Published:Updated:

` ராமதாஸை வளைத்ததன் பின்னணியில் 3 விஷயங்கள்!'  - எடப்பாடி மீது பாயும் வன்னிய அமைப்புகள்

` ராமதாஸை வளைத்ததன் பின்னணியில் 3 விஷயங்கள்!'  - எடப்பாடி மீது பாயும் வன்னிய அமைப்புகள்
` ராமதாஸை வளைத்ததன் பின்னணியில் 3 விஷயங்கள்!'  - எடப்பாடி மீது பாயும் வன்னிய அமைப்புகள்

கடந்த மாதம் 8-ம் தேதி சட்டமன்றம் கூடும்போது ராமசாமி படையாட்சியார் படத்திறப்பு நடப்பதாக இருந்தது. அதைத் தடுத்து நிறுத்துவிட்டார்கள். கடலூரில் நிறுவப்பட்டுள்ள படையாட்சியார் மணிமண்டபத்தைத் தேர்தலுக்கு முன்னரே திறக்க வேண்டியதாக இருந்தது. அதையும் தடுத்து நிறுத்திவிட்டனர்.

பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராக அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார்கள் வேல்முருகன் உள்ளிட்ட வன்னிய சமூக தலைவர்கள். ` வன்னியர் சொத்து வாரியம், படையாட்சி மணிமண்டபம் ஆகியவற்றைக் காட்டியே கூட்டணிக்குள் ராமதாஸைக் கொண்டு வந்தார் எடப்பாடி பழனிசாமி' என்கிறார்கள் கூட்டத்தில் பங்கேற்றவர்கள். 

நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் பா.ம.கவுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துப் பேசி வருகிறார் மு.க.ஸ்டாலின். அரக்கோணம், சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியில் நடந்த பிரசாரப் பொதுக்கூட்டத்தில் வேட்பாளர் அசோகனை ஆதரித்துப் பேசிய ஸ்டாலின், ` அதிமுக-பா.ம.க கூட்டு சேர்ந்ததில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. மருத்துவர் ராமதாஸ் குறித்து உங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை.  தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் படம் வைக்கக்கூடாது, அவர் மக்களுக்கு நன்மை செய்துள்ளாரா எனக் கேள்வி எழுப்பியவர் அவர். அப்படி இருக்கையில் இன்று, கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றனர். இதிலிருந்தே பேரத்தின் அடிப்படையில் தான் இந்தக் கூட்டணி எனத் தெரிகிறது. மேலும், அ.தி.மு.க மோடியின் பினாமி அரசு, எடப்பாடி ஆட்சியின் திட்டங்களை விளக்கத் தயாரா எனவும் மிக மோசமாக விமர்சித்தவர். வன்னியர் சங்க சொத்துகள் மீதான முறைகேடு வழக்கில் இருந்து தப்பிக்கவே, பா.ம.க-அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்துள்ளது. வரும் தேர்தலில் மத்திய, மாநில அரசுகளை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். தி.மு.க-வை ஏளனம் செய்யும் தகுதி பா.ம.க-வுக்கு இல்லை' என்றார் காட்டத்துடன். 

வன்னியர் சங்க சொத்துகளில் ராமதாஸின் செயல்பாடு குறித்து ஸ்டாலின் பேசியதை வன்னிய சங்கங்கள் வரவேற்றுள்ளன. இதுதொடர்பாக, நேற்று சிந்தாரிப்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் வன்னிய சமுதாயத் தலைவர்கள் சிலர், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் அணிதிரண்டுள்ளனர். இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் சி.என்.ராமமூர்த்தி, இறைவன், உ.பலராமன், எஸ்.எஸ்.செல்வராஜ் உட்பட அனைத்து வன்னிய அமைப்புகளின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், பா.ம.க-வின் செயல்பாடுகளை விமர்சித்து 7 தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர். 

