்சத்தீவை மீட்போம் என்பன உட்பட சில சம்பிரதாய வாக்குறுதிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.

தி.மு.க தேர்தல் அறிக்கையில், புறக்கணிக்கப்பட்ட விஷயங்களை கனிமொழியிடம் சுட்டிக் காட்டியுள்ளனர் மீனவ அமைப்பின் பிரதிநிதிகள் சிலர். `நாங்கள் எப்போதும் உங்களுடன் இருப்போம். இந்தத் தவற்றைச் சரிசெய்ய முயல்கிறேன்’ எனக் கூறியிருக்கிறார் தூத்துக்குடி தி.மு.க வேட்பாளர் கனிமொழி. 

நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தில், ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் தீவிரம் காட்டிவருகின்றன. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், எடப்பாடி பழனிசாமியும் ஸ்டாலினும் தொகுதிகளுக்குள் வலம் வந்துகொண்டிருக்கின்றனர். தூத்துக்குடியில் தி.மு.க வேட்பாளர் கனிமொழியும் பா.ஜ.க வேட்பாளரான தமிழிசையும் கடும் விமர்சனங்களை முன்வைத்து பிரசாரம் செய்துவருகின்றனர். இந்த நிலையில், கடந்த வாரம் கனிமொழியைச் சந்தித்துப் பேசியுள்ளனர் பாரம்பர்ய மீனவர் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் சிலர். அப்போது, தி.மு.க தேர்தல் அறிக்கையில் மீனவர்கள் நலன் தொடர்பாகப் பதிவு செய்யப்படாத சில விஷயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளனர். 

பாரம்பர்ய மீனவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சின்னதம்பியிடம் பேசினோம். ``நாங்கள் சென்ற நேரம், 102 டிகிரி அளவுக்குக் கடுமையான காய்ச்சலில் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார் கனிமொழி. எங்களிடம் பேசிய அவர், `நாங்கள் எப்போதும் உங்களுடன் இருக்கிறோம்’ என்றார். `நீங்கள் எங்களுடன்தான் இருக்கிறீர்கள். அதை நாங்கள் மறுக்கவில்லை. நீங்கள் கொண்டுவந்த திட்டங்கள் எல்லாம் எங்களுக்குப் பயன் தந்துகொண்டிருக்கின்றன. ஆனால் தி.மு.க வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், எங்களுக்கென்று எந்த வாக்குறுதிகளும் கொடுக்கப்படவில்லை. வழக்கம்போல, கச்சத்தீவை மீட்போம் என்பன உட்பட சில சம்பிரதாய வாக்குறுதிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. எங்களுக்கான திட்டங்கள் எதையும் நீங்கள் அறிவிக்காதது வருத்தத்தைக்கொடுக்கிறது. அதைப் பதிவுசெய்ய வேண்டியது கட்டாயம் என்பதால் உங்களைச் சந்திக்க வந்தோம்’ என்றோம். இதை எதிர்பார்க்காத கனிமொழி, `தவறு நடந்துவிட்டது. மன்னித்துவிடுங்கள். உங்கள் கோரிக்கைகளை யாரும் எங்களிடம் வந்து சொல்லவில்லை. நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்லுங்கள்’ என்றார். 

இதன் பிறகு, அவரிடம் மீனவர் நலன் தொடர்பாக 11 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தோம். பின்னர் பேசும்போது, `விவசாயிகளுக்கென்று கூட்டுறவு வங்கி இருக்கிறது. இந்த வங்கியால் மீனவர்களுக்கு எந்தவித நன்மையும் நடப்பதில்லை. விசைப்படகு, ஆழ்கடல் மீன்பிடிப் படகு, மீன் வலை போன்றவற்றை வாங்குவதற்கான கடன்களை மீனவர் வங்கி ஒன்றைக்கொண்டு வந்தால் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள வசதியாக இருக்கும்’ என்றோம். அவரும் ஏற்றுக்கொண்டு, `மீனவர் வங்கி என்ற திட்டத்தை இரண்டாம் கட்டத் தேர்தல் அறிக்கையில் கொண்டுவருகிறோம்’ என்றார். அவர் கூறியதுபோலவே, தேர்தல் அறிக்கையிலும் இடம்பெறச் செய்தார். இதைப் பற்றி பெரம்பலூரில் நடந்த பொதுக்கூட்டத்திலும் பேசியிருக்கிறார் ஸ்டாலின். எங்களுடைய சந்திப்பு பயனுடையதாக மாறியதில் மகிழ்ச்சி’’ என்றார் உற்சாகத்துடன். 

ராமநாதபுரத்தில் தேர்தல் புறக்கணிப்பு? 

கனிமொழி சந்திப்பு கொடுத்த உற்சாகம் ஒருபுறம் இருந்தாலும், ராமநாதபுரம் தொகுதியில் தேர்தல் புறக்கணிப்பை செயல்படுத்துவதற்குத் தயாராகிவருகிறார்கள் மீனவர் அமைப்பின் பிரதிநிதிகள் சிலர். இதைப் பற்றி நம்மிடம் பேசிய மீனவர் சங்கப் பிரமுகர் ஒருவர், ``கடந்த பொங்கல் அன்று கடலுக்கு மீன் பிடிப்பதற்காக ராமேஸ்வரம் மீனவர்கள் சென்றனர். அவர்கள் சென்ற மரப்படகை, 100 மீட்டர் நீளமுள்ள இலங்கைக் கடற்படையின் இரும்புப் படகு மோதித் தாக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில், முனியசாமி என்ற மீனவர் கொல்லப்பட்டார். தேர்தல் நேரத்தில் சர்ச்சை ஆகிவிடக் கூடாது என்பதால், அவரது உடலைக்கொண்டு வந்து புதைத்துவிட்டனர். இந்தச் சம்பவத்தில் 2 மாணவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் ஒரு திட்டமிட்ட கொலைவெறித் தாக்குதல். ஆனால், இலங்கையின் இரும்புப் படகை நமது மீனவர்கள் தாக்கியதாகப் பொய்யாகப் புகாரைப் பதிவுசெய்துள்ளனர். நாளை இந்த வழக்கின் வாய்தா வரவிருக்கிறது. மாணவர்களை விடுவிப்பதற்கு அரசு எந்த முயற்சியும் செய்யாவிட்டால், தேர்தல் புறக்கணிப்பை முன்னெடுக்க இருக்கிறோம். மீனவர் சங்கங்களை நம்பாமல் நேரடியாகக் களமிறங்க இருக்கிறோம். இந்தப் போராட்டம் ஆளும்கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தும். அந்தளவுக்கு மீனவ மக்கள் கடும் கொந்தளிப்பில் இருக்கின்றன’’ என்றார் கொதிப்புடன். 
 

அடுத்த கட்டுரைக்கு