Published:Updated:

``வேண்டுமென்றே பொய் வழக்கு போடுகிறது அரசாங்கம்!" - மே 17 இயக்கம்

``வேண்டுமென்றே பொய் வழக்கு போடுகிறது அரசாங்கம்!" - மே 17 இயக்கம்
``வேண்டுமென்றே பொய் வழக்கு போடுகிறது அரசாங்கம்!" - மே 17 இயக்கம்

க்களவைத் தேர்தலை முன்னிட்டு மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது நான்கு பொய் வழக்குகளை போலீஸார் பதிவுசெய்திருப்பதாக அந்த இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் லேனா குமார் பேசுகையில், ``மக்களவைத் தேர்தல் அறிவித்தபிறகு, திருமுருகன் காந்திமீது 4 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஏப்ரல் 29-ம் தேதி காவிரி உரிமைக்காகத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்புச் சார்பாக சேப்பாக்கத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பேசியதற்காக வேல்முருகன் மற்றும் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதே போன்று காவிரி உரிமைக்காகக் கடந்த ஆண்டு மே 2-ம் தேதி எங்களுடைய  இயக்கம் சார்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் திருமுருகன் காந்தியும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகனும் கலந்துகொண்டு பேசினர். அதற்காக அவர்கள் இருவர்மீதும் இரண்டாவது வழக்கைப் பதிவுசெய்துள்ளனர். இந்த இரண்டு வழக்குகளுக்கான நிகழ்வுகள் நடந்து ஒரு வருடம் ஆகிறது. ஒரு வருடத்துக்குப் பிறகு வழக்குகளைப் பதிவுகளைச் செய்கிறபோதே மத்திய - மாநில அரசுகளின் திட்டம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. 

இது ஒருபுறம் என்றால், காவல் துறையின் அனுமதியுடன் நடத்திய போராட்டத்தில் சமூகச் செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போனது குறித்து கேள்வி எழுப்பியதற்காகத் திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம் ஒருங்கிணைப்பாளர் அருள்முருகன், தமிழர் விடியல் கட்சி ஒருங்கிணைப்பாளர் டைசன், மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி தோழர் பெரியசாமி ஆகிய நான்கு பேர் மீது வழக்குப் பதிவுசெய்துள்ளனர். மற்றொரு வழக்காக, புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா சார்பில் பதிலடி கொடுக்கப்பட்ட விவகாரத்தில், 350 பாகிஸ்தான் தீவிரவாதிகளைக் கொன்றுவிட்டதாக ஆதாரமற்ற பொய்யான தகவலைப் பிரதமர் மோடி அரசு பரப்புகிறது என்பதை அம்பலப்படுத்தி ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்ததற்காகத் திருமுருகன் காந்தி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இப்படிப் போராட்டம் நடத்தப்பட்ட நான்கு நிகழ்வுகளுமே அனைத்துத் தரப்பு மக்களும் பலமாக எதிர்த்துப் பேசப்பட்ட பிரச்னைகள். அப்படி இருக்கும்போது வேண்டும் என்றே பொய்யான வழக்குகளைப் பதிவுசெய்து, திருமுருகன் காந்தியை ஜெயிலில் அடைக்க முயற்சி செய்கிறார்கள்.  

முகிலன் காணாமல் போனதற்குக் காரணம் கேட்டால், அதற்கு எந்தப் பதிலும் கூறாமல், கேள்வி கேட்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்கின்றனர். அதேபோன்று ராணுவத் தாக்குதலில், 350 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகக்  கூறிய, மோடி அரசின் பொய்களை அம்பலப்படுத்தியதற்குத் திருமுருகன் காந்தி மீது வழக்குகளைப் போடுகிறார்கள். அப்படியென்றால், பொய் சொன்ன மோடிமீது என்ன வழக்குப் பதிவு செய்ய வேண்டும்?

`ஒரு ஜனநாயக நாட்டில் எல்லாத் துறைகளையும்போல ராணுவமும் கேள்விக்கு உள்ளாக்கப்பட வேண்டும். ராணுவத்தைக் கேள்வி எழுப்பவே கூடாது என்பது பாசிசம் ஆகும்' என இந்திய ராணுவத்தின் முன்னாள் லெப்டினென்ட் ஜெனரல் எச்.எஸ்.பனாக் தெரிவித்துள்ளார். அப்படி இருக்கும்போது, தனது செல்வாக்கை உயர்த்திக்கொள்ள பொய் சொல்லும் மோடி அரசாங்கத்தைக் கேள்வி எழுப்பக்கூடாதா? நியாயமான கருத்துரிமைகளைப் பேசினாலே வழக்கு என்றால், பொய் பேசி மக்களை ஏமாற்றும் உங்கள் மீது அல்லவா முதலில் வழக்குப் பதிய வேண்டும்? இதற்கெல்லாம் முக்கியக் காரணம், தேர்தலில் ஆளும் பி.ஜே.பி. மற்றும் அ.தி.மு.க கட்சிகளுக்கு எதிரான அலையை உருவாக்கிவிடுவார்கள் என்ற அச்சத்தில் இப்படியான அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். எனவே, இந்த அடக்குமுறைகளைக் கண்டு நாங்கள் அஞ்சப்போவதில்லை. அனைத்தையும் சட்டரீதியாக எதிர்கொள்வோம். திருமுருகன் காந்திமீது போடப்பட்ட வழக்குகள் மீது விரைவில் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெறுவோம்" என்றார். 

அடுத்த கட்டுரைக்கு