அவை பின்வருமாறு: 

1. தமிழகத்தில் 20 மக்களவைத் தொகுதிகள், 18 சட்டமன்றத் தொகுதிகள் ஆகியவற்றில் 10 தொகுதிகளில் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கின்ற சமுதாயமாக வன்னியர்கள் இருக்கிறார்கள். சட்டமன்ற இடைத்தேர்தல் மூலம் ஆட்சியை நிர்ணயம் செய்கின்ற சூழ்நிலை உருவாகும். அப்படியிருக்கையில், தேர்தல் அறிக்கையில் எந்தவொரு அரசியல் கட்சியும் வன்னியர்களின் கோரிக்கையை பற்றிக் குறிப்பிடாதது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அதேநேரத்தில் சமுதாயக் கட்சியின் (பா.ம.க) தேர்தல் அறிக்கையில்கூட ஒரு வரிகூட இடம் பெறாதது மிகுந்த வேதனை அளிப்பதோடு கடும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். 

2. வன்னியர் சமுதாயத்துக்கு உள்ஒதுக்கீடு மூலம் தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று 2009-ம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. நீதிமன்றம் அரசுக்கும் உத்தரவு வழங்கியது. இதைத்தொடர்ந்து 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், திண்டிவனத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய தி.மு.க தலைவர் கருணாநிதி, ` நான் ஆட்சிக்கு மீண்டும் வந்தால் தனி இடஒதுக்கீடு வழங்குவேன்' என அறிவித்தார். ஆனால், அ.தி.மு.க ஆட்சியில் அமர்ந்தது. இந்த அரசு அமைந்து 8 வருடங்கள் ஆகியும் இதுவரையில் நீதிமன்றத்தின் ஆணையைச் செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ளது. 

3. இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 2 லட்சமும் மாதம்தோறும் 3,000 பென்ஷன் வழங்கவும் உத்தரவிட்டார் கருணாநிதி. இப்போது வரையில் அந்த 3,000 ரூபாயே வழங்கப்பட்டு வருகிறது. இதை 10,000 ரூபாயாக உயர்த்த வேண்டும். அக்குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வீடும் வழங்க வேண்டும். அவர்களுடைய தியாகத்தை போற்றும் வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் ‘இடஒதுக்கீட்டு தியாகிகள் மணிமண்டபம்‘ அமைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். 

4. வன்னிய சமுதாயத்தின் முன்னோர்கள் சமுதாய நலனுக்காக பல்லாயிரம் கோடி மதிப்புள்ள சொத்துகளை உயிலாக எழுதி வைத்துச் சென்றனர். இதனை ஒருங்கிணைத்து அரசே பராமரிக்கும் வகையில் வன்னிய பொதுச்சொத்து நல வாரியம் அமைக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததின் பெயரில் மறைந்த வாழப்பாடி ராமமூர்த்தியின் முயற்சியால் வன்னியர் பொதுச் சொத்து நல வாரியத்தை 2009ம் ஆண்டு அமைத்தார் கருணாநிதி. அப்போது, சமுதாயத்தின் பெயரில் அரசியல் கட்சி நடத்துபவரால் அவ்வாரியத்துக்கு சட்ட அங்கீகாரம் கிடைக்காமல் கிடப்பில் போடப்பட்டது. அமைச்சர் சி.வி. சண்முகத்தின் பெருமுயற்சியால் இவ்வாரியத்துக்கு சட்ட அங்கீகாரம் கிடைக்கப்பெற்றும் இப்போது ஏற்பட்ட கூட்டணியால் அது செயல்படுமா என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது. இது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. வன்னியர் சொத்துகளை யார் அபகரித்திருந்தாலும், வன்னியர்களின் நன்கொடை மூலம் அறக்கட்டளைகள் நடந்து வருகின்றன. அவற்றையும் வன்னியர் பொதுச் சொத்து நலவாரியத்தில் இணைக்க வேண்டும் என அரசைக் கேட்டுக் கொள்கிறோம். 

5. சமுதாயத்தின் வாக்கு வங்கியைக் காட்டி 7 சீட்டுகளைப் பெற்று, வெறும் 3 வன்னியர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கியிருப்பது வேதனையிலும் வேதனை. அதோடு மட்டுமல்லாமல், அ.தி.மு.க-வில் இருந்த மூன்று எம்.பி-க்களான திருத்தணி ஹரி, ஸ்ரீபெரும்பத்தூர் கே.என். ராமசந்திரன், கடலூர் அருள்மொழி தேவன் ஆகியோர்களது வாய்ப்புகளைப் பறித்திருப்பது கண்டனத்திற்குரியது. 

