Published:Updated:

பொள்ளாச்சி விவகாரம்: அமைச்சர் தங்கமணிக்கு கொங்கு ஈஸ்வரன் சவால்?

அமைச்சர் தங்கமணியும், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரனும் மாறி மாறி சவால் விட்டு வருவது கொங்கு மண்டலத்தில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி விவகாரம்: அமைச்சர் தங்கமணிக்கு கொங்கு ஈஸ்வரன் சவால்?
பொள்ளாச்சி விவகாரம்: அமைச்சர் தங்கமணிக்கு கொங்கு ஈஸ்வரன் சவால்?

மைச்சர் தங்கமணியும், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரனும் மாறிமாறிச் சவால்விட்டு வருவது கொங்கு மண்டலத்தில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க சார்பில் அதன் கூட்டணிக் கட்சியான கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் வேட்பாளரான ஏ.கே.பி.சின்ராஜும், அ.தி.மு.க சார்பில் காளியப்பனும் போட்டியிடுகின்றனர். கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரனும், அமைச்சர் தங்கமணியும் தீவிர ஓட்டுச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், இவ்விருவரும் ஒருவருக்கொருவர் சவால்விட்டு வருகின்றனர். திருச்செங்கோட்டில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய ஈஸ்வரன், ``முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் என்னுடன் நேரடியாக மேடையில் விவாதிக்கத் தயாரா?" என்று சவால் விடுத்தார். ``அச்சவாலை நான் ஏற்றுக்கொள்கிறேன். எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நான் விவாதிக்கத் தயார்" என்றார், அமைச்சர் தங்கமணி. அதுமட்டுமல்லாமல் தி.மு.க ஆதரவு வேட்பாளர் சின்ராஜ் ராசிபுரத்தில் உள்ள கொங்கு மண்டபத்தில் முறைகேடு செய்தது உண்மை என்றும் கூறினார்.

இதைத் தொடர்ந்து நாமக்கல்லில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய ஈஸ்வரன், ``பொள்ளாச்சி விவகாரத்தில் காவல் துறை ஆளும் கட்சியான அ.தி.மு.க-வுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது. சூலூரில் சட்டமன்ற உறுப்பினர் இறந்த சம்பவத்தின் போது, அங்கு வந்திருந்த தமிழக முதல்வரை, ஜெயராமன் மற்றும் அவரது மகன் இருவரும் தனிமையில் ஒரு மணி நேரம் சந்தித்துப் பேசினர். இதில் என்ன ரகசியம் ஒளிந்துள்ளது என்று தெரியவில்லை. மத்தியில் ஆளும் பி.ஜே.பி. தேர்தல் நேரத்தில்தான், எதிர்க்கட்சிகள் வீட்டில் வருமானவரித் துறை சோதனை, சி.பி.ஐ. ரெய்டு என அதிகாரிகளைப் பயன்படுத்தி வருகிறது. இவற்றையெல்லாம் பொதுமக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர். விரும்பாத பி.ஜே.பி-யுடன் அ.தி.மு.க-வினர் கூட்டணி சேர்ந்துள்ளனர்.

அ.தி.மு.க-வினர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் வைத்து வாழ்த்து பெறாதது ஏன்? பி.ஜே.பி-யுடன் கூட்டணி சேர்ந்ததால் ஜெயலலிதா நினைவிடத்தில் செல்லவே அ.தி.மு.க-வினர் பயப்படுகின்றனர். கடந்த 2011-ம் ஆண்டுத் தேர்தலில் நதிநீர் இணைப்பு, வேலைவாய்ப்பு உருவாக்குவோம் எனப் பல்வேறு கோரிக்கைகள் அளித்ததின் பேரில் கூட்டணி வைத்தோம். ஆனால், அவர்கள் அளித்த கோரிக்கை எதனையும் நிறைவேற்றவில்லை. மாறாக, தொழிலைப் பாதிக்கும் வகையில் வால்மார்ட் அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களுக்கு பி.ஜே.பி. ஆதரவளித்தது. இதனால் சிறு வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில், லாரித் தொழிலில் அவர்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். இதன் தாக்கம் நிச்சயம் தேர்தலில் எதிரொலிக்கும். இவர்களை ஜெயலலிதாவின் ஆவிகூட சும்மாவிடாது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தில் ஆளுங்கட்சியினரின் தலையீடு இருப்பதாகக் கூறினேன். பொதுமேடையில் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன். இடத்தையும், நேரத்தையும் நான் தேர்வுசெய்கிறேன். அமைச்சர் தங்கமணி நேரம் கொடுக்க வேண்டும். அதுவும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு" என்று ஆவேசமாகப் பேசினார்.

இதுபற்றி பேசிய அமைச்சர் தங்கமணி, ``ராசிபுரத்தில் உள்ள கொங்கு மண்டபத்தின் வரவு - செலவுக் கணக்கைக் காட்டாமல் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாகத் தி.மு.க. ஆதரவு வேட்பாளர் சின்ராஜ் ஏமாற்றி உள்ளார். இதுபற்றி என்னுடன் ஈஸ்வரன் பேசத் தயாரா, அப்போதே பொள்ளாச்சி சம்பவத்தையும் விவாதிக்கவும் தயார். எங்கும், எப்போதும் நான் தயார்" என்று அதிரடியாக பதிலளித்தார்.

``சின்ராஜ் முறைகேடு செய்தாரா... இல்லையா என்பது குறித்து வரும் ஏப்ரல் 7-ம்  தேதி காலை 11 மணிக்கு ராசிபுரத்தில் உள்ள கொங்கு திருமண மண்டபத்தில் 1,900 பொதுக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் விவாதிக்கத் தயாராக இருக்கிறோம். அதில் அமைச்சர் பங்கேற்க வேண்டும். இல்லையென்றால், அமைச்சர் கூறும் தேதியில் விவாதிக்கத் தயார்" என்று ஈஸ்வரன் கூறினார்.

``நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க - அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு இடையே யார் வெற்றிபெறுவது என்பதில் பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. தி.மு.க - கொ.ம.தே.க கூட்டணியைப் பலவீனப்படுத்துவதற்காகவே தங்கமணி இதுபோன்ற குற்றச்சாட்டுகளை அதுவும் இச்சமயத்தில் கூறுகிறார்" என்கின்றனர், விஷயமறிந்த சில முக்கியப் புள்ளிகள். அமைச்சர் தங்கமணியும் ஈஸ்வரனும் ஒருவருக்கொருவர் மாறிமாறிச் சவால்விடுத்து வருவது, கொங்கு மண்டலத்தில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.