6. வன்னிய சமூகத்தின் தலைவர் ராமசாமி படையாட்சியாருக்குக் கடலூரில் மணிமண்டபம் திறக்கும் தறுவாயில் இருந்தும் அதைத் தடுத்து நிறுத்தியது யார்? அவருடைய படம் சட்டமன்றத்தில் திறக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வாக்குறுதியளித்தும் படம் திறக்கப்படாததற்கு யார் காரணம் என்பதையும் மக்கள் நன்கு அறிவார்கள். வன்னியர்களின் கோரிக்கைகளையெல்லாம் போராடி, வாதாடிப் பெற்றால்கூட அதையெல்லாம் தடுக்கின்ற நபர்கள் யார் என்பதையும் இந்த தேர்தல் மூலம் மக்கள் தோலுறுத்திக் காட்டுவார்கள்'

எனக் காட்டமாக விமர்சித்துத் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர். 

வன்னியர் சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சி.ஆர்.ராஜனிடம் பேசினோம். `` ராமதாஸின் செயல்பாடுகள் குறித்துத்தான் கூட்டத்தில் விவாதித்தோம். கடந்த மாதம் 8-ம் தேதி சட்டமன்றம் கூடும்போது ராமசாமி படையாட்சியார் படத்திறப்பு நடப்பதாக இருந்தது. அதைத் தடுத்து நிறுத்துவிட்டார்கள். கடலூரில் நிறுவப்பட்டுள்ள படையாட்சியார் மணிமண்டபத்தைத் தேர்தலுக்கு முன்னரே திறக்க வேண்டியதாக இருந்தது. வன்னியர் சமூக வாக்குகளை வாங்குவதற்காகத்தான் திறப்புவிழாவை நடத்த இருந்தார் எடப்பாடி பழனிசாமி. அதையும் நிறுத்திவிட்டனர்.

பொதுச் சொத்து நல வாரியத்தைக் கருணாநிதி இரண்டு முறை கொண்டு வந்தார். இரண்டு முறையும் தி.மு.க-வுடன் கூட்டணிக்குப் போனதால், பொதுநல வாரியத்தைக் கொண்டு வராமல் தடுத்து நிறுத்திவிட்டது பா.ம.க. படையாட்சியார் மண்டபத்தைத் திறப்பதில் ராமதாஸுக்கு உடன்பாடில்லை. அவரைத் தவிர வேறு யாரும் பெயர் வாங்கிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். அ.தி.மு.க-வுடன் கூட்டணிக்குச் சென்றதற்கு இதுதான் மிக முக்கியமான காரியம்" என்றார் கொதிப்புடன்.  

இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ எதிரொலி மணியனிடம் பேசினோம். `` அரசியலுக்காக இதுபோன்ற விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். இவையெல்லாம் நம்பக் கூடிய செய்திகளாக இல்லை. முன்பு மற்றவர்கள் இதேபோன்ற குற்றச்சாட்டை முன்வைத்தபோது, எங்களுடன்தானே வேல்முருகனும் இருந்தார். அப்போது இவர் எதையாவது பேசியிருக்கிறாரா. தேர்தல் நேரத்தில் இவர் செய்கின்ற செயல்கள் எதுவும் மக்களிடம் எடுபடப் போவதில்லை. பா.ம.க ஒரு சாதிரீதியான கட்சி என்ற முத்திரையே மறைந்து போய்விட்டது. அந்த வளையத்தை விட்டு நாங்கள் வெளியே வந்துவிட்டோம். இன்று அவர் இந்த வளையத்தில் சிக்கிக் கொண்டாரோ எனத் சந்தேகப்பட வேண்டியதாக இருக்கிறது. நாங்கள் நிறுத்தியிருக்கும் 7 வேட்பாளர்களில் 4 பேர் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஒரு கிறிஸ்துவ நாடார், வேளாளக் கவுண்டர், தலித் என எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் 50 சதவிகிதத்தை மாற்று சமூகத்துக்குக் கொடுத்திருக்கிறோம். மற்றபடி, வேல்முருகனின் குற்றச்சாட்டுகளில் எந்தவித உண்மையும் இல்லை" என்றார் நிதானமாக. 
 

பின் செல்ல